Vettaiyan Special Show: ரஜினி ரசிகர்களுக்கு உற்சாக செய்தி; வேட்டையன் சிறப்புக் காட்சிக்கு தமிழ்நாடு அரசு அனுமதி.!
ரஜினிகாந்தின் நடிப்பில் நாளை வெளியாகவுள்ள வேட்டையன் திரைப்படத்திற்கு, தமிழ்நாடு அரசு ஒருநாள் மட்டும் சிறப்புக்காட்சி திரையிட்டுக்கொள்ள அனுமதி வழங்கி இருக்கிறது.
அக்டோபர் 02, சென்னை (Cinema News): ஜெய் பீம் இயக்குனர் டிஜெ ஞானவேல் இயக்கத்தில், அனிருத் ரவிச்சந்தர் இசையில், நடிகர்கள் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் (Rajinikanth), அமிதாப் பச்சன், பகத் பாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியார் (Manju Warrier), ரித்திகா சிங், துஷாரா விஜயன், அபிராமி உட்பட பலர் நடிக்க, லைகா புரொடக்சன்ஸ் தயாரிப்பில், ரூ.160 கோடி செலவில் உருவாகியுள்ள திரைப்படம் வேட்டையன் (Vettaiyan). அக்.10, 2024 அன்று உலகளவில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் உட்பட பல மொழிகளில் வெளியாகவுள்ள திரைப்படத்தின் டிரைலர் காட்சிகள் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. Vettaiyan: "அமிதாப் பச்சன் முதல் பெஞ்ச் மாணவர், ரஜினி சார் கடைசி பெஞ்ச்" வேட்டையன் இயக்குநர் ஞானவேல்.!
வரவேற்பை பெற்ற பாடல் & ட்ரைலர்:
பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வுகண்டு என்கவுண்டர் செய்யும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ள ரஜினிகாந்த், என்கவுன்டரை கட்டுப்படுத்த நினைக்கும் அதிகாரியான அமிதாப் பச்சன் ஆகியோரின் காட்சிகள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தில் இடம்பெற்ற 'மனசிலாயோ' பாடலும் வைரலாகி இருக்கிறது. இதனிடையே, படம் நாளை வெளியாகவுள்ள நிலையில், சிறப்புக்காட்சிக்கு அனுமதி கேட்டு கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
சிறப்புக்காட்சிக்கு அனுமதி:
இந்நிலையில், நாளை திரையரங்குகளில் வெளியாகும் வேட்டையன் திரைப்படத்திற்கு, சிறப்பு காட்சிக்கு அனுமதி வழங்கி தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, நாளை காலை 9 மணிக்கு சிறப்புக்காட்சி வெளியிட தமிழ்நாடு அரசு சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை ஒருநாள் மட்டுமே சிறப்புக்காட்சி திரையிடப்பட வேண்டும் எனவும் அரசின் சார்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.