E-Pass for Kodaikanal: கொடைக்கானலுக்கு இ-பாஸ் கட்டாயம்; பிளாஸ்டிக் பாட்டிலுக்கு அபராதம் - மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை.!
வார இறுதி, விடுமுறை நாட்களில் கொடைக்கானலில் குவியும் மக்களின் வருகை மற்றும் வாகனங்களின் விபரங்களை மாவட்ட நிர்வாகம் ஒருங்கிணைக்க இ-பாஸ் நடைமுறையை அறிமுகம் செய்துள்ளது.
நவம்பர் 14, கொடைக்கானல் (Dindigul News): திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கொடைக்கானல் (Kodaikanal), மலைகளின் இளவரசியாக போற்றப்படுகிறது. இங்கு ஏராளமான உள்ளூர், வெளியூர், வெளிநாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகள் வந்து செல்வது வழக்கம். குறிப்பாக வார இறுதி நாட்கள், பண்டிகை விடுமுறை நாட்களில் மக்கள் கூட்டம் அலைமோதும். கொடைக்கானலில் உள்ள பேரிஜம் ஏரி, குறிஞ்சி ஆண்டவர் கோவில், கொடைக்கானல் நட்சத்திர ஏரி, குணா குகை, வெள்ளி அருவி, கும்பக்கரை அருவி, பூம்பாறை மலைக்கிராமம் உட்பட பல இடங்களுக்கு மக்கள் சென்று வருவார்கள்.
மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு:
இதனிடையே, வரும் நவம்பர் 18, 2024 க்கு மேல், 12 மீட்டருக்கு குறைவான நீளம் கொண்ட வாகனங்களே மலைப்பாதை வழியாக கொடைக்கானல் செல்ல அனுமதி வழங்கப்படும். 12 மீட்டருக்கு மேல், நீண்ட சேசிஸ் கொண்ட சரக்கு & பயணிகள் வாகனங்கள் அனுமதிக்கப்படாது என மாவட்ட நிர்வாகம் மற்றும் திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அதிகாரி (Dindigul RTO) அறிவிப்பு வெளியிட்டனர். Job Alert: திருப்பத்தூர் இளைஞர்களே ரெடியா.. மாபெரும் தனியார் வேலைவாய்ப்பு முகாம்.. விபரம் இதோ.!
இ-பாஸ் கட்டாயம்:
இந்நிலையில், கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகள் இணையதளம் வாயிலாக இ-பாஸ் பெற்று கொடைக்கானலுக்குள் வந்து செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. கொடைக்கானலுக்கு வந்து செல்லும் வாகனங்களுக்கு இ-பாஸ் நடைமுறை மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
பிளாஸ்டிக் பாட்டீலுக்கு தடை:
அதேபோல, பிளாஸ்டிக் தடையை மீறுவது கண்டறியப்படும் பட்சத்தில், பசுமை வரி அபராதமும் விதிக்கப்படும். அதன்படி, 5 லிட்டர் அளவுக்கு குறைவான தண்ணீர் பிளாஸ்டிக் பாட்டில்கள் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், அவை சோதனையின் போது கண்டறியப்பட்டால் அல்லது உபயோகம் செய்யப்படும்போது கொடைக்கானல் எல்லைக்குட்பட்ட பகுதியில் கண்டறியப்படும் பட்சத்தில், 5 லிட்டருக்கு குறைவான பிளாஸ்டிக் பாட்டில்களுக்கு தலா ரூபாய் 20 வீதம் அபராதம் விதிக்கப்படும். மேலும், தண்ணீர் பாட்டில்களும் பறிமுதல் செய்யப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
கொடைக்கானல் செல்வோர் இணையவழியில் இ-பாஸ் பதிவு செய்ய: https://epass.tnega.org/