செப்டம்பர் 23, நீலாங்கரை (Chennai News): சென்னையில் உள்ள பெரம்பூர் பகுதியை சேர்ந்தவர் கே. ஆம்ஸ்ட்ராங் (K Armstrong). பகுஜன் சமாஜ்வாதி கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவராகவும், வடசென்னை அரசியலில் முக்கியமானவருமாக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த ஜூலை மாதம் 05ம் தேதி 6 பேர் கும்பலால் கொடூரமாக வெட்டிப் படுகொலை செய்யப்பட்டார். அவரின் வீட்டருகே நடந்த இந்த சம்பவத்தில், மறைந்த ரௌடி ஆற்காடு சுரேஷின் சகோதரர் பொண்ணை பாலா மற்றும் அவரது தலைமையிலான கூட்டாளிகள் கைது செய்யப்பட்டனர். மேலும், பாஜக, காங்கிரஸ், அதிமுக, திமுக உட்பட பல கட்சிகளை சேர்ந்த பிரமுகர்களும், வழக்கறிஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
குற்றவாளிகள் விபரம்:
மொத்தமாக இந்த விவகாரத்தில் பொண்ணை பாலா, திருவேங்கடம், ஹரிஹரன், மலர்க்கொடி, சதிஷ் குமார், ஹரிஹரன், அஞ்சலை, சிவா, பிரதீப், முகிலன், விஜயகுமார், விக்னேஷ், அஸ்வத்தாமன், போர்க்கொடி, ராஜேஷ், செந்தில் குமார், கோபி என 29 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 25 பேரின் மீது குண்டாஸ் சட்டம் பாய்ச்சப்பட்டுள்ளது. தலைமறைவாக இருந்த ரௌடி ஆற்காடு சுரேஷின் நண்பர் சீசிங் ராஜா (Rowdy Seizing Raja) தேடப்பட்டு வந்தார். இந்த கொலை சம்பவத்தில் பல கட்டப் பஞ்சாயத்து மற்றும் முன்விரோதம் காரணமாகவே கொலை நடந்துள்ளது தெரியவந்துள்ளது. மேற்படி விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. Tirupattur Shocker: மின்வேலியில் சிக்கி வேட்டைக்கு சென்ற தந்தை-மகன் உட்பட 3 பேர் பலி.. திருப்பத்தூரில் துயரம்.!
முதல் என்கவுண்டர்:
இதனிடையே, கடந்த சில வாரங்களுக்கு முன்னதாக ரௌடி திருவேங்கடம், விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டபோது காவலர்களை தாக்கிவிட்டு தப்பியோட முயன்றதால் என்கவுண்டர் செய்யப்பட்டார். இதில் அவர் உயிரிழந்த நிலையில், ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் முதல் குற்றவாளி என்கவுண்டர் செய்யப்பட்டது கைதானவர்களிடம் அச்ச உணர்வை ஏற்படுத்தி பல உண்மைகளையும் வெளிப்படுத்தி இருந்தது. இதனிடையே, ரௌடி ராஜா என்ற சீசிங் ராஜாவை காவல்துறையினர் ஆந்திராவில் வைத்து கைது செய்தனர்.
இரண்டாவது என்கவுண்டர்:
நேற்று அவர் சென்னை அழைத்து வரப்பட்ட நிலையில், வேளச்சேரி காவல்துறையினரால் நீலாங்கரை, அக்கரை பகுதிக்கு விசாரணைக்கு அழைத்துச்செல்லப்பட்டார். அங்கு விசாரணையின்போது காவலர்களை தாக்கிவிட்டு தப்பிச்செல்ல முயற்சிக்கவே, பாதுகாப்புக்காக நடந்த துப்பாக்கிசூட்டில் ரௌடி சீசிங் ராஜா பலியாகினர். அவரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டது. பலியான ரௌடி ராஜாவின் மீது 5 கொலை வழக்குகள், பல கட்டப்பஞ்சாயத்து வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன.
யார் இந்த ராஜா @ சீசிங் ராஜா:
செங்கல்பட்டு பகுதியை சேர்ந்த ராஜா, தொடக்க காலத்தில் வழிப்பறி உட்பட குற்றங்களில் ஈடுபட்டு வந்துள்ளார். பின் ஒருகட்டத்தில் தனது தரப்பில் கூட்டாளிகளை இணைத்து தொழிலதிபர்களை மிரட்டுதல், ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் நபர்களை கடத்துதல் என சரித்திர பதிவேடு குற்றவாளியாக மாறி இருக்கிறார். இவரின் மீது தாம்பரம், சிட்லபாக்கம், கூடுவாஞ்சேரி, சேலையூர், செங்கல்பட்டு, புளியந்தோப்பு, ராஜாமங்கலம், தென் சென்னையில் உள்ள வெவ்வேறு காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. 7 முறை குண்டர் தடுப்புச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டவர், இறுதியில் என்கவுண்டரில் பலியாகி இருக்கிறார்.