College Student Dies: "ரூட்டு தல" விவகாரத்தில் கல்லூரி மாணவர் அடித்தே கொலை.. 5 நாட்கள் போராடி பறிபோன உயிர்.!
ரூட் தல பெயரில் நடந்த கொடூரத்தை விவரிக்கிறது இந்த செய்தித்தொகுப்பு.
அக்டோபர் 09, ஸ்ரீபெரும்புதூர் (Chennai News): சென்னையில் செயல்பட்டு வரும் பச்சையப்பன் (Pachayappas College) மற்றும் மாநிலக் கல்லூரி (Presidency College) மாணவர்களிடையே, பேருந்து / இரயில் பயணத்தின் போது, யார் கெத்து? என்பதை நிரூபிக்கும் வகையில் 'ரூட்டு தல' (Route Thala) என்ற பெயரில் பல சர்ச்சைக்குரிய (College Students Fight) மோதல் சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. மேலும், கல்லூரிகளின் திறப்பு நாட்களின் போது, பேருந்துகளின் மீது ஏறி ஆட்டம்-பாட்டம் என அராஜகம் செய்வது பயணிகளை அச்சுறுத்துவது, பட்டாகத்தியை சாலையில் வீசி தீப்பொறி பறக்க வித்தை காண்பிப்பது என தொடர அட்டகாச செயல்களில் ஈடுபட்டு வந்தனர்.
இரயில் நிலைய வாசலில் மோதல்:
அவ்வப்போது இரண்டு கல்லூரி மாணவர்களும் பயங்கர ஆயுதங்களால் தாக்கி கொண்ட சம்பவமும் நடைபெற்றது, ஒருசில நேரம் தங்களின் கைபைகளில் தண்டவாளங்களில் இருக்கும் ஜல்லிக்கற்களை எடுத்துவந்து இருதரப்பும் மோதிக்கொண்டது. இதனிடையே, கடந்த அக்டோபர் 4ஆம் தேதி சென்னையில் உள்ள சென்ட்ரல் ரயில் நிலைய வாசலில், பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்கள் மோதிக்கொண்டனர். இந்த சம்பவத்தில் பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள், தங்கள் கையில் சிக்கிய மாநிலக் கல்லூரி மாணவரான சுந்தர் என்பவரை கடுமையாக தாக்கியிருந்தனர். Samsung Workers Protest: சுங்குவார்சத்திரம் சாம்சங் தொழிலாளர்கள் போராட்டம்; நள்ளிரவில் வீடுபுகுந்து தூக்கிய காவல்துறை..!
குற்றவாளிகள் 6 பேர் கைது:
இதில் மாணவர் சுந்தர் படுகாயம் அடைந்த நிலையில், அரசு ராஜீவ் காந்தி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில் இன்று அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதனையடுத்து, இந்த விஷயம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்துள்ள காவல் துறையினர், பச்சையப்பன் கல்லூரியைச் சேர்ந்த ஆறு மாணவர்கள் மீது கொலை வழக்குப்பதிந்து கைது செய்தனர். இந்த விவகாரத்தில் சுந்தர், ஈஸ்வர், சந்துரு, ஹரி பிரசாத், காமலேஸ்வர், யுவராஜ் ஆகிய மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
காவல்துறையினர் பாதுகாப்பு அதிகரிப்பு:
கல்லூரி மாணவர்களுக்கு இடையே நடந்த தாக்குதல் சம்பவத்தால், ஒருவர் உயிரிழந்துள்ளதால் பாதுகாப்பு கருதி மாநில மற்றும் பச்சையப்பன் கல்லூரிகளில் காவல்துறையினர் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. இந்த மாணவர்கள் பயணிக்கும் பேருந்து மற்றும் இரயில் பயண வழித்தடத்தில் காவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் உண்டாக்கி இருக்கிறது. Kalaignar Centennial Park: கலைஞர் நூற்றாண்டு பூங்காவில் இவ்வுளவு வசதிகளா?.. அசத்தல் தகவல், பார்வைக் கட்டண விபரம் இதோ.!
இரயில்வே டிஎஸ்பி எச்சரிக்கை:
நேற்று செய்தியாளர்களை சந்தித்த தென்னக இரயில்வே டிஎஸ்பி ரமேஷ், ரூட்டு தல விவகாரத்தில் மாணவர்கள் மோதிக்கொள்வதை நிறுத்த வேண்டும். உங்களின் பெற்றோர் தங்களை கஷ்டப்பட்டு படிக்கச் வைக்கிறார்கள். முன்பைப்போல சட்டம் இல்லை, அனைத்தும் மாறிவிட்டது. நீங்கள் பயணிக்கும் இரயில் பெட்டி முதல், இரயில் நிலைய வளாகங்கள் வரை கேமிரா பொருத்தப்பட்டுள்ளது. அந்த கேமிராவில் பதிவாகும் காட்சிகளில் நீங்கள் குற்றச்செயலில் ஈடுபட்டது உறுதி செய்யப்பட்டால் கைது நடவடிக்கை தான். தண்டனை ஆண்டுகளும் உயர்த்தப்பட்டுள்ளது என்பதால், மாணவர்கள் பொறுப்புணர்வுடன் செயல்பட்டு கல்லூரிக்கு படிக்க வந்து செல்ல வேண்டும். இன்று ஒருவருக்கு நீங்கள் நிகழ்த்துவதை, உங்களின் குடும்பத்தில் ஒருவருக்கு நடந்தால் ஏற்றுக்கொள்வீர்களா?. வீணான சண்டைகள் வேண்டாம், நன்கு படியுங்கள் என எச்சரித்து இருந்தார். இதனிடையே தான் மாணவர் பலியான சம்பவம் நடந்துள்ளது.
சென்னையை பொறுத்தவரையில் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள் 50 க்கும் மேற்பட்டவை செயல்பட்டு வருகின்றன. இந்த கல்லூரிகளில் பச்சையப்பன் மற்றும் மாநில கல்லூரி மாணவர்களிடையே மட்டுமே அதிக மோதல் சம்பவங்கள் நடக்கின்றன. இவர்கள் பயணங்களின்போது பெண்களை பார்த்து ஆபாசமாக பாடுவது, பட்டா கத்தியை தரையில் தீட்டியவாறு வருவது, இருதரப்பாக மோதிக்கொண்டு பொதுமக்களுக்கு அச்சுறுத்தல் விளைவிப்பது என பல குற்றச்செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக தற்போது கொலை சம்பவம் நடந்துள்ளது.