வானிலை: டானா புயல் எதிரொலி! புயல் எச்சரிக்கை விடுப்பு; வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு.!
தமிழகத்தில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
அக்டோபர் 22, நுங்கம்பாக்கம் (Chennai News): வானிலையில் (Weather) தென் தமிழக பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. நேற்று (21-10-2024) மத்தியகிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று மாலை 5.30 மணி அளவில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்று, மேற்கு- வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (22-10-2024) காலை 5.30 மணி அளவில், மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதே பகுதிகளில், ஒரிசா தென்கிழக்கே 700 கிலோ மீட்டர் தொலைவிலும், சாகர் தீவுகளுக்கு (மேற்கு வங்காளம்) தெற்கு- தென்கிழக்கே 750 கிலோ மீட்டர் தொலைவிலும், கேப்புப்பாராவிற்கு (வங்கதேசம்) தெற்கு- தென்கிழக்கே 730 கிலோ மீட்டர் தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
டானா புயல் (Dana Cyclone):
இது மேலும், மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், 23-ஆம் தேதி வாக்கில் புயலாக வலுபெறக்கூடும். இது மேலும், வடமேற்கு திசையில் நகர்ந்து, 24-ஆம் தேதி காலை வடமேற்கு வங்கக்கடல் பகுதிகளில் தீவிர புயலாக நிலவக்கூடும். இது, வடக்கு ஒரிசா –மேற்கு வங்காள கடற்கரை பகுதிகளில், பூரி -சாகர் தீவுகளுக்கு இடையே, தீவிர புயலாக 24ஆம் தேதி இரவு தொடங்கி 25ஆம் தேதி காலை வரை கரையை கடக்கக்கூடும். அச்சமயத்தில் அப்பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 100 முதல் 110 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 120 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். Gold Silver Price: தங்கம் வாங்க சரியான நேரம்; இன்றைய விலை நிலவரம் இதோ.!
இன்றைய வானிலை (Today Weather):
22.10.2024 அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல், சேலம், ஈரோடு, தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 9 துறைமுகங்களில் எச்சரிக்கை கூண்டு ஏற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுவை, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி ஆகிய துறைமுகங்களில் 1-ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்படவுள்ளது.
நாளைய வானிலை (Tomorrwo Weather):
23.10.2024 அன்று தமிழகத்தில் அநேக இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுஇகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். திருப்பூர், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், மதுரை, கரூர் மற்றும் திருச்சிராப்பள்ளி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.
மீனவர்களுக்கான எச்சரிக்கை:
22.10.2024 அன்று அந்தமான் கடல் பகுதிகள், மத்தியமேற்கு, மத்தியகிழக்கு மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்றும், நாளையும் சூறாவளிக்காற்று மணிக்கு 60 முதல் 90 கிலோ மீட்டர் வேகத்திலும், இடையிடையே 100 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசலாம். 22.10.2024 இன்று மத்தியமேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 முதல் 45 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 55 கிலோ மீட்டர் வேகத்துலும் வீசக்கூடும் என்பதால் குறிப்பிட்ட நாட்களில் கடலுக்குள் மீனவர்கள் செல்ல வேண்டாம் எனவும் எச்சரிக்கப்படுகிறது.