CM Trophy 2024: 2024 முதலமைச்சர் கோப்பையை தட்டிச்சென்றது சென்னை.. உங்கள் மாவட்டத்தில் வெற்றி நிலவரம் என்ன?.. முழு விபரம் உள்ளே.!

ஸ்டாலின்‌ வழங்கினார்‌.

CM Trophy 2024 (Photo Credit: @TNDIPRNews X)

அக்டோபர் 25, பெரியமேடு (Chennai News): தமிழ்நாடு முதலமைச்சர்‌ மு.க. ஸ்டாலின்‌ (MK Stalin) தலைமையில்‌ நேற்று (24.10.2024) சென்னை, ஐவஹர்லால்‌ நேரு உள்‌ விளையாட்டரங்கத்தில்‌ நடைபெற்ற முதலமைச்சர்‌ கோப்பை-2024 (CM Trophy 2024 Awards) மாநில அளவிலான போட்டிகள்‌ நிறைவு விழாவில்‌, அதிக பதக்கங்களை வென்று பதக்கப்‌ பட்டியலில்‌ முதல்‌ மூன்று இடங்களை பெற்ற சென்னை, செங்கல்பட்டு மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட அணிகளுக்கு முதலமைச்சர்‌ கோப்பையை வழங்கி, பாராட்டினார்‌.

15 நாட்களாக தொடர் போட்டி:

முதலமைச்சர்‌ கோப்பை விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ நமது பாரம்பரிய விளையாட்டான கபடி, சிலம்பம்‌ உட்பட 36 வகையான விளையாட்டுகளுக்கு பள்ளி, கல்லூரி மாணாக்கர்கள்‌, மாற்றுத்திறனாளிகள்‌ பொதுப்பிரிவு மற்றும்‌ அரசு ஊழியர்களுக்கும்‌ போட்டிகள்‌ நடத்திட தமிழ்நாடு முதலமைச்சர்‌ உத்தரவிட்டார்‌. அதன்‌ பேரில், அனைத்து மாவட்டங்களிலும்‌ மாவட்ட அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ மற்றும்‌ மண்டல அளவிலான போட்டிகள்‌ ஆறு மண்டல தலைமையிடத்திலும்‌, இந்த ஆண்டு செப்டம்பர்‌ 10-ஆம்‌ தேதி முதல்‌ 24-ஆம்‌ தேதி வரை நடைபெற்றது. 15 நாட்கள்‌ நடைபெற்ற மாவட்ட மற்றும்‌ மண்டல அளவிலான போட்டிகளில்‌ கலந்துகொள்ள 11,56,566 வீரர்‌, வீராங்கனைகள்‌ இணையதளம்‌ மூலம்‌ பதிவு செய்தனர்‌. மேலும்‌, இப்போட்டிகளில்‌ 10,000-க்கும்‌ மேற்பட்ட போட்டி நடுவர்கள்‌, பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ இதர ஊழியர்கள்‌ பணியாற்றினர்‌. இப்போட்டிக்காக 83 கோடியே 36 இலட்சம்‌ ரூபாய்‌ நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. PAK Vs ENG 3rd Test: பாகிஸ்தான் சுழற்பந்துவீச்சாளர்கள் அபாரம்.. இங்கிலாந்து அணி 267 ரன்களுக்கு ஆல் அவுட்..! 

5 நகரங்களில் அதிரடி ஆட்டம்:

துணை முதலமைச்சர்‌ உதயநிதி ஸ்டாலின்‌ அவர்கள்‌ மாவட்ட அளவிலான முதலமைச்சர்‌ கோப்பை விளையாட்டுப்‌ போட்டிகளை 10.09.2024 அன்று சிவகங்கை மாவட்டத்தில்‌ தொடங்கி வைத்தார்கள்‌. மாவட்ட மற்றும்‌ மண்டல அளவிலான போட்டிகளில்‌ வெற்றி பெற்ற 32700-க்கும்‌ மேற்பட்ட வீரர்‌, வீராங்கனைகள்‌ மாநில அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகளில்‌ கலந்து கொள்ள தேர்வு செய்யப்பட்டனர்‌. துணை முதலமைச்சர்‌ அவர்கள்‌ மாநில அளவிலான முதலமைச்சர்‌ கோப்பை விளையாட்டுப்‌ போட்டிகளை 04.10.2024 அன்று சென்னை ஜவஹர்லால்‌ நேரு உள்‌ விளையாட்டரங்கத்தில்‌ தொடங்கி வைத்தார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின்‌ சார்பில்‌

முதலமைச்சர்‌ கோப்பை மாநில அளவிலான விளையாட்டுப்‌ போட்டிகள்‌ சென்னை, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ நகரங்களில்‌ அக்டோபர்‌ 4-ஆம்‌ தேதி முதல்‌ அக்டோபர்‌ 24-ஆம்‌ தேதி வரை 19 இடங்களில்‌ நடத்தப்பட்டன.

CM Trophy 2024 | District Wise Victory List (Photo Credit: @TNDIPRNews X)

விளையாட்டு வீரர்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள்:

இந்த போட்டிகளில்‌ பங்கேற்ற 32,700-க்கும்‌ மேற்பட்ட வீரர்கள்‌- வீராங்கனைகள்‌, 500 விளையாட்டு தன்னார்வலர்கள்‌,

3,000-க்கும்‌ மேற்பட்ட நடுவர்கள்‌, பயிற்சியாளர்கள்‌ மற்றும்‌ இதர ஊழியர்கள்‌ அனைவருக்கும்‌ போட்டி நடைபெறுகின்ற அனைத்து நாட்களிலும்‌ தங்குவதற்கு வசதியாக தங்கும்‌ விடுதிகள்‌ மற்றும்‌ அரசு விருந்தினர்‌ மாளிகை ஆகியவைகளில்‌ அறைகள்‌ ஏற்பாடு செய்யப்பட்டன. அத்துடன்‌, போட்டி நடைபெறும்‌ அனைத்து நாட்களிலும்‌ மூன்று வேளை உணவு மற்றும்‌ சிற்றுண்டி, வீரர்‌ வீராங்கனைகள்‌ போட்டி நடைபெறும்‌ இடங்கள்‌ மற்றும்‌ தங்கும்‌ விடுதிகளுக்கு செல்ல பேருந்து வசதிகள்‌, அனைத்து இடங்களிலும்‌ மருத்துவ வசதி ஏற்பாடுகள்‌ மற்றும்‌ போட்டி நடைபெறும்‌ இடங்களில்‌ காவல்துறை மூலம்‌ உரிய பாதுகாப்பு ஆகியவை சிறந்த முறையில்‌ மேற்கொள்ளப்பட்டது. இளைஞர்‌ நலன்‌ மற்றும்‌ விளையாட்டு மேம்பாட்டுத்‌ துறை, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம்‌, தமிழ்நாடு உடற்கல்வியியல்‌ மற்றும்‌ விளையாட்டு பல்கலைக்கழகம்‌, செங்கல்பட்டு, மதுரை, திருச்சி மற்றும்‌ கோயம்புத்தூர்‌ மாவட்ட நிர்வாகங்கள்‌, மாநகர போக்குவரத்துக்‌ கழகம்‌, பெருநகர சென்னை மாநகராட்‌சி, மருத்துவம்‌ மற்றும்‌ மக்கள்‌ நல்வாழ்வுத்‌ துறை, காவல்‌ துறை, தீயணைப்பு மற்றும்‌ மீட்புப்‌ பணிகள்‌ துறை ஆகிய துறைகளுடன்‌ இணைந்து அனைத்து நடவடிக்கைகளும்‌ சிறப்பான முறையில்‌ மேற்கொள்ளப்பட்டன. Ravichandran Ashwin: டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக விக்கெட்கள் வீழ்த்திய ஏழாவது வீரர்.. அஸ்வின் 2 புதிய சாதனை..! 

முதல் 3 இடங்கள்:

முதலமைச்சர்‌ கோப்பை - 2024 மாநில அளவிலான இறுதிப்‌ போட்டிகளில்‌ 1,071 பதக்கங்களை வெல்வதற்கு தமிழ்நாட்டிலுள்ள 38 மாவட்டங்களை சேர்ந்த வீரர்‌-வீராங்கனைகள்‌ போட்டியிட்டனர்‌. இதில்‌ சென்னை மாவட்டம்‌, 105 தங்கம்‌, 80 வெள்ளி மற்றும்‌ 69 வெண்கலப்‌ பதக்கங்கள்‌, என மொத்தம்‌ 254 பதக்கங்கள்‌ வென்று பதக்கப்‌ பட்டியலில்‌ முதல்‌ இடத்தையும்‌, செங்கல்பட்டு மாவட்டம்‌, 31 தங்கம்‌, 26 வெள்ளி மற்றும்‌ 36 வெண்கலப்‌ பதக்கங்கள்‌, என மொத்தம்‌ 93 பதக்கங்கள்‌ வென்று இரண்டாம்‌ இடத்தையும்‌, கோயம்புத்தூர்‌ மாவட்டம்‌ 23 தங்கம்‌, 40 வெள்ளி மற்றும்‌ 35 வெண்கலப்‌ பதக்கங்கள்‌, என மொத்தம்‌ 102 பதக்கங்கள்‌ வென்று மூன்றாம்‌ இடத்தையும்‌ பெற்றுள்ளனர்‌.

விளையாட்டில் முன்னேற்றம் தேவைப்படும் மாவட்டங்கள்:

தென்காசி, கள்ளக்குறிச்சி, திருப்பத்தூர், நீலகிரி மாவட்ட இளைஞர்கள் ஒரு தங்கப் பதக்கம் கூட பெறவில்லை. சொற்ப அளவிலான வெள்ளி மற்றும் வெண்கல பதக்கத்தை மட்டுமே வென்றனர். நாகப்பட்டினம், அரியலூர், திருவாரூர், மயிலாடுதுறை, தர்மபுரி, இராமநாதபுரம், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்த வீரர்கள் தலா ஒரு தங்கப் பதக்கத்தையும், பெரம்பலூர், விழுப்புரம், சிவகங்கை, கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த வீரர்கள் தலா இரண்டு தங்க பதக்கத்தையும் பெற்றுள்ளனர். போட்டியாளர்கள் மாவட்ட வாரியாக பதக்கம் பெற்ற விபரம் மேற்கூறிய புகைப்படத்தில் விபரமாக வழங்கப்பட்டுள்ளது.

வெற்றிபெற்ற அணிகளுக்கு முதலமைச்சர் தனது கோப்பையை வழங்கி பாராட்டினார்.