Look Back Politics 2024: தமிழ்நாடு முதல் டெல்லி வரை.. 2024ம் ஆண்டு அரசியலில் நடந்த முக்கிய மாற்றங்கள்..! முழு விபரம் உள்ளே.!
இதனை படித்து உங்களின் ஆதரவை தொடர்ந்து வழங்கவும்.
டிசம்பர் 14, சென்னை (Chennai News): 2025 ம் ஆண்டு என்ற புதுவரை எதிர்நோக்கி ஒவ்வொரு உலகத்தவரும் காத்திருக்கும் அதே வேளையில், 2024ம் ஆண்டின் இறுதிக்கட்டத்தில் நாம் இருக்கிறோம். இந்த தருணத்தில் நாம் கடந்த காலங்களில் நடந்ததை நினைவுபடுத்தி பார்க்க வேண்டும். இந்த நினைவை ஆதாரமாக கொண்டு, எதிர்காலத்தில் நாம் செய்ய வேண்டியது, அதற்கான திட்டங்களை வழிவகுக்க வேண்டும். அந்த வகையில், லேட்டஸ்டலி தமிழ் சார்பில் ஏற்கனவே விளையாட்டு (Look Back Entertainment 2024), சினிமா ஆகிய பிரிவுகளில் 2024ல் நடந்த (Look Back Sports Events 2024) முக்கிய நிகழ்வுகள் தொடர்பான செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. இப்போது அரசியலில், தேசிய மற்றும் மாநில அளவில், கடந்த ஓராண்டில் நடந்த சுவாரஷ்ய நிகழ்வுகள் குறித்து நாம் தெரிந்துகொள்ளலாம்.
தலைப்புகள் பின்வருமாறு:
- மத்திய அரசியல் - நாடாளுமன்ற தேர்தல்
- பாஜக - காங்கிரஸ் நேரடி மோதல்
- அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஆண்டு
- டெல்லி & ஜார்கண்ட் அரசியல்
- ராகுல் காந்தியைத் தொடர்ந்து எம்.பி-யான பிரியங்கா காந்தி
- ஆந்திர அரசியலில் அதிரடி மாற்றம்
- ஒடிசா அரசியல் - மிகப்பெரிய மாற்றத்தை தந்த பாஜக வியூகம்
- ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல்
- ஹரியானா & மகாராஷ்டிரா அரசியல்
- மாநில அரசியல் - மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு: ஒரு பார்வை
- மாநில அமைச்சரவை மாற்றம்
- துணை முதல்வர் உதயநிதி
- அமைச்சர் செந்தில் பாலாஜி விடுதலை
- அண்ணாமலையின் வருகையால் வளர்ச்சிகண்ட தமிழ்நாடு பாஜக
- நடிகர் விஜயின் தமிழக வெற்றிக் கழகம் - விஜயின் அரசியல் வருகை
மத்திய அரசியல் (Central Politics) - நாடாளுமன்ற தேர்தல் (Parliament Elections 2024):
2023ம் ஆண்டு முடிந்து, 2024ம் ஆண்டு தொடங்கும்போது ஒவ்வொரு இந்தியர்களும் எதிர்பார்த்த பாராளுமன்ற தேர்தல் விறுவிறுப்பு என்பது இருந்தது. 2014, 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் என 2 அடுத்தடுத்த தேர்தலில் வெற்றி அடைந்து ஆட்சியை கைப்பற்றிய பாரதிய ஜனதா கட்சி, 2 முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை கைப்பற்றி இருந்தது. 10 ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி தன்னை நிலைநிறுத்திக்கொள்ள மாநில அளவிலும், தேசிய அளவிலும் மிகப்பெரிய சாதக-பாதக சூழ்நிலையை எதிர்கொண்டு இருந்தது.
பாஜக - காங்கிரஸ் நேரடி மோதல் (BJP Vs Congress Face to Face War):
ஆட்சி, அதிகாரம், வெளிநாடுகளுக்கு சுற்றுப்பயணம், பிற நாடுகளுடன் நட்பை வளர்ப்பது, உலகளவில் இந்தியாவின் அங்கீகாரத்தை வளர்ப்பது, இந்தியாவுக்கு முதலீடுகள் ஈர்ப்பது, வெளிநாடுகளில் உள்ள இந்தியர்களிடம் ஆதரவை திரட்டுவது, அனைத்து மாநில அரசியலிலும் பாஜக-பிரதமர் மோடி என்ற பேச்சு இருந்தது. அதேவேளையில், காங்கிரஸ் இயக்கம் தன்னை நிலைநிறுத்திக்கொள்ள ராகுல் காந்தியின் தலைமையில் ஓரணியாக திரண்டு, மீண்டும் தேசிய அளவில் பல பயணங்களை மேற்கொள்ள வழிவகை செய்தது. இவ்வாறான செயல்முறை எதிர்பார்ப்புடன் உதயமான 2024ம் ஆண்டில் ஏப்ரல் - மே மாதம் இந்தியா முழுவதும் வெவ்வேறு கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தல் முடிவுகள் இரண்டு கட்சிகளுக்கும் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை எனினும், மக்களின் மாற்றத்தை நோக்கிய விதையை உறுதி செய்தது. Look Back Sports 2024: 2024ம் ஆண்டில் விளையாட்டில் நாம் எதிர்பார்க்காத திரும்புமுனைகள்.. உள்ளூர் முதல் உலகம் வரை.. அசத்தல் விபரம் இதோ..!
அரசியல் பரபரப்புக்கு பஞ்சமில்லாத ஆண்டு:
அதாவது, இரண்டு முறை தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்திருந்த பாஜக, சற்று தொய்வை சந்தித்தது. அதேநேரத்தில், காங்கிரஸ் கட்சி மட்டும் தனியாக தனது இடங்களை குறைத்துக்கொண்டு, கூட்டணிக்கட்சிக்கு அதிக இடங்களை வழங்கி, அதன் வாயிலாக வெற்றியை பெற்று இருந்தது. தேர்தலில் வெற்றி அடைந்த பாஜகவின் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி (PM Narendra Modi), மீண்டும் மூன்றாவது முறையாக தொடர்ந்து தனது பொறுப்பை ஏற்றுக்கொண்டார். கிட்டத்தட்ட 50 ஆண்டுகளுக்கு பின் மீண்டும் பிரதமர் தொடர்ந்து மூன்றாவது முறையாக பொறுப்பேற்றார், ஒரே ஆட்சி மக்களுக்கு வழங்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி ஆட்சியை எட்டிப்பிடிக்கும் வகையிலான தாக்கத்தை ஏற்படுத்தி, மக்களின் முடிவை உணர்ந்துகொண்டு தோல்வியை அடைந்தாலும், அடுத்த ஆண்டில் வெற்றி உறுதியாக கிடைக்கும் என எண்ணி செயல்பட தொடங்கியுள்ளது. இவ்வாறாக 2024ம் ஆண்டின் தொடக்கம் முதல் மத்திய பகுதி வரை அரசியல் பரபரப்பு தொற்றிய ஆண்டாக அமைந்தது. தேசிய அளவில் தெலுங்கானா, ஆந்திர பிரதேசம், மகாராஷ்டிரா, ஜார்கண்ட், ஒடிசா, ஹரியானா உட்பட பல மாநிலங்களிலும் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற்று முடிந்தன.
டெல்லி & ஜார்கண்ட் அரசியல் (Delhi & Jharkhand Politics):
டெல்லி மாநிலத்தில், ஆம் ஆத்மி அரசு தலைமையிலான அரசு நடைபெற்று வந்த நிலையில், மதுபான கொள்கை ஊழல் நடந்ததாக அமலாக்கத்துறை அதிரடி நடவடிக்கை எடுத்து வந்தது. அதன் விளைவாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின் நீண்ட போராட்டங்களுக்கு பின் அவர் ஜாமினில் வெளியே வந்து, இன்று முதல்வர் பொறுப்பை துறந்துவிட்டு, எதிர்வரும் தேர்தலில் மக்கள் அங்கீகாரம் கொடுத்தால் மட்டுமே முதல்வர் பொறுப்பில் அமர்வேன் என கூறி அரசியலில் காய்களை நகர்த்தி வருகிறார். ஆனால், டெல்லி மாநில பாஜக, தலைநகரில் தனது ஆட்சியை நிறுவ தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. டெல்லியைப் போல ஜார்கண்ட் மாநிலத்தில், அம்மாநிலத்தின் முதல்வர் ஹேமந்த் சோரன் நிலமோசடி வழக்கில் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கைதுக்கு முன் பதவியை துறந்தவர், பின் மீண்டும் பிணையில் வெளியே வந்து தனது பதவியை ஏற்றுக்கொண்டார்.
ராகுல் காந்தியைத் (Rahul Gandhi) தொடர்ந்து எம்.பி-யான பிரியங்கா காந்தி (Priyanka Gandhi):
கேரளா மாநிலத்தில் உள்ள வயநாடு, உத்திரபிரதேசம் மாநிலத்தில் உள்ள ரேபரேலி மக்களவைத் தொகுதிகளில் களம்கண்டு, மிகப்பெரிய அளவிலான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியடைந்த ராகுல் காந்தி, நீண்ட ஆலோசனைக்கு பின்னர் சட்ட விதிப்படி ரேபரேலி தொகுதியை தன்வசப்படுத்தினார். வயநாடு தொகுதியில் இருந்து அவர் பதவி விலகிக்கொண்ட நிலையில், நீண்ட எதிர்பார்ப்புடன் இருந்த பிரியங்கா காந்தி, அங்கு வேட்பாளராக களமிறக்கப்பட்டு மக்களவைக்கு முதல் முறையாக 2024ம் ஆண்டிலேயே தேர்வு செய்யப்பட்டார். சுதந்திர விடுதலை தாகம் உண்டாகிய காலத்தில் இருந்து மிகப்பெரிய இயக்கமாக இருந்த காங்கிரஸ் தனது பலத்தை இழந்து, இன்று மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் நிலைநிறுத்த தேவையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அதற்கான அடித்தளமாகவும் இந்நிகழ்வு கவனிக்கப்பட்டது.
ஆந்திர அரசியலில் (Andhra Pradesh Politics) அதிரடி மாற்றம்:
தமிழ்நாட்டின் அண்டை மாநிலமான ஆந்திராவில், கடந்த ஆட்சிக்காலத்தில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் சார்பில், ஜெகன் மோகன் ரெட்டியின் தலைமையிலான ஆட்சி நடைபெற்று வந்தது. 2024 ஆந்திர மாநில சட்டப்பேரவை தேர்தலிலும் வெற்றி அடைந்து தாமே ஆட்சி அமைப்போம் என ஜெகன் எதிர்பார்த்திருந்த தருணத்தில், அம்மாநில மக்கள் ஜெகனுக்கு அதிர்ச்சி பரிசு ஒன்றை தந்தனர். அதாவது, அங்கு தெலுங்கு தேசம் கட்சியின் ஆட்சி அமலுக்கு வரும் வகையில் மக்களின் முடிவு இருந்தது. இதன் வாயிலாக சந்திரபாபு நாயுடு அம்மாநில முதல்வராக மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். ஆட்சிப் பொறுப்பு ஏற்ற பின்னர் ஜெகன் மோகன் - தெலுங்கு தேசம் இடையே நடந்த காரசாரமான கருத்து மோதலில், சந்திரபாபு நாயுடுவும் கைது செய்யப்பட்டு பின் விடுவிக்கப்பட்டார். பல்வேறு அரசியல் காரணங்களால் அங்குள்ள மக்கள் ஜெகனின் ஆட்சியை பெருவாரியான தோல்வியுடன் ஒதுக்கி வைத்துவிட்டு, தெலுங்கு தேசத்திற்கு தனிப்பெருமான்மை ஆதரவு கொடுத்து ஆட்சியை அமைக்க வழிவகை செய்தனர். பாஜகவுடன் தெலுங்கு தேசம் கூட்டணியும் அமைத்து, மத்தியில் பாஜக ஆட்சி அமைந்ததும் பலகோடி தொகையை மாநில வளர்ச்சிக்கு நேரடியாக பெற்றது. தீவிர அரசியலில் தன்னை ஈடுபடுத்திய நடிகர் பவன் கல்யாணம், தெலுங்கு தேசம் மற்றும் பாஜகவின் கூட்டணியில் இணைந்து, 21 தொகுதிகளை கைப்பற்றி இருந்தார். இதன் வாயிலாக அவர் அம்மாநிலத்தின் துணை முதல்வராகவும் பொறுப்பேற்றுக்கொண்டார்.
ஒடிசா அரசியல் (Odisa Politics) - மிகப்பெரிய மாற்றத்தை தந்த பாஜக வியூகம் (BJP Vision):
கடந்த 24 ஆண்டுகளாக ஒடிசாவில் நடந்து வந்த பிஜு ஜனதா தளத்தின் ஆட்சி, 2024 சட்டப்பேரவை தேர்தலில் முடிவுக்கு வந்தது. இந்த விஷயம் ஒடிசா அரசியலில் ஒரு மைல் கல்லாகவும் பார்க்கப்பட்டது. கடந்த ஆட்சிக்காலத்தில் 113 தொகுதிகளை கைப்பற்றிய நவீன் பட்நாயக், இந்த தேர்தலில் 54 தொகுதிகளை மட்டுமே கைப்பற்றி இருந்தார். இதனால் 147 சட்டப்பேரவை தொகுதிகளில் 78 இடங்களை பாஜக கைப்பற்றி, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைத்தது. மேலும், மக்களவை தொகுதியிலும் அங்கு 20 தொகுதிகளை கைப்பற்றி சாதனை படைத்தது.
ஜம்மு காஷ்மீர் சட்டப்பேரவை தேர்தல் (Jammu Kashmir Elections 2024):
இந்தியாவின் வடக்கு எல்லை தொடக்கப்புள்ளியாகவும், கடந்த 75 ஆண்டுகளாக சர்ச்சைக்குரிய, மிக உயரிய பாதுகாப்பு வழங்கப்படும் பகுதியாகவும் இருப்பது ஜம்மு காஷ்மீர் மாநிலம். கடந்த 2014ம் ஆண்டு அம்மாநிலத்தில் அமல்படுத்தப்பட்டு இருந்த சிறப்பு அந்தஸ்து மத்திய அரசால் நீக்கப்பட்ட காரணத்தால், எதிர்க்கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு கிளம்பியது. இதனால் அங்கு தேர்தல் நடத்த இயலாத சூழல், அரசியல் கட்சிகளின் குழப்பம், பயங்கரவாத தாக்குதல் அச்சம் என பல்வேறு சூழ்நிலைகள் நிலவின. இதனை கருத்தில் கொண்டு அங்கு எடுக்கப்பட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கையைத் தொடர்ந்து, ஜம்மு காஷ்மீரில் இராணுவ பாதுகாப்புடன் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த தேர்தலில் உமர் அப்துல்லா தலைமையில் ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாடு கட்சி மற்றும் காங்கிரஸ் இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. பாஜக, மெகபூபா முப்தி தனித்தனியே களம்கண்டு இருந்தனர். இதில் உமர் அப்துல்லாவின் கட்சி 42 இடங்களையும், காங்கிரஸ் 6 இடங்களையும், முப்தி 3 இடங்களையும் கைப்பற்றி இருந்தனர். பாஜக 29 தொகுதிகளை கைப்பற்றியது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பின்னர் அம்மாநிலத்தில் மிகச்சிறப்பான முறையில் தேர்தல் நடைபெற்று முடிந்தது. இந்த விஷயம் உலகளவிலும், தேசிய அளவிலும் 2024ம் ஆண்டில் அதிகம் கவனம் பெற்றது. Look Back Entertainment 2024: 2024 தமிழ் திரையுலகுக்கு எப்படி? உச்சகட்ட வெற்றியும், நல்ல மனிதரின் மறைவும், திருமணம் & விவகாரத்துகளும்.. முழு விபரம் உள்ளே.!
ஹரியானா (Haryana Politics) & மகாராஷ்டிரா அரசியல் (Maharashtra Politics):
தமிழர்களுக்கு மிக நெருங்கிய தொடர்பு கொண்ட மற்றொரு நகரம் மும்பை. சென்னையை போல, மும்பையில் வாழும் தமிழர்களின் எண்ணிக்கையும் ஏராளம். மும்பையை உள்ளடக்கிய மகாராஷ்டிரா மாநிலத்தில், 2024 சட்டப்பேரவை தேர்தல் மிகுந்த எதிர்பார்ப்புடன் நடந்தது. உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா அரசு, ஏக்நாத் ஷிண்டேவின் அரசியல் காரணமாக பிரித்து எடுக்கப்பட்டது. இதனால் ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா, அஜித் பவர் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ், தேவேந்திர பட்னாவிஸ் தலைமையிலான பாஜக ஆட்சியை அமைத்தது. இந்த கூட்டணி தேர்தலையும் எதிர்கொண்டது. எதிர்தரப்பில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, சரத் பவரின் தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்தது. இந்த தேர்தலில் அம்மாநில அரசு விவசாயிகளை ஈர்க்கும் திட்டம், பெண்களை ஈர்க்கும் திட்டம், மும்பை மக்களை ஈர்க்கும் பொருளாதார திட்டங்களை அமல்படுத்தி, அதற்கான அறிவிப்புகளை வெளியிட்டு வெற்றியை தங்களின் வசப்படுத்தினர். பாஜகவுடன் சிவசேனா கூட்டணி என்பது சுதந்திரத்திற்கு பின்னரில் இருந்து, பால் தாக்கரே காலத்தில் இருந்து தொடருகிறது. ஆட்சி தொடர்பாக உத்தவ் தாக்கரே - பாஜக தலைமை இடையே ஏற்பட்ட பிரச்சனை, உத்தவ் தாக்கரே கொள்கைக்கு பங்களவு ஒத்துப்போகாத காங்கிரசுடன் இணைய வழிவகை செய்தது. எனினும், ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார் வாயிலாக தேர்தலை எதிர்கொண்ட பாஜக, தனிப்பெரும்பான்மையுடன் மிகப்பெரிய வெற்றியை அடைந்துள்ளது. இதன் வாயிலாக அம்மாநிலத்தின் முதல்வராக மீண்டும் தேவேந்திர பட்னாவிஸ் தேர்வு செய்யப்பட்டார். அஜித் பவார், ஏக்நாத் ஷிண்டே ஆகியோர் துணை முதல்வராக பொறுப்பேற்றுள்ளார். இதேபோல, ஹரியானா தேர்தலிலும் பாஜக வெற்றி அடைந்து தொடர்ந்து 3 வது முறையாக ஆட்சியை தக்கவைத்துள்ளது.
மாநில அரசியல் - மக்களவைத் தேர்தல் தமிழ்நாடு: ஒரு பார்வை (2024 Tamilnadu Politics):
இந்திய மக்களவை தேர்தல் 2024-ன் தாக்கம் தேசிய அளவில் எப்படியான அரசியல் பதற்றத்தை உண்டாக்கியதா, அதேபோல தமிழ்நாட்டிலும் இருந்தது. ஒருபக்கம் மாநிலத்தில் ஆளும் திமுக, காங்கிரஸ், விசிக உட்பட அதன் கூட்டணிக்கட்சிகள் என இடதுசாரி அமைப்புகள் ஒருபுறம், அதிமுக, தேமுதிக மறுபுறம் இருந்தது. இதில் பாஜக, பாமக உட்பட பல கட்சிகள், விமர்சனங்களை மறந்து அதிமுகவுடன் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் என எதிர்பார்த்து இருந்த நேரத்தில், அவை எதுவும் அமையவில்லை. இதனால் திமுக +, அதிமுக + , பாஜக + , நாதக என நான்குமுனை போட்டி களத்தில் இருந்தது. இந்த தேர்தலில் அந்தந்த அரசியல் கட்சிகள் தமிழகமெங்கும் தீவிர பிரச்சாரத்தை முன்னெடுத்தது. பலமுறை பிரதமர் நரேந்திர மோடியும் தமிழகத்திற்கு வந்து தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு இருந்தார். தமிழ்நாடு & புதுச்சேரி சேர்த்து 40 தொகுதிகள் இருந்த நிலையில், அனைத்து தொகுதியிலும் திமுக தலைமையிலான கூட்டணி வெற்றிபெற்று 39 தொகுதிகளையும் தனது கோட்டையாக்கியது. கடந்த 2019 மக்களவை தேர்தலில் தேனி தொகுதி மட்டும் தப்பித்து, அதிமுக 1 தொகுதியை கைப்பற்றி இருந்தது. 2024ல் அந்நிலை தலைகீழாகி மொத்த மக்களவையும் திமுக பக்கம் சென்றது. இந்த விசயத்திற்கு திமுக முன்னெடுத்த அரசியல் வியூகம் பாஜக, அதிமுக மற்றும் அதன் கூட்டணிகளுக்கு எதிராக மிகப்பெரிய அளவில் தாக்கத்தை முன்னிறுத்தி இருந்தது. அதிமுக, பாஜக கூட்டணி முறிவு திமுகவுக்கு மிகப்பெரிய வெற்றி வாய்ப்பை ஏற்படுத்தி தந்திருந்தது. இரண்டு கட்சிகளுக்கும் இடையே ஏற்பட்டு இருந்த கருத்து முரண், கூட்டணி பிரிவுக்கும், எதிர்தரப்பு வெற்றிக்கும் காரணமாக அமைந்தது.
மாநில அமைச்சரவை மாற்றம்:
2021 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி அடைந்த திமுக, தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடித்தது. திமுக, அதிமுக தலைமையில் இருந்த முக்கிய, மூத்த தலைவர்களான கருணாநிதி, ஜெயலலிதா இல்லாது தேர்தலை எதிர்கொண்ட கட்சிகளில், திமுக மிகப்பெரிய வெற்றியை அடைந்து ஆட்சியை பிடித்தது. இதில் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி குடும்ப உறுப்பினர்கள் வரிசையில் சட்டமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதனைத்தொடர்ந்து, அவர் தன்னை தீவிர அரசியலில் ஈடுபடுத்திக்கொண்டு, 2024 மக்களவை தேர்தலில் பெரிய அளவிலான பிரச்சாரத்தையும் முன்னெடுத்தார். தந்தை-மகனாக முக ஸ்டாலின் - உதயநிதி ஸ்டாலின் தனித்தனியே பிரச்சாரங்களை முன்னெடுத்து இருந்தனர். உதயநிதியின் எய்ம்ஸ் செங்கல் தொடர்பான விஷயம், தேசிய அளவில் மீண்டும் ஒருமுறை கவனம் பெற்றது.
துணை முதல்வர் உதயநிதி (Deputy CM Udhayanidhi Stalin):
சட்டப்பேரவை உறுப்பினராக பணியை தொடர்ந்து வந்த உதயநிதி ஸ்டாலினுக்கு, விளையாட்டுத்துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டது. இளைஞர் நலன் & விளையாட்டுத்துறை அமைச்சரான உதயநிதி, மாநில அளவில் மத்திய அரசின் கேலோ விளையாட்டுக்களை போல, இளம் விளையாட்டு வீரர்கள், திறமை உடையோரை கண்டறிய முதல்வர் கோப்பை என்ற பெயரில் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி, அரசின் சார்பில் பரிசுகளையும் வழங்கி துறையை முன்னெடுத்து வந்தார். அதனைத்தொடர்ந்து, 2024ம் ஆண்டில் செப்டம்பர் மாதம் உதயநிதி ஸ்டாலினுக்கு துணை முதல்வர் பொறுப்பும் வழங்கப்பட்டது. தற்போது உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வராக பொறுப்பு வகித்து வருகிறார். இதன் வாயிலாக இளம் வயதில் தமிழ்நாடு மாநில துணை முதல்வர் பொறுப்பை ஏற்றுக்கொண்டவர் என்ற பெருமையும் உதயநிதி கிடைத்தது. Paruthi Paal: பருத்திப்பால் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள் என்னென்ன? அசத்தல் டிப்ஸ் இதோ.!
அமைச்சர் செந்தில் பாலாஜி (Senthil Balaji) விடுதலை:
அதிமுக ஆட்சிக்காலத்தில், போக்குவரத்துத்துறை அமைச்சராக பதவி வகித்து வந்த செந்தில் பாலாஜி, மோசடி, ஊழலில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவுக்கு பின்னர், அதிமுகவில் நிலவிய குழப்பமான சூழ்நிலை காரணமாக தன்னை திமுகவில் இணைத்துக்கொண்ட செந்தில் பாலாஜிக்கு, தேர்தலில் வாய்ப்பு வழங்கிய திமுக, அவர் வெற்றிபெற்றதைத் தொடர்ந்து மின்சாரத்துறை, மதுவிலக்குத்துறை அமைச்சரவை பொறுப்பையும் வழங்கியது. இதனிடையே, 14 ஜூன் 2023 அன்று அமலாக்கத்துறை அதிகாரிகளால் மேற்கூறிய மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனால் அவரின் அமைச்சர் பொறுப்பு நிராகரிப்பு ஆனது. பின் கடந்த செப்டம்பர் மாதம் பிணையில் வெளியே வந்த செந்தில் பாலாஜி, மீண்டும் அமைச்சராக பொறுப்பேற்றுக்கொண்டார். அமைச்சராக செந்தில் பாலாஜி பொறுப்பேற்றது குறித்து அமலாக்கத்துறை நீதிமன்றத்தில் முறையீடும் செய்துள்ளது. இது விசாரணையை தொய்வுபடுத்தும் எனவும் கூறியுள்ளது. கிட்டத்தட்ட ஓராண்டுக்கும் மேலாக செந்தில் பாலாஜி சிறையில் அடைத்து வைக்கப்பட்டு இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அண்ணாமலையின் வருகையால் வளர்ச்சிகண்ட தமிழ்நாடு பாஜக (TN BJP Annamalai):
தேசிய அளவில் மிகப்பெரிய வரவேற்பை பாஜக கண்டாலும், தமிழ்நாட்டில் அதன் நிலை என்பது மந்தமாகவே இருந்தது. பாஜகவில் தன்னை அண்ணாமலை இணைத்துக்கொண்ட பின்னர், படிப்படியாக அண்ணாமலை ஒவ்வொரு கிராம, வட்ட அளவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டார். பின் பாஜகவின் தலைவராக இருந்த முருகன் மத்திய இணை அமைச்சராக தேர்வு செய்யப்பட்ட நிலையில், பொறுப்பு அண்ணாமலை வசம் வந்தது. கடந்த 2019 தேர்தலை பாஜகவின் வாக்குப்பதிவு 3.66% என்ற நிலையில் இருந்தது. அண்ணாமலையின் வருகைக்கு பின்னர் கட்சியில் ஏற்பட்ட மாற்றம், அதிரடி செயல்பாடு போன்றவை காரணமாக, தமிழ்நாடு பாஜகவின் வாக்குப்பதிவு 11.66% என்ற நிலையை நோக்கி நகர்ந்தது. இந்த வளர்ச்சி தேசிய அளவில் அண்ணாமலையின் மீதான மதிப்பை அதிகரித்தது. தமிழக பாஜகவில் அண்ணாமலையின் செயல்பாடுகளை பிடிக்காத நிர்வாகிகள், அவருக்கு எதிராக மறைமுக காய்களை நகர்த்தினால், அண்ணாமலை தனது செயல்பாடுகள் வாயிலாக முன்னேற்றத்தை கொடுத்ததால், பாஜக தலைமையும் அண்ணாமலைக்கு எதிராக வரும் விஷயங்களை கண்டுகொள்வதில்லை. அண்ணாமலை தெரிவிக்கும் கருத்துக்கு, மறைமுகமாக எதிர்க்கருத்து தெரிவிக்கும் பாஜக மூத்த புள்ளிகளையும், தலைமை அறிவுறுத்தி வருகிறது. தற்போது உயர்படிப்புக்காக இங்கிலாந்து சென்ற அண்ணாமலை மீண்டும் தமிழகம் வந்துவிட்ட நிலையில், வரும் நாட்களில் பாஜகவின் அரசியல் வியூக களம் என்பது மாறுபாடுடன் இருக்கலாம் என தெரியவருகிறது. தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என் ரவியிடம், ஆட்சி மாற்றம் ஏற்பட்டதில் இருந்து கருத்தியல் மோதலில் ஈடுபட்டு வந்த திமுக தலைமை, தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறது. இதனால் இன்று வரை திமுக அரசு வெர்சஸ் ஆளுநர் கருத்து மோதல் சம்பவங்கள் தொடருகிறது.
நடிகர் விஜயின் (TVK Vijay) தமிழக வெற்றிக் கழகம் (Tamilaga Vettri Kazhagam):
தமிழ்த் திரைத்துறையில் மூத்த நடிகராகவும், முன்னணி நடிகராகவும் இருந்து வந்த விஜய், 2026 சட்டப்பேரவை (Tamilnadu Assembly Elections 2026) தேர்தலை இலக்காக கொண்டு தமிழக வெற்றிக் கழகத்தை தோற்றுவித்துள்ளார். தனது அரசியல் எதிரி குடும்ப ஆட்சி, ஊழல், மதவாத-பிளவுவாத அரசியல் கட்சிகள் தான் என அறிவித்துள்ளவர், திமுக-பாஜகவுக்கு எதிராக நேரடியாக தனது வாதங்களை முன்வைத்து வருகிறார். இது தமிழக அரசியலில் மிகப்பெரிய அதிர்வலையை ஏற்படுத்தி இருக்கிறது. இதனால் எதிர்வரும் 2026 தமிழ்நாடு சட்டப்பேரவை தேர்தல், மிகப்பெரிய அரசியல் பரபரப்பு, மாற்றங்களை கண்ட தேர்தலாக இருக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியை 2024ம் ஆண்டிலேயே தொடங்கி, அதன் மாநாட்டையும் நடத்தி முடித்துள்ளார். இவ்வாறாக தமிழக அரசியல்களம் 2024ம் ஆண்டில் பல மாற்றங்களையும், கட்சி ரீதியான முன்னேற்றங்களையும் கண்டுள்ளது.