Special Olympics Summer Games: 198 வீரர்களுடன் பெர்லின் புறப்பட்டது இந்திய ஒலிம்பிக் அணி; தாயநாட்டுக்கு விருதுகள் சேர்க்கும் வைரங்களை வாழ்த்தி அனுப்புங்கள்..!
சிறப்பு கோடைக்கால ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக 198 வீரர்கள் உட்பட 280 உறுப்பினர்களை கொண்ட இந்திய அணி பெர்லின் புறப்பட்டது.
ஜூன் 14 , புதுடெல்லி (Sports News): சிறப்பு ஒலிம்பிக் - கோடைக்காலப் (Special Olympics - Summer Games) போட்டியில் பங்கேற்பதற்காக 198 வீரர்கள் உட்பட 280 உறுப்பினர்களை கொண்ட இந்திய அணி ஜூன் 12 அன்று ஜெர்மனி தலைநகர் பெர்லின் (Berlin, Germany) புறப்பட்டது.
இதற்காக ஜூன் 8 அன்று நடைபெற்ற வழியனுப்பு நிகழ்ச்சியில், இந்திய அணி மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் அனுராக் தாக்கூரை நேரில் சந்திக்கும் வாய்ப்பும் வீரர்களுக்கு கிடைத்தது.
இந்த சிறப்பு ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்பதற்காக இதுவரை இல்லாத அளவாக, இந்திய அணிக்கு ரூ.7.7 கோடியை மத்திய இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஒதுக்கியுள்ளார்.
190 நாடுகளிலிருந்து 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்கும் இந்த உலகளவிலான போட்டிக்கு தயாராகும் வகையில், டெல்லியில் உள்ள இந்திய விளையாட்டு ஆணையத்தின் ஜவஹர்லால் நேரு விளையாட்டு மைதானத்திலும் அணியினர் பயிற்சி பெற்றனர்.
இந்த மிகப்பெரிய விளையாட்டுப்போட்டி ஜூன் 17 அன்று தொடங்கி ஜூன் 25 வரை நடைபெற உள்ளது. இந்திய அணியினர் பதக்கம் பெறும் நோக்கில் 16 விளையாட்டுப்பிரிவுகளில் பங்கேற்கவுள்ளனர்.