Bus Accident: அதிவேகமாக வளைவில் திரும்பியதால் சோகம்; பேருந்து கவிழ்ந்து திருமண வீட்டார் 10 பேர் பலி, 20 பேர் படுகாயம்..!
அதிவேகமாக பயணித்த பேருந்து வளைவில் வேகம் குறையாமல் இயக்கப்பட்டதால், நிலைதடுமாறி கவிழ்ந்து 10 பேர் மரணமடைந்த சோகம் நடந்துள்ளது.
ஜூன் 12, நியூ சவுத் வேல்ஸ் (Australia News): ஆஸ்திரேலியாவில் உள்ள நியூ சவுத் வேல்ஸ் மாகாணம், ஹண்டர் நகர் பகுதியின் புறவழி தேசிய நெடுஞ்சாலைல்யில் சுமார் 40 க்கும் மேற்பட்ட பயணிகளை ஏற்றிக்கொண்டு பேருந்து ஒன்று பயணம் செய்தது.
இந்த பேருந்து சிட்னி நகரில் இருந்து 180 கி.மீ தொலைவில் பயணித்தபோது, தேசிய நெடுஞ்சாலையின் வளைவில் அதிவேகமாக திரும்பியுள்ளது. இந்த விபத்தில் பேருந்து அதிவேகமாக சென்றதால் ஒருபக்கமாக சாய்ந்து விபத்திற்குள்ளானது.
இதனால் பேருந்தில் பயணம் செய்த 10 பேர் பலியாகிவிட, 20 பேர் படுகாயத்துடன் உயிருக்கு போராடியுள்ளனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர், மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். விபத்தில் உயிர்பிழைத்த ஓட்டுநர் விசாரணைக்கு பின்னர் கைது செய்யப்பட்டார்.
பேருந்தில் திருமண குழுவினர் பயணம் செய்த நிலையில், அவர்களில் 10 பேர் பலியாகியுள்ளது குடும்பத்தினரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விபத்தில் உயிரிழந்தோருக்கு அந்நாட்டின் பிரதமர் ஆண்டனி அல்பானீஸ் இரங்கல் தெரிவித்துள்ளார்.