Russia-Ukraine War: ரஷ்யா- உக்ரைன் போர்.. மிரள வைக்கும் பலி எண்ணிக்கைகளின் புள்ளி விவரம்..!

ரஷ்ய - உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையிலும், தீவிரமாக யுத்தம் நடைபெற்று வருகிறது.

Russia-ukraine war file pic (Photo Credit: Twitter)

நவம்பர் 19, பாம்பு தீவு (World News): கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் உக்ரைன் மீது ரஷ்யா போரைத் தொடங்கியது, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளின் ஆதரவுடன் உக்ரைனும் பதிலடி கொடுத்து வரும் நிலையில், இரண்டு வருடங்கள் ஆகியும் போரின் (Ukraine-Russia War) தீவிரம் குறையவில்லை. இந்நிலையில், ரஷ்யாவின் எல்லைக்குள் சுமார் 30 கிலோ மீட்டர் தூரம் உக்ரைன் படைகள் நுழைந்ததாக தகவல் வெளியானது.

ரஷ்யா- உக்ரைன் போர்: ரஷ்யாவின் குர்ஸ் பிராந்தியத்தில் (Kursk region) அமைந்துள்ள சட்ஜா நகரை (Sudzha town) தனது படைகள் முழுமையாக கைப்பற்றியுள்ளதாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி அறிவித்து இருந்தார். இதனிடையே, உக்ரைனின் மத்திய பகுதியைக் குறிவைத்து ரஷ்யா நடத்திய ஏவுகணை தாக்குதலில் உக்ரைன் போர் வீரர்கள் உள்பட 51 பேர் பலியாகினர். 270-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலுக்கு உக்ரைன் அதிபர் வொலொடிமிர் ஜெலன்ஸ்கி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். Sri Lanka PM Harini Amarasuriya: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் 2024.. புதிய பிரதமராக ஹரிணி அமரசூரிய பதவியேற்பு..!

ட்ரோன் தாக்குதல்: சமீபத்தில், மாஸ்கோ மற்றும் ரஷ்யாவின் டொரோபெட்ஸில் உள்ள இராணுவ தளத்தின் மீது உக்ரைன் ட்ரோன் தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைன் மேற்கொண்ட தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என ரஷ்ய தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக, உக்ரைனின் எரிசக்தி உள்கட்டமைப்புகளை குறிவைத்து 200-க்கும் மேற்பட்ட ட்ரோன்கள் மூலம் ரஷ்யா தாக்குதலை நடத்தியது. மேலும் கருங்கடலில் உள்ள பாம்பு தீவு அருகே ரஷ்ய ராணுவத்துடன் உக்ரேனியப் படைகள் கடுமையான மோதலில் ஈடுபட்டு வருகின்றனர்.

யுனிசெஃப் தகவல்: இந்நிலையில் தற்போது, யுனிசெஃப் (UNICEF) வெளியிட்டிருக்கும் தகவலின்படி, ரஷ்ய - உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டும் நிலையில், இதுவரை 659 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளனர். ஒவ்வொரு வாரமும் குறைந்தது 16 குழந்தைகள் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 1000 நாட்களில், குறைந்தது 1,496 கல்வி நிறுவனங்கள், 662 சுகாதார வசதிகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.