Sibi Chakravarthi IPS: ரௌடி சீசிங் ராஜா என்கவுண்டரில் பலியான விவகாரத்தில் திருப்பம்; தெற்குமண்டல இணை ஆணையர் பரபரப்பு விளக்கம்.!
நீலாங்கரையில் என்கவுண்டர் செய்யப்பட்டதில் ரௌடி சீசிங் ராஜா உயிரிழந்த நிலையில், அவருக்கும் - மறைந்த பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தலைவர் கே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கிற்கும் தொடர்பு இல்லை என தெற்கு மண்டல ஜெசி விளக்கம் அளித்துள்ளார்.
செப்டம்பர் 23, அடையாறு (Chennai News): செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த பிரபல ரௌடி சீசிங் ராஜா (Seizing Raja), வேளச்சேரி காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு ஒன்றில் தேடப்பட்டு வந்தார். இவர் ஆந்திராவில் உள்ள ராஜம்பேட்டை பகுதியில் பதுங்கி இருப்பதாக வேளச்சேரி காவல் துறையினருக்கு தகவல் தெரியவந்துள்ளது. ஆந்திராவில் கே.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய குற்றவாளிகளை கைது செய்யும் தனிப்படை ஏற்கனவே முகாமிட்டு இருந்துள்ளது. இதனால் அங்குள்ள காவலர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, கண்காணிக்க கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
தப்பிச்செல்ல முயன்று காவலர்கள் நோக்கி துப்பாக்கிசூடு:
இதனையடுத்து, கே.ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தனிப்படை அதிகாரிகள், ரௌடி சீசிங் ராஜாவை அதிரடியாக கைது செய்தனர். பின் அவர் அங்கிருந்து சென்னை அழைத்து வரப்பட்டு, வேளச்சேரி காவல் நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டார். இன்று காலை காவலர்கள் அவரை விசாரணைக்காக அழைத்துச்சென்றனர். அவர் பதுக்கி வைத்திருந்த ஆயுதத்தை கைப்பற்ற நீலாங்கரையை அடுத்துள்ள அக்கரைக்கு அழைத்துச்செல்லப்பட்டபோது, புதர் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த நாட்டுத் துப்பாக்கியை எடுத்து காவல் ஆய்வாளர் இளங்கனியை நோக்கி சுட்டி இருக்கிறார்.
என்கவுண்டரில் ரௌடி பலி:
இதனால் மற்றொரு காவல் ஆய்வாளர், பாதுகாப்பு கருதி குற்றவாளியை நோக்கி இரண்டு முறை சுட்டு இருக்கிறார். இந்த சம்பவத்தில் துப்பாக்கி குண்டுகள் பாய்ந்து படுகாயமடைந்த ரௌடி சீசிங் ராஜா, மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்படுவதற்குள் பரிதாபமாக உயிரிழந்தார். ஏற்கனவே ரௌடி ராஜாவின் மனைவி, தனது கணவரை காவலர்கள் என்கவுண்டர் செய்யலாம் என அஞ்சுவதால், அவரின் உயிரை தமிழ்நாடு அரசு பாதுகாக்க வேண்டும் என வலியுறுத்தி வீடியோ வெளியிட்டு இருந்தார். இதனிடையே தான் அவர் என்கவுண்டர் செய்யப்பட்டார். Armstrong Murder Case: கே ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தொடர்புடைய ரௌடி சீசிங் ராஜா சுட்டுக்கொலை; யார் இந்த ராஜா?..
இணை ஆணையர் சிபி விளக்கம்:
இந்நிலையில், தெற்கு மண்டல இணை ஆணையர் சிபி சக்கரவர்த்தி (Sibi Chakravarthi IPS) செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது ரௌடி சீசிங் ராஜா மீது துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக அவர் பேட்டி அளிக்கையில், "காவல் ஆய்வாளர் இளங்கனியை நோக்கி சீசிங் ராஜா துப்பாக்கியால் சுட்டபோது, காவல் ஆய்வாளர் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பி இருக்கிறார். அவரது கார் மற்றும் கண்ணாடி ஆகிய இடங்களில் இரண்டு குண்டுகள் பாய்ந்தன. மற்றொரு காவல் அதிகாரி பாதுகாப்பு நடவடிக்கையாக இருட்டில் சுட்டதில் அவர் பரிதாபமாக உயிரிழந்தார். என்கவுண்டர் நடத்தப்பட்டவுடன் அவசர ஊர்தி மூலமாக சீசிங் ராஜா மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது, அவர் மரணம் உறுதி செய்யப்பட்டது.
தனிப்படையிடம் உதவி கேட்பு:
என்கவுண்டர் என்பது குற்ற செயல்களில் ஈடுபடும் நபர்களுக்கு தீர்வாக அமையாது எனினும், சில நேரங்களில் அவர்கள் காவல் அதிகாரிகளை கொலை செய்ய முயற்சிக்கும்போது, அவர்களது சுய பாதுகாப்பால் என்கவுண்டர் நடத்தப்படுகிறது. இவ்வாறான சம்பவங்கள் நடந்ததும், அவர்களின் குடும்பத்தினர் முன்கூட்டியே அதிகாரிகள் என்கவுண்டர் செய்வதாக தெரிவிப்பது ட்ரெண்டாகி வருகிறது. வேளச்சேரியைச் சார்ந்த நபர் ஒருவரை, சீசிங் ராஜா மிரட்டி விட்டு பின் ஆந்திரா சென்று தலைமறைவாகிவிட்டார். அந்த வழக்கிலேயே வேளச்சேரி காவல்துறையினர் அவரை தேடி வந்தனர். தற்போது கே. ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக அமைக்கப்பட்ட தனிப்படை, ஆந்திராவில் முகாமிட்டுள்ள நிலையில், சீசிங் ராஜா ஆந்திராவில் இருப்பது தெரியவந்தது.
ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்குக்கும் - ராஜாவுக்கும் தொடர்பு இல்லை:
இதனால் அங்குள்ள தமிழக காவலர்களுக்கு உடனடியாக தகவல் பகிரப்பட்டு, சீசிங் ராஜா இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதன் பெயரில் அவர் தனிப்படை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். கைது சம்பவத்திற்கும், ஆம்ஸ்ட்ராங் கொலைக்கும், ராஜாவுக்கும் இதுவரை எந்த தொடர்பும் இல்லை. தற்போது வரை விசாரணையில் இவர்களுக்குள் தொடர்பு இருப்பதாக தெரியவில்லை. அவரின் மீது பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து தலைமறைவில் இருந்தவர், கைதுக்கு பின் தப்பிக்க நினைத்து என்கவுண்டரில் பலியாகினர்" என தெரிவித்தார்.