Software Engineer Dies By Suicide: ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சம் இழப்பு.. சாப்ட்வேர் இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை..!
ஆந்திர பிரதேசத்தில் ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ.24 லட்சத்தை இழந்த சாப்ட்வேர் இன்ஜினியர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
அக்டோபர் 14, திருமலை (Andhra Pradesh News): ஆந்திர பிரதேச மாநிலம், அன்னமய்யா (Annamayya) மாவட்டம் திகுவகாலிகுட்டாவை சேர்ந்தவர் பத்மநாபரெட்டி (வயது 27). இவர் பெங்களூருவில் உள்ள ஒரு நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் (Software Engineer) வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த சில மாதங்களாக இவர் ஆன்லைன் சூதாட்டத்தில் (Online Gambling) ஈடுபட்டுள்ளார். இதில், பல்வேறு கட்டங்களாக ரூ. 24 லட்சத்தை இழந்துள்ளார். இதற்காக பலரிடம் கடன் வாங்கி வந்துள்ளார். ஆனால், சூதாட்டத்தில் பணத்தை இழந்ததால், கடனை திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டுள்ளார். Fire Crackers Ban In Delhi: டெல்லியில் பட்டாசு வெடிக்க தடை.. மாசுக் கட்டுப்பாட்டு குழு அதிரடி உத்தரவு..!
இதனால் மிகவும் மனமுடைந்த அவர், கடந்த அக்டோபர் 11-ஆம்தேதி இரவு, ரெட்டிவாரிபள்ளே என்ற இடத்திற்கு சென்று அவ்வழியாக வந்த ரயில் முன் பாய்ந்து தற்கொலை (Suicide) செய்துகொண்டார். இதுகுறித்து, தகவலறிந்து வந்த காவல்துறையினர் பத்மநாபரெட்டியின் சட்டை பாக்கெட்டில் இருந்த ஒரு கடிதத்தை கைப்பற்றினர்.
அதில், ‘ஆன்லைன் சூதாட்டத்தில் ரூ. 24 லட்சம் பணத்தை இழந்தேன். தயவு செய்து யாரும் ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபட வேண்டாம். அது மிகவும் ஆபத்தானது, பந்தயம் கட்டும் மாஃபியாவின் போன் நம்பர், வங்கி கணக்கு விவரங்களை சொன்னாலும், காவல்துறையினரால் கூட ஒன்றும் செய்ய முடியாது. மன உளைச்சலால்தான் தற்கொலை செய்து கொள்கிறேன். என் சாவுக்கு நானே காரணம், விடைபெறுகிறேன்,’ என உருக்கமாக அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார். அதன்பேரில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.