ZIM Vs GAM: டி20 போட்டியில் புதிய உலக சாதனை; 20 ஓவரில் 344 ரன்கள் குவித்து ஜிம்பாவே அணி அபார வெற்றி.! முழு விபரம் உள்ளே.!
ஒருநாள் டி20 போட்டியில் காம்பியா அணியின் பந்துவீச்சை எரிமலைபோல வெடித்துச் சிதறவைத்த ஜிம்பாவே அணியின் அசத்தல் செயல் உங்களவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
அக்டோபர் 24, நைரோபி (Cricket News): ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை (ICC Men's T20 World Cup Africa Sub Regional Qualifier B 2024) ஆப்பிரிக்க துணை பிராந்திய தகுதிச்சுற்று பி பிரிவு 2024 போட்டிகள், விறுவிறுப்புடன் நடைபெற்ற வருகின்றன. ஆப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் சார்பில், சர்வதேச டி20 முறையில் நடத்தப்படும் இந்த போட்டியில் 15 ஆட்டங்கள் ஆறு அணிகளுக்கு இடையே நடைபெறுகிறது. இந்த ஆட்டத்தில் ஆப்பிரிக்காவில் உள்ள ஜிம்பாவே, கென்யா, காம்பியா, ரவாண்டா, மொசம்பிக், சேய்சலஸ் ஆகிய நாடுகள் கலந்து கொண்டன.
20 ஓவர்களில் 344 ரன்கள்:
கடந்த 19 அக்டோபர் முதல் தொடங்கிய இந்த போட்டியானது, 5 நாட்கள் என குறுகிய இடைவெளிக்குள் அடுத்தடுத்து நடத்தி முடிக்கப்படுகிறது. விறுவிறுப்புடன் பல சுற்றுகளாக போட்டி நடைபெற்று, இன்று (அக்.24) இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த போட்டியின் 12வது ஆட்டம் நேற்று ஜிம்பாவே மற்றும் காம்பியா (Zimbabwe Vs Gambia ZIM Vs GAM) அணிகளுக்கு இடையே, கென்யாவில் உள்ள நைரோபி, ரூக்கா விளையாட்டு மைதானத்தில் வைத்து நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாபே, காம்பியா அணியின் பந்துவீச்சை எரிமலைகளாக சிதறவிட்டு 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் மட்டும் இழந்து, 344 ரன்கள் குறித்து உலக அளவிலான பிற சாதனைகளை முறியடித்து புதிய வரலாற்றுச் சாதனை படைத்தது. David Warner: "மீண்டும் களத்தில் இறங்க தயார்" ஆஸ்திரேலிய அணிக்கு வார்னர் தகவல்.!
14 ஓவரில் மண்ணைக்கவ்விய காம்பியா:
அந்த அணியின் சார்பில் விளையாடியவர்களில் பிரைன் பென்னெட் 26 பந்துகளில் 50 ரன்னும், மருமணி (Tadiwanashe Marumani) 19 பந்துகளில் 62 ரன்னும், சிக்கந்தர் ராசா (Sikandar Raza) 43 பந்துகளில் 133 ரன்னும், கிளைவ் மடாண்டே 17 பந்துகளில் 53 ரன்னும் அடித்து நொறுக்கி அசத்தியிருந்தனர். இதனையடுத்து, 345 ரன்கள் என்ற இமாலய இலக்கை எதிர்கொண்ட காம்பியா அணி, 14.4 ஓவரில் தனது அனைத்து விக்கெட்டையும் பறிகொடுத்து, கிட்டத்தட்ட 290 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை அடைந்தது. அந்த அணியின் சார்பில் விளையாடிய அனைத்து வீரர்களும், அடுத்தடுத்து 10 ரன்களுக்குள்ளாகவே விக்கெட்டை இழந்து வெளியேறியிருந்தனர். இறுதியாக களமிறங்கிய ஜட்ஜு மட்டும் 12 பந்துகளில் 12 பந்துகளை அடித்திருந்தார். இதனால் அந்த அணியால் ரன்களை குவிக்க இயலாமல், 14.4 ஓவரில் 54 ரன்கள் மட்டுமே எடுத்து தோல்வியை தழுவியது.
27 சிக்ஸர், 30 பவுண்டரி:
இந்த போட்டியின் முடிவில் ஜிம்பாவே அணி மிகப்பெரிய வெற்றியை அடைந்த நிலையில், உலகளவில் முன்னதாக டி20 போட்டிகளில் அதிக ரன்களை பதிவு செய்து வைத்திருந்த அனைத்து ரெக்கார்டுகளையும் வீழ்த்தி முன்னணி அடைந்துள்ளது. ஜிம்பாவே அணியின் சார்பில் விளையாடிய வீரர்களில் 15 சிக்ஸர், 7 பவுண்டரி, தடிவானாஷே மருமணி 4 சிக்ஸர், 9 பவுண்டரி அடித்து அசத்தி இருந்தனர். ஜிம்பாவேயின் வெறித்தன ஆட்டம், அவர்களது அணியினருக்கு தொடர் உற்சாகத்தை வழங்கி வெற்றியை அடைய ஊன்றுகோலாக இருந்தது. தொடக்கத்திலேயே பதற்றத்தை சந்தித்த காம்பியா அணி, பந்துவீச்சலும் - பேட்டிங்கிலும் அடுத்தடுத்து கோட்டை விட்டு மண்ணைக்கவ்வியது. நேற்றைய ஆட்டத்தில் ஜிம்பாவே அணி மட்டும் 27 சிக்ஸர், 30 பவுண்டரி அடித்து இருந்தது. ஜிம்பாவே அணியின் இமாலய வெற்றி மற்றும் அதிரடி ஆட்டம் உலகளவில் கவனத்தைப் பெற்று பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
இன்று கென்யா - ஜிம்பாவே (Kenya Vs Zimbabwe) அணிகளுக்கு இடையே 14 வது ஆட்டம் நடைபெறுகிறது.