CV Ganeshan Latest Statement: வடமாநில தொழிலாளர்களுக்கு தமிழகத்தில் பாதுகாப்பு பிரச்சனையா?.. அமைச்சர் சி.வெ கணேசன் அதிரடி விளக்கம்.! சிலருக்கு கடும் எச்சரிக்கை..!!

தமிழ்நாட்டில்‌ வடமாநில தொழிலாளர்கள்‌ எவருக்கும்‌ எந்தவித அச்சுறுத்தலும்‌ இல்லை, அவர்கள்‌ சிறப்பான பங்களிப்பை வழங்கி வருகிறார்கள்‌ என தொழிலாளர்‌ நலன்‌ மற்றும்‌ திறன்‌ மேம்பாட்டுத்‌ துறை அமைச்சர்‌ சி.வெ.கணேசன்‌ தெரிவித்துள்ளார்.

Minister C.V Ganeshan | North Indian Workers File Pic (Photo Credit: ANI / Quora)

மார்ச் 03, தலைமை செயலகம்: வந்தாரை வாழ வைக்கும் தமிழகம் என்ற அடைமொழியோடு இருந்து வரும் தமிழ்நாட்டில், பல மாநிலங்களை சார்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வருகின்றனர். கடந்த சில ஆண்டுகளாகவே வடமாநில தொழிலாளர்களின் வருகை என்பது கட்டுக்கடங்காத அளவு அதிகரித்து இருப்பது நிதர்சனமாகி வருகிறது. சென்னை, திருப்பூர், மதுரை போன்ற பெரு நகரங்களில் மட்டுமல்லாது கிராமங்கள் வரையிலும் அவர்கள் தங்களால் இயன்ற பணிகளை செய்து பிழைக்க தொடங்கிவிட்டார்கள்.

இதனால் தமிழர்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என ஒருபுறம் போர்க்கொடி தூக்கினாலும், அடித்தட்டில் இருக்கும் தமிழக தொழிலாளர்கள் பாதிக்கப்படுவது நிதர்சனமாகியுள்ளது. அவர்களின் வருகையை தடுக்க இயலாது என்றாலும், அதற்கான திட்டங்களை அரசு வகுக்க வேண்டும் என பல ஆண்டுகளாக குரல்கள் ஒலித்து வருகிறது. இதற்கிடையே, அவ்வப்போது வடமாநில தொழிலாளர்கள் தமிழர்களை தாக்குவதாகவும், தமிழக தொழிலாளர்கள் வடமாநில தொழிலாளர்களை தாக்குவதாகவும் செய்திகள் வெளியாகி வருகின்றன. சமீபத்தில் கூட பீகார் மாநில இளைஞர்கள் தாக்கப்பட்டதாக செய்தி வெளியாகி அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளன. EVKS Elangovan Meets MK Stalin: முதலமைச்சர் மு.க ஸ்டாலினை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்ற ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்..!

இந்த விஷயம் தொடர்பாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வெ கணேசன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "பெருந்தொழில்‌ மற்றும்‌ சிறு தொழில்‌ நிறுவனங்கள்‌ பல ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில்‌ பெருமளவில்‌ முதலீடு செய்து வந்து அதில்‌ பல மாநிலங்களிலிருந்தும்‌ தொழிலாளர்கள்‌ வந்து அமைதியான சூழ்நிலையில்‌ பணியாற்றி மாநிலத்தின்‌ வளர்ச்சிக்கு பெரும்‌ பங்காற்றி வருகின்றார்கள்‌. அதேபோல்‌, மேம்பாலக்‌ கட்டுமானம்‌, மெட்ரோ ரயில்‌ உள்ளிட்ட பல்வேறு முக்கிய துறைகளிலும்‌ வட மாநில தொழிலாளர்கள்‌ பெருமளவில்‌ ஈடுபட்டு அந்தத்‌ துறைகளின்‌ வளர்ச்சிக்கு தங்களது பங்களிப்பை வழங்கி வருகின்றார்கள்‌.

அந்தத்‌ தொழிலாளர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும்‌ அந்தந்த நிறுவனங்கள்‌.வழங்கி வருகின்றன. அனைத்து நிறுவனங்களிலும்‌ தமிழ்நாடு அரசின்‌ தொழிலாளர்‌ நலச்‌ சட்டங்கள்‌ கடைபிடிக்கப்படுவதை துறை மூலமாக உறுதி செய்யப்படுகிறது. தமிழ்நாட்டிற்கு வருபவர்களை நேசக்‌ கரம்‌ கொண்டு வரவேற்பது தான்‌ தமிழ்‌ மக்களின்‌ பண்பாடு மற்றும்‌ நடைமுறை, விருந்தோம்பலுக்குப்‌ பெயர்பெற்ற தமிழ்நாட்டு மக்களும்‌, தொழிலாளர்‌ நலன்‌ காக்கும்‌ தமிழ்நாடு அரசும்‌ இந்த உடலுழைப்புத்‌ தொழிலாளர்களின்‌ பங்களிப்பை நன்கு உணர்ந்து இருப்பதால்‌, இணக்கமான, அமைதியான சூழ்நிலையில்‌ இங்கு அனைவரும்‌ வாழ்ந்து வருகிறார்கள்‌.

இந்தச்‌ சூழ்நிலையில்‌ சில சமூக வலைதளங்களில்‌ உண்மைக்கு மிகவும்‌ மாறான, தவறான உள்நோக்கத்தோடு, வடமாநில தொழிலாளர்கள்‌ தமிழ்நாட்டில்‌ சில இடங்களில்‌ தாக்கப்படுவதாக விஷமத்தனமான செய்தி சிலரால்‌ பரப்பப்பட்டு வருகிறது. இதில்‌ எந்தவிதமான உண்மையும்‌ இல்லை என்பதை தமிழ்நாட்டில்‌ இருக்கும்‌ வடமாநிலத்தவர்‌ உள்ளிட்ட அனைவரும்‌ அறிவார்கள்‌. தொழில்‌ அமைதிக்கும்‌, சமூக அமைதிக்கும்‌ எப்போதும்‌ பெயர்பெற்று விளங்கும்‌ தமிழ்நாட்டில்‌ இதுபோன்ற நிகழ்வுகள்‌ நடைபெற்றதாக செய்தி பரப்புபவர்கள்‌ மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாட்டில்‌ வடமாநில தொழிலாளர்கள்‌ மட்டுமல்ல எல்லா மாநில தொழிலாளர்களும்‌ எவ்வித அச்சமுமின்றி அமைதியாக, சிறப்பாகப்‌ பணியாற்றி வருகிறார்கள்‌ என்பதைத்‌ தெரிவித்துக்கொள்கிறேன்‌" என தெரிவிக்கப்பட்டுள்ளது.