Samsung Workers Protest: சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்; நள்ளிரவில் வீடுபுகுந்து தூக்கிய காவல்துறை..!
ஊதிய உயர்வு உட்பட 14 கோரிக்கைகளை முன்வைத்து ஒரு மாதத்தை கடந்து நடக்கும் போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வர பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு பலனில்லாத நிலையில், அவர்களை பணிக்கு திரும்ப அமைச்சர் சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அக்டோபர் 09, சுங்குவார்சத்திரம் (Kanchipuram News): காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சுங்குவார்சத்திரம் பகுதியில், சாம்சங் எலக்ட்ரானிக் பொருட்கள் தயாரிப்பு நிறுவனமானது செயல்பட்டு வருகிறது. சுமார் 3000க்கும் அதிகமான ஊழியர்கள் இங்கு நிரந்தர மற்றும் ஒப்பந்த பணியாளர்களாக வேலை பார்த்து வருகின்றனர். இதனிடையே, கடந்த 30 நாட்களாக சிஐடி தொழிற்சங்கத்தை அங்கீகரிக்க வேண்டும், ஊதிய உயர்வு வழங்கப்பட வேண்டும், பணியில் நீக்கம் செய்யப்பட்ட தொழிலாளி ஒருவரின் ஊதியம் முழுமையாக விடுவிக்கப்பட வேண்டும் உட்பட 14 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நிரந்தர பணியாளர்கள் ஆயிரத்துக்கும் அதிகமானோர் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை:
கடந்த மூன்று நாட்களுக்கு முன்னதாக தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் உத்தரவின் பேரில், தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா உட்பட 3 அமைச்சர்கள் தலைமையில் பேச்சுவார்த்தை குழு அமைக்கப்பட்டு தலைமைச் செயலகத்தில் வைத்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் சாம்சங் இந்திய நிறுவனத்தின் அதிகாரிகள், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் ஆலோசனைகள் ஈடுபட்டிருந்தனர். இந்த பேச்சுவார்த்தையின் போது உரிய முடிவு எட்டப்படவில்லை. இந்த நிலையில், நிறுவனத்தின் தரப்பில் ஊழியர்கள் வைத்த அனைத்து கோரிக்கை ஏற்கப்பட்டாலும், தொழிற்சங்கத்திற்கான அங்கீகாரம் தொடர்பான கோரிக்கை நீதிமன்றத்தில் இருப்பதால், அது நிலுவையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவிலான வளர்ச்சிப்பணிகள், நலத்திட்ட உதவிகளை கண்காணிக்க பொறுப்பு அமைச்சர்கள் நியமனம்.. விபரம் உள்ளே.!
சிஐடி அங்கீகாரம் கேட்டு தொடரும் போராட்டம்:
ஆனால் தொழிற்சங்கத்தை அங்கீகரித்தாக வேண்டும் என ஊழியர்கள் போர்க்கொடி உயர்த்தி இருக்கும் நிலையில், அவர்களின் போராட்டமானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. நேற்று அமைச்சர் டிஆர்பி ராஜா செய்தியாளர்கள் சந்திப்பின்போது, சாம்சங் தொழிலாளர்களின் கோரிக்கை அனைத்தும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. தொழிற்சங்கம் குறித்த கோரிக்கையை மட்டுமே நிலுவையில் உள்ளது. அதை நீதிமன்றத்தில் வழக்காக இருப்பதால் அந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டதும் அது தொடர்பான உரிய முடிவு எடுக்கப்படும் என நிறுவனத்தின் தரப்பில் உறுதியளிக்கப்பட்டுள்ளது. இதனால் சாம்சங் தொழிலாளர்கள் பணி நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும்.
போராட்டக்காரர்கள் கைது:
ஏற்கனவே அவர்களுக்கு ஒரு மாத ஊதியம் வழங்கப்படாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, இன்னும் போராட்டம் தொடர்ந்தால் அவர்களின் ஊதியம் பிரச்சனை ஏற்படும். எதற்காக இன்னும் போராட்டம் நடத்துகிறார்கள் என தெரியவில்லை என பேசி இருந்தார். இதனிடையே போராட்டத்தின் தீவிர தன்மையையடுத்து, இன்று தொழிலாளர் அமைப்புகள் மற்றும் வலதுசாரி, இடதுசாரி அமைப்புகள் சாம்சங் தொழிலாளர்களுக்கு தங்களது ஆதரவை தெரிவிக்க இருந்ததாகவும் கூறப்படுகிறது. களத்திற்கு நேரடியாக சென்று தங்களின் ஆதரவை தெரிவித்து போராட்டத்தை முன்னெடுத்துச் செல்ல அரசியல் கட்சிகள் முடிவு எடுத்ததாக கூறப்படும் நிலையில், நேற்று நள்ளிரவு முதல் திடீரென சாம்சங் தொழிலாளர்களில் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த முக்கிய நபர்கள் அடுத்தடுத்து வீடுகளுக்கு சென்று கைது செய்யப்பட்டுள்ளனர்.
குவியும் கண்டனம்:
இந்த சம்பவத்தால் சாம்சங் தொழிலாளர்களிடையே தொடர் அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. மேலும், பேருந்துகளில் பயணம் செய்யும் நபர்களையும் சாம்சங் தொழிலாளர்களா? என கேட்ட காவல் அதிகாரியின் வீடியோ ஒன்றும் சமூக வலைதளத்தில் வைரல் ஆகி வருகிறது. சாம்சங் தொழிலாளர்களின் கைது சம்பவத்திற்கு கண்டனங்களும் குவிந்து வருகின்றன.
நேற்று போராட்டத்தில் நடந்த நிகழ்வு:
முன்னதாக நேற்று போராட்டத்திற்கு வந்துகொண்டு இருந்த 20 க்கும் மேற்பட்ட சாம்சங் பணியாளர்கள் லோடு ஆட்டோ கவிழ்ந்ததில் காயமடைந்தனர். மீட்பு பணியில் காவலர்கள் மற்றும் சாம்சங் தொழிலாளர்கள் ஈடுபட்டு இருந்த நிலையில், விபத்து காட்சிகளை ஆவணத்திற்காக படமெடுத்துக்கொண்டு இருந்த சுங்குவார்சத்திரம் எஸ்எஸ்ஐ மணிகண்டன் என்பவர் சாம்சங் பணியாளர்களால் கீழே தள்ளிவிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாம்சங் தொழிலாளர்கள் கைதுக்கு தமிழ்நாடு சிபிஐஎம் கண்டனம்: