ஏப்ரல் 07, சென்னை (Festival News): பங்குனி மாதத்தில் வரக்கூடிய பௌர்ணமி திதியும், உத்திரம் நட்சத்திரமும் இணைந்து வரக்கூடிய நாள் 'பங்குனி உத்திரம்' (Panguni Uthiram) ஆக கொண்டாடப்படுகிறது. சிவன்-பார்வதி, ராமர்-சீதை, பெருமாள்-மகாலட்சுமி தேவி, முருகனுக்கும்-தெய்வானைக்கும், இந்த பங்குனி உத்திர நாளில் தான் திருமணம் நடைபெற்றது என்று நம்பப்படுகிறது. முருகப் பெருமானுக்குரிய மிக முக்கியமான வழிபாட்டு நாட்களில் ஒன்றாக பங்குனி உத்திரம் கருதப்படுகிறது. இந்நாளில் ஏராளமான பக்தர்கள் காவடி சுமந்து வந்தும், பால்குடம் ஏந்தி வந்தும் முருகப் பெருமானை வழிபடுவது வழக்கம். பங்குனி உத்திர நாளில், முருகப் பெருமானின் அருளை பெற என்ன செய்ய வேண்டும் என்பதை இப்பதிவில் தெரிந்து கொள்வோம். Sri Rama Navami 2025: ஸ்ரீ ராம நவமி 2025: நல்ல நேரம் எப்போது? விரதமுறைகள் என்ன? இதையெல்லாம் மறந்துடாதீங்க!
பங்குனி உத்திரம்:
பங்குனி மாதத்தில் வரும் மிக முக்கியமான விரத நாள் பங்குனி உத்திரம் ஆகும். பல தெய்வீக திருமணங்கள் நடைபெற்ற நாளாக பங்குனி உத்திரம் கருதப்பட்டாலும், இது தமிழ் கடவுளான முருகப் பெருமானுக்குரிய (Lord Muruga) நாளாக முக்கிய விரத நாளாக கருதப்படுகிறது. இந்நாளில் விரதம் இருந்து முருகப் பெருமானை வழிபடுவதால், திருமணம் உள்ளிட்ட சுபகாரிய நிகழ்வுகள் நடைபெறுவதில் இருக்கும் தடைகள் அனைத்தும் நீங்கும் என்பது ஐதீகம். பங்குனி உத்திர சுப தினத்தில் கோவில்களில் சிறப்பு பூஜைகள், திருவிழாக்கள், தேரோட்டம் போன்றவை சிறப்பாக நடைபெறும். குறிப்பாக, முருகன் கோவில், சிவன் கோவில்களில் இந்நாள் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. மேலும், அன்றைய நாளில் கோயில்களில் திருக்கல்யாணம் அபிஷேகம், சிறப்பு தீபாராதனை போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
பங்குனி உத்திரம் நாள்:
இந்த 2025ஆம் ஆண்டு, பங்குனி உத்திரம் ஏப்ரல் 10ஆம் தேதி பிற்பகல் 12 மணி முதல் தொடங்கி ஏப்ரல் 11ஆம் தேதி பிற்பகல் 3 மணிக்கு முடிகிறது. 2025ஆம் ஆண்டில் பங்குனி உத்திர திருநாள் ஏப்ரல் 11ம் தேதி வெள்ளிக்கிழமை அமைகிறது. ஏப்ரல் 12ஆம் தேதி காலை 04.13 மணி துவங்கி, ஏப்ரல் 13ஆம் தேதி காலை 06.03 மணி வரை மட்டுமே பெளர்ணமி திதி உள்ளது. இருந்தாலும் பங்குனி உத்திரம் என்பது நட்சத்திர அடிப்படையில் கொண்டாடப்படும் விரத நாள் என்பதால் உத்திரம் நட்சத்திரம் வரும் ஏப்ரல் 11ஆம் தேதியை பங்குனி உத்திர நாளாகும்.
பங்குனி உத்திர சிறப்புகள்:
சிவன் - பார்வதி, மீனாட்சி - சுந்தரேஸ்வரர், ராமர் - சீதை, முருகன் - தெய்வானை ஆகியோரின் திருமணங்கள் நடைபெற்றது பங்குனி உத்திர நாளில் நடைபெற்றதாக புராணங்கள் கூறுகின்றன. அதேபோல் ஆண்டாள், ரங்கநாதருடன் ஐக்கியமான தினமும், பங்குனி உத்திர திருநாளில் தான் என சொல்லப்படுகிறது. இந்நாளில் எந்த தெய்வத்தை வழிபட்டாலும் அவர்களுடைய திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக அமையும். திருமணம் ஆனவர்களும் இந்நாளில் விரதம் இருந்து வழிபடலாம்.
விரத முறை:
பங்குனி உத்திரம் அன்று உணவை தவிர்த்து விரதம் இருந்து, முருகனை வேண்டி மந்திர ஜபம் செய்வது, தியானம் செய்வது ஆகியவற்றை செய்வது சிறப்பு. இதனால் உடலும், மனமும் தூய்மையாகி, தெய்வத்தின் முழு அருளை பெற முடியும். தெய்வீக அருளால் கடந்த காலங்களில் செய்த தவறுகள் மன்னிக்கப்படும். இந்நாளில் விரதம் இருந்து பூஜை செய்து சிவபெருமான், முருகனை வழிபட்டால் குடும்பத்தில் ஏற்படும் பிரச்சனைகள், திருமண தடைகள், போன்றவை நீங்கி வாழ்வில் நல்ல நேர்மறையான மாற்றங்கள் கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது.
பூஜை முறைகள்:
பங்குனி உத்திரம் அன்று கோவிலுக்கு சென்று சிவன்-பார்வதி அல்லது முருகன்-தெய்வாணையை வழிபட வேண்டும். அங்கு நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தில் கலந்து கொள்வதால் செல்வ வளம் பெருகி, மகிழ்ச்சியான திருமண வாழ்க்கை, தெய்வீக அருள் கிடைக்கும். கோவில்களில் நடக்கும் அபிஷேகத்திற்கு வேண்டிய பால், தேன், தயிர் போன்ற பொருட்களை வாங்கிக் கொடுக்கலாம். தெய்வ அபிஷேகங்கள் செய்வதால் கர்மாக்கள், பாவங்களில் இருந்து விடுபட்டு, மறுபிறவி இல்லாத நிலை ஏற்படும். பங்குனி உத்திரம் அன்று காவடி எடுப்பது மிகவும் விசேஷமானதாகும். முருகனுக்கு காவடி எடுப்பதால் முருகப் பெருமானின் பரிபூரண அருளை பெற முடியும். தெய்வ சிந்தனையுடன், பக்தி பாடல்களை பாடிக் கொண்டு, தோளில் காவடி எடுத்து வருவதால் நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் கஷ்டங்கள் அனைத்தும் நீங்கி, முருகப்பெருமானின் தெய்வீக அருளை பெறலாம்.