Bajaj Finance Scam: வயதானவர்கள் தான் டார்கெட்; ஓ.டி.பி-யில் லோன் எடுத்ததாக பணம் கேட்டு மிரட்டும் கந்துவட்டி கும்பல்.. பஜாஜ் பைனான்ஸ் பயங்கரங்கள்.!
காவல் நிலையத்தில் புகார் வரை சென்றதும் உள்ளூர் நிர்வாகிகள் முதல் டெல்லி அலுவலகத்தில் இருக்கும் பஜாஜ் நிதி நிறுவன அதிகாரிகள் வரை வாங்காத கடனை நாங்களே சரி செய்து அனுப்பிவிட்டோம் என கூறி காவல்நிலைய புகாரை திரும்ப பெற மிரட்டும் சம்பவம் நடந்துள்ளது.
ஆகஸ்ட் 06, சென்னை (Chennai): மிரட்டலில் தொடங்கி மிரட்டலிலேயே பயணிக்கும் பஜாஜ் பைனான்ஸின் (Bajaj Finance) பகல் கொள்ளையின் பகீர் தகவல் ஒன்று அம்பலமாகி பலரையும் அதிர்ச்சியுற வைத்துள்ளது. கையெழுத்து போடாமல் வயோதிக பெண்மணியின் பெயரில் உள்ள வங்கிக்கணக்கில் ரூ.1 இலட்சம் கடனுக்கு ரூ.11,017/- பிடித்தம் என பணம் எடுத்த கும்பல் மிரட்டல் சம்பவத்தில் இறங்கியுள்ள அதிர்ச்சி உண்மையை விளக்குகிறது இந்த செய்தித்தொகுப்பு.
சென்னையை (Chennai) சேர்ந்தவர் ரோஹித் குமார். இவரின் தாயாருக்கு 65 வயது ஆகிறது. சம்பவத்தன்று இவரின் வங்கிக்கணக்கில் இருந்து ரூ.11,017 பிடித்தம் செய்யப்பட்ட நிலையில், அதனை பஜாஜ் பைனான்ஸ் அதிகாரிகள் பிடித்தம் செய்தது தெரியவந்தது. இந்த தகவலை பெண்மணி தனது மகனிடம் தெரிவித்துள்ளார். இதனையடுத்து, அவர் பஜாஜ் பைனான்ஸ் நிறுவன அதிகாரிகளிடம் சென்று விசாரித்துள்ளார்.
அப்போது, தங்களின் தாயார் வாங்கிய கடனுக்கு ரூ.1.16 ஆயிரம் பணம் செலுத்த வேண்டும். உங்களின் அம்மா கடன் வாங்கியுள்ளார் என தெரிவித்துள்ளனர். தனது தாயார் கடன் வாங்கவில்லை என்று கூறியபோது, பஜாஜ் பைனான்ஸ் அதிகாரிகள், எங்களுக்கு அதெல்லாம் தெரியாது. நீங்கள் கடன் வாங்கியுள்ளீர்கள். அதற்காக பணம் செலுத்த வேண்டும் என தெரிவித்துள்ளனர்.
மேற்படி வாதம் முற்றியபோது, அதிகாரிகள் எதையும் ஏற்றுக்கொள்ளாமல் நீங்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துக்கொள்ளுங்கள் என கூறியுள்ளனர். இதனையடுத்து, காவல் நிலையத்தில் புகார் அளித்து, சி.எஸ்.ஆர் நகல் பெற்றதைத்தொடர்ந்து, பஜாஜ் பைனான்ஸ் சார்பில் வந்தவர், லோனுக்கான தொகையை செலுத்தசொல்லி மிரட்டி இருக்கிறார்.
நாங்கள் லோனே எடுக்கவில்லை. சம்பவம் குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளோம் என கூறியும் பலன் இல்லை. அவையெல்லாம் எனக்கு தேவையில்லை, இது எனது வேலை, எப்போது பணம் செலுத்துவீர்கள்? என மிரட்டல் தொடர்ந்துள்ளது. இதனால் ரோஹித் குமார் தனது வழக்கை விசாரணை செய்ய சென்னை மாநகர ஆணையரின் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். Chennai: மகனுக்கு குறுஞ்செய்தி அனுப்பிவிட்டு தந்தை செய்த செயல்.! கதவை திறந்து பார்த்தவர்களுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி.!
புகாரை ஏற்ற அதிகாரிகள் விசாரணை நடத்த, ஓ.டி.பி மூலமாக தாயாரிடம் லோன் உறுதி செய்யப்பட்டது என கூறிய நிதி நிறுவனத்தின் மோசடி செயல்கள் வெட்டவெளிச்சமாக தொடங்கியுள்ளது. அதாவது, 2 ஆண்டுகளாக செயல்பாட்டில் இல்லாத சிம்மை வைத்து அவர்கள் ரோஹித்துடைய தாயாரின் பெயரில் லோன் எடுத்ததாக கூறியுள்ளனர்.
வழக்குக்கு எதிராக பல ஆதாரங்கள் அடுத்தடுத்து ரோஹித் வசம் சிக்கியதால், அவர் காவல் நிலையத்தில் உரிய ஆதாரத்துடன் புகார் அளித்துள்ளார். இந்த தகவல் பஜாஜ் பைனான்ஸ் நிறுவன அதிகாரிகளுக்கு தெரியவந்துள்ளது. இதன்பின்னர் அவர்கள் தாங்கள் பிடித்தம் செய்த தொகையை மீண்டும் சம்பந்தப்பட்ட வங்கி கணக்குக்கே அனுப்பி வைத்துள்ளனர்.
பின் ரோஹித்-க்கு தொடர்பு கொண்டு பிரச்சனை அனைத்தும் முடிந்துவிட்டதால், உங்களின் பணம் வந்துவிட்டதால், புகாரை வாபஸ் பெறுங்கள் என கூறியுள்ளனர். இவர்கள் புகாரில் உறுதியாக இருந்ததால், டெல்லியில் இருந்தும் அழைப்பு வந்து நாங்கள் பெரிய நிறுவனம், ஊடகத்தில் இவை குறித்து பேசினால் பிரச்சனை வரும், நாங்கள் 6,000 கோடி வருமானம் பார்க்கும் நிறுவனம் என்பதால் உங்களுக்கு தான் பிரச்சனை என கூறுகிறார்கள்.
இவ்வாறாக பஜாஜ் பைனான்ஸ் நிறுவனம் தொடக்கத்தில் இருந்து முடிவு வரை மிரட்டி வருவதாக ரோஹித் புகார் அளித்துள்ளார். இவர்கள் வங்கியில் இருந்து பணத்தை திருடி, அதற்காக லோன் எடுத்தோம் என பணத்தை கேட்டு மிரட்டி வயோதிகர்களை குறிவைத்து இவ்வாறான பிரச்சனையை செய்கிறார்கள். மக்கள் கவனமுடன் இருக்க வேண்டும் என ரோஹித் குமார் தனது பேட்டியில் கேட்டுக்கொண்டார்.
தனியார் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட்ட விடியோவை, யூடியூபர் பிரசாந்த் ரங்கசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த விடியோவும் இணைக்கப்பட்டுள்ளது. வீடியோவில் கருத்துக்கள் தெரிவித்த ஒருசிலர் புகார் தெரிவித்த நபருக்கு எதிராகவும், பிறர் பஜாஜ் நிறுவனத்திற்கு எதிராகவும் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.