Money Doubling Scam: ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் போதும்.. 100 நாட்களுக்கு தினமும் ரூ.2000.. மோசடி கும்பல் கைது..!

சென்னையில் ரூ.1 லட்சம் முதலீடு செய்தால் 100 நாட்களுக்கு தினமும் ரூ.2000 தருவதாக கூறி மோசடி செய்த கும்பல் கைது செய்யப்பட்டனர்.

Scam Alert (Photo Credit: Pixabay)

ஜூன் 27, சென்னை (Chennai): பண மோசடி புகார்களுக்கு எல்லாம், மூலம் குறுகிய காலத்தில் அதிக பணம் சம்பாதிக்க வேண்டும் என்ற பேராசையே. அந்த வகையில் விரைவாக அதிக பணம் ஈட்ட விரும்புவோரை குறி வைத்து விபூதி அடித்துள்ளனர். தற்போது, கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து அதிக லாபம் சம்பாதிக்கலாம் எனக் கூறி சென்னையைச் சேர்ந்த மோசடி கும்பல் பலரை ஏமாற்றி இருப்பது வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சென்னையை சேர்ந்த கேப்பிட்டல் கெயின் என்ற நிறுவனம், ஒரு லட்சம் முதலீடு செய்தால் தொடர்ந்து 100 நாளைக்கு தினமும் 2 ஆயிரம் ரூபாய் லாபம் தருவதாக கூறி சமூக வலைதளங்களில் விளம்பரம் வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனத்தை சேர்ந்த நித்தியா என்பவர் வர்த்தக நிபுணர் போல தன்னை காட்டிக்கொண்டதுடன், பல்வேறு கவர்ச்சிகரமான திட்டங்களை அறிவித்துள்ளார். இதனை நம்பிய பலர் லட்சக்கணக்கில் முதலீடு செய்துள்ளனர். தொடர்ந்து அவர் குறிப்பிட்டதுபோல ஒரு லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு 10 நாட்களில் 20 ஆயிரம் வரையும், 10 லட்சம் முதலீடு செய்தவர்களுக்கு ரூபாய் 2 லட்சமும் வழங்கி உள்ளார். TN Weather Update: வெளுத்து வாங்கப்போகும் கனமழை.. மீனவர்களுக்கு எச்சரிக்கை.. சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!

மோசடி கும்பல் கைது: பணம் அதிகமாக பெருகுவதை பார்த்த ஆசையில் தொழிலதிபர் ரமேஷ் என்பவர் 1.10 கோடி ரூபாய் முதலீடு, மேலும் பெண் ஒருவர் கூட்டுறவு வங்கியில் ஒன்பது லட்சம் ரூபாய் கடன் வாங்கி முதலீடு செய்துள்ளனர். ஆனால், முதலீடு செய்தவர்களின் பணத்தையே தினமும் லாபமாக கொடுத்து வந்துள்ளார் நித்தியா. ஆனால் சில மாதங்களில் நித்தியா நிறுவனத்தை பூட்டிவிட்டு கோடிக்கணக்கான ரூபாயுடன் துபாய்க்கு தப்பி சென்றுள்ளார். ஏமாற்றப்பட்டதை உணர்ந்த 30-க்கும் மேற்பட்ட முதலீட்டாளர்கள் சென்னை குற்றப்பிரிவு காவல்துறையினரிடம் புகார் அளித்தனர். தொடர்ந்து இந்த கும்பலை சேர்ந்த சாம்நாத், விஜயகுமார், தர்மராஜா ஆகிய மூன்று பேரை காவல்துறையினர் சென்னையில் கைது செய்தனர். மேலும் துபாய்க்கு தப்பி ஓடிய நித்யாவை பிடிக்க காவல்துறையினர் தீவிர முயற்சியில் இறங்கி உள்ளனர்.