WI Vs NZ Highlights: வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி; நியூசிலாந்து அணி தோல்வி..!
இன்று நடைபெற்ற 26-வது லீக் ஆட்டத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்திய வெஸ்ட் இண்டீஸ் அணி சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி அடைந்தது.
ஜூன் 13, டிரினிடாட் (Sports News): ஐசிசி டி20 உலகக்கோப்பை (ICC T20 World Cup 2024) தொடரில் இன்று நடைபெற்று முடிந்த 26-வது லீக் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ்-நியூசிலாந்து (WI Vs NZ) அணிகள் மோதின. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பவுலிங்கை தேர்வு செய்தது. முதலில் களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி தொடக்கத்தில் விக்கெட்களை இழந்து தடுமாறியது. IND Vs USA: நின்று ஆடிய சூரியகுமார் - சிவம் ஜோடி.. அமெரிக்காவுக்கு எதிரான ஆட்டத்தில் இந்தியா அசத்தல் வெற்றி.!
இதனையடுத்து, ஷெர்பன் ரூதர்போர்டு மட்டும் அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார். 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 149 ரன்கள் அடித்தனர். அதிகபட்சமாக ரூதர்போர்டு 39 பந்துகளில் 68 ரன்கள் அடித்தார். நியூசிலாந்து அணி தரப்பில் போல்ட் 3 விக்கெட், சவுதி மற்றும் பெர்குஷன் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பின்னர், 150 ரன்கள் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு ஆரம்பத்தில் விக்கெட்கள் அடுத்தடுத்து விழுந்தன. ஒருபுறம் தனிநபராக பிலிப்ஸ் மட்டும் போராடிக் கொண்டிருந்தார். அவர் அதிரடியாக விளையாடி 40 ரன்களில் அவரது விக்கெட்டை பறிகொடுத்தார்.
இறுதியில், சான்ட்னர் கடைசி ஓவரில் 3 சிக்சர்களை பறக்கவிட்டு, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு சற்று பயத்தை உண்டாக்கினார். 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 136 ரன்கள் மட்டுமே நியூசிலாந்து அணி அடித்தது. இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணி 13 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. இந்த ஆட்டத்தில் அதிரடியாக விளையாடிய ரூதர்போர்டு ஆட்டநாயகன் விருதை பெற்று சென்றார்.