Kirayapathiram: கிரயப்பத்திரம் பதிவு செய்வோர் கவனத்திற்கு.. இந்த விஷயங்களை தெரிஞ்சிக்கிட்டு போங்க..!
பத்திரங்களில் முக்கியமான அம்சங்களை கொண்ட கிரைய பத்திரம் பதிவு செய்யும் நேரத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.
டிசம்பர், 10: நம்மில் பலரும் நமது சொத்துக்களை (Land Property) பிள்ளைகளுக்கோ, பேரக்குழந்தைகளுக்கோ வாரிசு அடிப்படையில் எழுதி கொடுப்போம். அதனைப்போல, நமது அவசர தேவைக்காக அல்லது எதிர்காலம் கருதி சில நேரங்களில் நமது சொத்துக்களை விற்பனை செய்யும் தருணமும் வரும். இவ்வாறான தருணங்களில் நாம் எப்படி செயல்பட வேண்டும் என்பது பலருக்கும் தெரியாத விஷயமாகவே இருக்கிறது.
அந்த வகையில், பத்திரங்களில் முக்கியமான அம்சங்களை கொண்ட கிரைய பத்திரம் பதிவு செய்யும் நேரத்தில் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து இன்று தெரிந்துகொள்ளலாம்.
கிரயப்பத்திரம் (Kirayapathiram / Purchase Deed): கிரயப்பத்திரம் என்பது நிலத்தினை ஒருவரிடம் இருந்து விலைகொடுத்து வாங்கி, நமது பெயருக்கு மாற்றி தர பதிவு செய்யப்படும் ஆவணம் அல்லது நிலம் நமது பெயருக்கு மாறியதற்கான ஆவணம் கிரயப்பத்திரம் ஆகும். இந்த படிவத்தினை முத்திரை தாளில் எழுதி சார்பதிவாளர் அலுவலகத்தில் சாட்சிகளின் முன்னிலையில் பதிவு செய்வது கிரய பத்திர பதிவு என்று அழைக்கப்படும்.
கவனிக்க வேண்டியது: நிலத்தை எழுதி நமக்கு கொடுப்பவரின் பெயர் மற்றும் அவரது தந்தை பெயர், அடையாள அட்டை, மின் இணைப்பு & பட்டா விபரங்கள், இதர ஆவணங்கள் போன்றவற்றில் பெயர் அனைத்தும் சரியாக குறிப்பிடப்பட்டுள்ளனவா? என்பதை சோதனை செய்ய வேண்டும்.
விற்பனையாளரின் முகவரி முன்பு வாங்கிய கிரயப்பத்திரத்தில் உள்ளதைப்போல, அவருடைய முகவரியும் ஒன்றா? என சோதிக்க வேண்டும். இரண்டு வேறுபட்ட முகவரிகள் இருந்தால் எந்த முகவரி என குறிப்பிட வேண்டும். Chennai Floods: சென்னை நீரில் மூழ்க காரணம் என்ன?.. மர்மமா? சாபமா?.. உண்மை நிலவரம் எப்படி?..!
நிலத்தை வாங்கிக்கொள்பவரும் தனது பெயர், முகவரி, அடையாள ஆவணங்களில் சரியாக உள்ளதை உறுதி செய்து, அதன்படி எழுதி வாங்கிக்கொள்ள வேண்டும். பிழைகள் இருந்தால் அவை பின்னாட்களில் தேவையில்லாத நேர விரய அலைச்சலை ஏற்படுத்தலாம்.
நிலத்தை எழுதிக்கொடுக்கும் நபருக்கு சொத்து எப்படி கிடைக்கபெற்றது என்பதை ஆராய்ந்தால் அது வேறு நபரிடம் இருந்து வந்ததா? குடும்ப சொத்து பாகம் பிரிக்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டுவிட்டதா? உயில் தானத்தில் கிடைக்கப்பெற்றதா? ஏலம், நீதிமன்ற தீர்ப்பில் கிடைத்ததா? பூர்வீக சொத்தா? என்பதை உறுதி செய்ய வேண்டும். அதனை ஆவணத்துடன் குறிப்பிட்டு இருக்க வேண்டும்.
கிரயத்தில் உண்மை தொகையை எழுத வாய்ப்புகள் இருக்கும் பட்சத்தில் அதனையே தெளிவாக வங்கிக்கணக்கில் பரிமாற்றம் செய்யப்பட்டது / ரொக்கமாக கொடுக்கப்பட்டது என தனித்தனியே குறிப்பிடுவது நல்லது. நிலத்தை கிரயம் செய்பவரும், கொடுப்பவரும் தானம், அடமானம், உயில், சொத்து ஜப்தி, வங்கி கடன்கள், தனியார் கடன்கள், வாரிசு உரிமை, சிவில் - கிரிமினல் வழக்குகள், நில உச்ச வரம்பு கட்டுப்பாடு, பிற வில்லங்கங்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்தி இருவரும் கலந்துகொள்ள வேண்டும்.
பணம் கைமாறிவிட்டது, வரிகள் கொடுக்கப்பட்டுவிட்டன, ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டுவிட்டது என்றாலும், எதிர்காலத்தில் பிழைகள் அல்லது திருத்தும் இருப்பின் நிலத்தை கொடுப்பவர் எந்த விதமான எதிர்கால எதிர்பார்ப்பும் இல்லாமல் மீண்டும் எழுதி கொடுப்பேன் என உறுதி அளிக்க வேண்டும்.
நமது சொத்தின் விவரத்தில் தெளிவான வகையில் மாவட்டம், வட்டம், கிராமம், புல எண் என அனைத்தையும் கொடுக்க வேண்டும். வீட்டு கதவு எண், மின்னிணைப்பு எண், சர்வே எண் புதியது/பழையது போன்றவற்றையும் குறிப்பிட வேண்டும். நிலத்தின் அளவு நாட்டு வழக்கப்படி, ஆங்கிலேயர் & மெட்ரிக் அளவுப்படியும் இருக்க வேண்டும்.
கிரயமாகும் சொத்தினை சுற்றிலும் நான்திசையில் இருக்கும் சொத்துக்களின் விபரம் பிழை இல்லாமல் அடையாளப்படுத்தப்பட்ட வேண்டும். நீள அகலங்களும் முக்கியம். பத்திரத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் நிலத்தை எழுதி கொடுப்பவர் கையெழுத்திட்டு இருக்கிறாரா? என்பதை சோதனை செய்ய வேண்டும். சாட்சியங்களின் விபரமும் இருக்க வேண்டும்.
பட்டா, நிலத்தின் வரைபடம், சம்பந்தப்பட்டவர்களின் அடையாள அட்டை நகலுடன் பத்திரம் இணைக்கப்பட்டுள்ளதா? கையெழுத்துகள் சரியாக உள்ளதா? முத்திரை தாள், டிடி, ஆவண எழுத்தாளர், வழக்கறிஞர், ஆவணத்தை தயாரித்தவர் என அனைவரின் கையெழுத்துக்கள் மற்றும் சான்றிதழ்கள் சரியாக உள்ளதா? என்பதையும் சோதனை செய்து சமர்ப்பிக்க வேண்டும்.