Protect Eyes: தினமும் கண்களை பாதுகாக்க என்னென்ன செய்யலாம்?.. அசத்தல் ஸ்மார்ட் டிப்ஸ் இதோ.!
நமது உடலின் புத்துணர்ச்சி மற்றும் தொடர் இயக்கத்திற்கு நீர் எப்படி முக்கியமோ, அதனைப்போல உடல் உறுப்பான கண்களின் ஆரோக்கியத்திற்கும் நீர் அவசியம் ஆகும்.
அக்டோபர் 13 , சென்னை (Health Tips): நமது உடலில் முக்கிய உறுப்புகளில் ஒன்றாக இருப்பது கண். இதனை சரிவர கவனிக்காமல் இருந்தால், பின்னாட்களில் மிகப்பெரிய பிரச்சனை ஏற்படுவதற்கும் வாய்ப்புள்ளது. எங்கும் டிஜிட்டல், கணினிமயமாகிவிட்ட உலகில் செல்போன்களின் பயன்பாடு அதிகரித்துவிட்டது. இதனால் சிறியவர்கள் முதல், பெரியவர்கள் வரை பாரபட்சமின்றி கண்கள் சார்ந்த பிரச்சனைகளால் அவதிப்படுகின்றனர். நமது கண்களில் ஏற்படும் மாற்றங்களை தொடக்கத்தில் இருந்து கவனித்து, அதற்கேற்ப செயல்படுவதும் நன்மையை தரும்.
கண்களை இயற்கையாக பராமரிக்கும் முறைகள் குறித்து பலரும் சந்தேகங்கள் உள்ளன. அவை குறித்து இன்று விரிவாக காணலாம். கண்களின் ஆரோக்கியத்தை உணவுகளில் அதிகரிக்க முருங்கை கீரை, பொன்னாங்கண்ணி கீரை, மீன், முட்டை, கேரட், பப்பாளி, சர்க்கரை வள்ளிக்கிழங்கு, திராட்சை, ஆரஞ்சு போன்றவற்றை அவ்வப்போது உணவில் சுழற்சி முறையில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
நமது கைகளில் அழுக்கு, பாக்டீரியா, தூசி போன்றவை இருக்கும் என்பதால், கண்களை தொடும்போது அல்லது தேய்க்கும்போது கவனமாக இருக்க வேண்டும். கண்களில் தூசி விழுந்துவிட்டால் உடனடியாக அதனை தேய்க்கவும் கூடாது. இதனால் கண்களில் நுண்ணுயிரிகள் பரவும். ஆகையால் கைகளை அவ்வப்போது கழுவுவது நல்லது. Bike Car Accident: விதியை மறந்து அலட்சியமாக சென்றதால் நொடியில் நடந்த விபத்து; வாகன ஓட்டிகளே கவனம்.!
நமது உடலின் புத்துணர்ச்சி மற்றும் தொடர் இயக்கத்திற்கு நீர் எப்படி முக்கியமோ, அதனைப்போல உடல் உறுப்பான கண்களின் ஆரோக்கியத்திற்கும் நீர் அவசியம் ஆகும். ஆகையால், தேவையான அளவு நீரை கட்டாயம் குடிக்க வேண்டும். சூரியனில் இருந்து வெளியேறும் புறஊதா கதிர்கள் கண்களின் ஆரோக்கியத்தை வெகுவாக பாதிக்கும். ஆகையால், சூரியனை எப்போதும் வெறும் கண்களால் நீண்ட நேரம் பார்ப்பதை தவிர்க்க வேண்டும். வாகனங்களில் சூரியனின் திசை நோக்கி பயணிப்பவர்கள் அதற்கேற்ப சன் கிளாஸ் பயன்படுத்தலாம்.
புகை & மது பழக்கம் கொண்டவர்களுக்கு உடலில் புற்றுநோய் மட்டும் ஏற்படாது. மாகுலர் சிதைவு, கண்புரை போன்றவையும் அதிகரிக்கும். ஏனெனில் புகை பார்வை நரம்பு மண்டலத்தை சேதப்படுத்தும், உடல் வறட்சியையும் உண்டாக்கும். கணினியில் வேலை பார்ப்போர் கண்களில் இருந்து ஒரு கை நீளம் அளவு கணினித்திரையை வைத்து வேலை செய்வது நல்லது. அதேபோல, 20 டிகிரி கோண அளவில் கீழ் நோக்கி பார்ப்பது போல அமர்ந்து வேலை பார்க்க வேண்டும்.
பிரகாசமான வெளிச்சத்தை குறைத்து, 20-20-20 என்ற விதிப்படி 20 நிமிடங்களுக்கு ஒருமுறை 20 அடி தொலைவில் உள்ள பொருளை பார்த்து, 20 முறை கண்களை சிமிட்டுவது கண்களின் பார்வை குறைபாடு பிரச்சனையை சரி செய்ய உதவும். கண்களில் ஏற்படும் அழுத்தத்தை குறைக்கும். கணினியில் வேலை பார்ப்போர் கணினியை எவ்வுளவு நேரம் பார்க்கிறாரோ, அதே அளவு உறக்கத்தில் இருந்து கண்களுக்கு ஓய்வு அளிப்பது நல்லது. இல்லையேல் விரைவில் கண் சார்ந்த பிரச்சனை ஏற்படும்.
ஆண்டுக்கு ஒருமுறை கண் சார்ந்த பரிசோதனைகளை மேற்கொள்வது, நாம் வசிக்கும் இடத்தை தூய்மையாக வைப்பது, வெளியே செல்லும்போது வாகன பயணங்களில் கண்களுக்கு ஏற்படும் அழுத்தத்தை குறைக்க கண் கண்ணாடி அணிவது சாலச்சிறந்தது. இரட்டை பார்வை, மங்கலான பார்வை, சிவந்த கண்கள் உட்பட பல்வேறு கண் சார்ந்த பிரச்சனை இருப்போர் உடனடியாக கண் மருத்துவரை அணுகி சோதனை செய்துகொள்வது நல்லது.