Fake NCC Camp Case: கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை; அதிரடி உத்தரவு பிறப்பித்த தனியார் பள்ளி இயக்குனரகம்.!
தனியார் பள்ளிகளில் எந்தவித முகாம் நடத்தினாலும், பெற்றோரின் அனுமதியும், மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியும் பெற வேண்டும் என தனியார் பள்ளிகள் இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆகஸ்ட் 20, காவேரிப்பட்டினம் (Krishnagiri News): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள காவேரிப்பட்டினம் (Kaveripattinam) பகுதியில் வசித்து வருபவர் சிவராமன். இவர் நாம் தமிழர் கட்சியின் கிருஷ்ணகிரி மாவட்ட இளைஞர் பாசறை செயலாளராக இருந்து வந்தார். மேலும், கிருஷ்ணகிரி மற்றும் அதனை சுற்றியுள்ள தனியார் பள்ளிகளில், தேசிய மாணவர் படை (National Cadet Corps NCC) அமைப்பின் பயிற்றுநராகவும் விளங்கி வந்துள்ளார். இவர் 10க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாக எழுந்த புகாரில் காவல்துறை வழக்குப்பதிந்து விசாரணையை தீவிரப்படுத்தியது. இந்த சம்பவத்தை பள்ளி நிர்வாகமும் மூடி மறைத்த நிலையில், அனைத்து மகளிர் காவல் நிலைய எஸ்ஐ சூரியகலா விசாரணை நடத்தி போக்ஸோ பிரிவின் கீழ் என்சிசி பயிற்சியாளர் சிவராமன் மற்றும் பள்ளியின் முதல்வர் சதீஷ்குமார் ஆகிய இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்தார். இதில் இதுவரை 9 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தனியார் பள்ளி இயக்குனரக உத்தரவு: இந்த நிலையில், தனியார் பள்ளிகளில் அனுமதி இன்றி என்சிசி போன்ற முகாம்களை நடத்தக்கூடாது என்று தனியார் பள்ளிகள் இயக்குநரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து பள்ளிகள் இயக்குநரகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாடு தனியார் பள்ளிகள் இயக்குநர் பழனிசாமி அனைத்து மாவட்ட கல்வி அலுவலர்களுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், மெட்ரிகுலேசன், சி.பி.எஸ்.சி உள்ளிட்ட தனியார் சுயநிதிப் பள்ளிகளில் NSS, NCC. Scout & Guide மற்றும் JRC போன்ற அமைப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. அவ்வாறான அமைப்புகளின் செயல்பாடுகளை பள்ளிகளில் செயல்படுத்த மாநில அமைப்பிடம் முறையாகப் பதிவு செய்து அனுமதி பெற்றிருக்க வேண்டும். Tamilnadu Shocker: 13 பள்ளி மாணவிகளை சீரழித்த அரசியல் கட்சி பிரமுகர்.. தமிழகமே அதிர்ச்சி.. என்.சி.சி வகுப்பு பேரில் அட்டூழியம்.!
மேலும், அமைப்புகளின் செயல்பாடுகளை செயல்படுத்த, மாநில அமைப்பு மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் பள்ளியில் இருத்தல் வேண்டும். மாநில அமைப்பு மூலம் முறையாக பயிற்சி பெற்ற ஆசிரியர்கள் இல்லாமல் எந்தவொரு அமைப்பும் பள்ளியில் செயல்படக்கூடாது. இந்த அமைப்புகளின் மூலமாக மாணவ, மாணவியர்களுக்கு பயிற்சி அளிக்கும் போது, மாணவர்களுக்கு ஆண் ஆசிரியர்கள் மூலமாகவும், மாணவிகளுக்குப் பெண் ஆசிரியைகள் மூலமாகவும் மட்டுமே பயிற்சிகள் மற்றும் செயல்பாடுகள் வழங்கப்பட வேண்டும்.
இவ்வமைப்புகள் சார்ந்த அனைத்து செயல்பாடுகளும், மாநில அமைப்பால் வழங்கப்படும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே பயிற்சி முகாம் நடத்தப்பட வேண்டும். அமைப்புக்களின் செயல்பாடுகள் பள்ளி வளாகத்திற்கு உள்ளேயோ அல்லது வெளியேயோ, மாவட்ட அளவில் அல்லது மாநில அளவில் முகாம்கள் நடத்தப்படும் போது, உரிய அமைப்பைச் சார்ந்த (NSS, NCC, Scout & Guide மற்றும் JRC) மாவட்ட, மாநில பொறுப்பாளரின் கடிதத்தின் அடிப்படையில் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலருக்கு தனியார் பள்ளிகள் அனுப்பி ஒப்புதல் பெறப்படவேண்டும்.
மாவட்ட, மாநிலப் பொறுப்பாளர்கள், மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதி இல்லாமல் எந்தவொரு முகாமும், பயிற்சியும் நடத்த ஏற்பாடு செய்யக் கூடாது. பள்ளி அளவிலோ, மாவட்ட மற்றும் மாநில அளவிலோ முகாம்கள் நடத்தப்படும் போது மாணவர்கள் பாதுகாப்பிற்கு ஆண் ஆசிரியர்களும், மாணவியர்கள் பாதுகாப்பிற்கு பெண் ஆசிரியர்களும் சார்ந்த அமைப்பின் விதிமுறைகளின்படி போதிய எண்ணிக்கையில் நியமிக்கப்பட வேண்டும். K Armstrong Murder Case: கே. ஆம்ஸ்ட்ராங் கொலை விவகாரம்; இயக்குனர் நெல்சன், நெல்சனின் மனைவியிடம் விசாரணை.!
ஆசிரியர்களின் பாதுகாப்பின்றி எந்தவொரு அமைப்பு சார்பாகவும் மாணவ, மாணவியர்களை முகாம்களில் ஈடுபடுத்தக்கூடாது. மேலும், பயிலும் பள்ளியிலோ அல்லது வெளியிடங்களிலோ முகாம் நடத்தப்பட வேண்டியிருப்பின், ஒவ்வொரு மாணவ, மாணவியரின் பொற்றோரிடமும் தனித்தனியாக எழுத்துப்பூர்வமாக அனுமதி பெறப்பட்டு அதன் பிறகே மாவட்டக் கல்வி அலுவலரிடம் ஒப்புதல் பெறப்பட வேண்டும்.
மேலும், பெற்றோர்கள் மற்றும் சார்ந்த மாவட்டக் கல்வி அலுவலரின் அனுமதியின்றி மாணவ, மாணவியரை முகாம்களுக்கு அழைத்துச் செல்லக்கூடாது என்பதை அனைத்துப் பள்ளிகளுக்கும் தனியார் பள்ளிகள் அலுவலர் தெரிவிக்க வேண்டும். தனியார் பள்ளிகள் இந்த விதிமுறைகளை மீறி செயல்பட்டால் அந்தப் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும்'' என்று குறிப்பிடப்பட்டுள்ளது.