Goat Plague Outbreak: குரங்கம்மையை தொடர்ந்து ஆடுகளுக்கு பரவுகிறது பிளேக் நோய்; மனிதர்களுக்கும் ஆபத்தா? விபரம் உள்ளே.!
தெற்கு ஐரோப்பிய நாடுகளில் ஆடுகளுக்கு பரவி வரும் பிளேக் நோய் காரணமாக, பல்லாயிரக்கணக்கான ஆடுகள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அழிக்கப்பட்டு வருகின்றன.
ஆகஸ்ட் 23, லண்டன் (World News): உலகளவில் குரங்கம்மை எனப்படும் எம்.பாக்ஸ் (Mpox) வைரஸ், 126 க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி இருப்பதாகவும், இது தொடர்ந்து பரவி வருவதால் சர்வதேச நாடுகள் கவனமாக இருக்குமாறும் உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனையடுத்து, இந்தியாவில் மத்திய & மாநில அரசுகள் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. நோய் பாதிக்கப்பட்ட நாடுகளில் இருந்து வருவோருக்கு குரங்கம்மை பாதிப்பு உள்ளதா? என மருத்துவ சோதனையும் நடத்தப்படுகிறது.
கொத்துகொத்தாக மரணம்:
இதனிடையே, ஐரோப்பிய யூனியனில் இருக்கும் தெற்கு ஐரோப்பிய நாடுகளில் ஆடு பிளேக் (Goat Plague) எனப்படும் நோய் பரவுகிறது. இதனால் அங்கிருந்து ஆடுகளை இறக்குமதி செய்ய பிராந்திய அளவிலான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. கொடிய கொள்ளை நோயாக கருதப்படும் பிளேக் வகைகளில், ஆடு பிளேக் நோய் தற்போது வரை ஆடுகளிடையே அதிகளவில் பரவி வருகிறது. இதனால் கொத்துகொத்தாக ஆயிரக்கணக்கில் ஆடுகள் நோய்வாய்ப்பட்டு மரணிக்கின்றன. இதனால் வைரஸ் மேற்படி பரவாமல் தடுக்க தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
ஆடு பால் பொருட்களின் இறக்குமதி தடை:
தற்போதைய நிலையில் தெற்கு ஐரோப்பிய நாடுகளில் வெகுவாக பரவியுள்ள நிலையில், அதிக இறப்பு விகிதத்தை கொடுப்பதால் பாதுகாப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதனால் ஆடு இறைச்சி, ஆடு பால் பொருட்களின் இறக்குமதிக்கு இங்கிலாந்து அரசு தடை விதித்து இருக்கிறது. இதனால் கிரீஸ் மற்றும் ருமேனியா நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் இறைச்சிகள், பால் பொருட்களுக்கு தடை அமல்படுத்தப்பட்டுள்ளது.
ஆடுகளை கொன்று அழிக்கவும் திட்டம்:
ஆடு பிளேக் நோயை பொறுத்தமட்டில் அறிவியல் ரீதியாக இவை பெஸ்டே டெஸ் பெட்டிட்ஸ் ரூமினண்ட்ஸ் (Peste Des Petits Ruminants) என அழைக்கப்படுகிறது. இவை கால்நடைகளை மட்டும் குறிவைத்து தாக்கும் தன்மை கொண்டவை. இதனால் மனிதர்களுக்கு தற்போது வரை வைரஸ் பரவவில்லை. அதேவேளையில், நோய்ப்பாதிப்பு இருக்கும் ஆட்டின் இறைச்சிகளை சாப்பிடாமல் இருப்பது, வேறு வழியான சிக்கலை தவிர்க்க உதவி செய்யும் என்பதால் தடை விதிக்கப்ட்டுள்ளது. ஆடுகள் கடுமையான அளவு இறக்கும் எனவும் தெரியவருகிறது. இதனால் கால்நடை பண்ணை உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கவலை அடைந்துள்ளனர். வைரஸ் கட்டுக்கடங்காமல் பரவுதலை தடுக்க, ஆடுகளை கொன்று அழிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. கிரீஸ் நாட்டில் ஆடுகளின் பால் மற்றும் அது சார்ந்த உற்பத்தி பொருட்கள் முக்கிய வணிகமாக கவனிக்கப்படுகிறது. தற்போது ஆடுகளிடம் பரவும் நோய் காரணமாக அதன் வணிகம் தடைபட்டு, கிரேக்க நாடு எதிர்பாராத பொருளாதார இழப்பு சார்ந்த சிக்கலையும் எதிர்கொள்ளவுள்ளது.