Inevitable contribution of Tamilnadu: இறுதிவரை விடுதலைக்காக உறுதியுடன் போராடிய தமிழகம். தமிழகப் போராளிகளின் வியக்கவைக்கும் பங்களிப்பு.!
தமிழகத்தைச் சேர்ந்த சுப்பிரமணிய பாரதியார், வீரபாண்டிய கட்டபொம்மன், வேலு நாச்சியார், வ.வேசு ஐயர், வ.உ சிதம்பரனார் முதலானோர் விடுதலைக்காகத் துணிச்சலுடன் போராடி காலத்தால் அழியா புகழைப் பெற்றிருக்கின்றனர்.
ஆகஸ்ட் 11, சென்னை : வியாபார நோக்கத்துடன் இந்தியாவிற்குள் ஊடுருவிய வெள்ளையர்கள் கொஞ்சம் கொஞ்சமாக நம் நாட்டின் வளங்களை கொள்ளையடிக்க தொடங்கினர். இதனால் நாடெங்கும் இந்தியர்கள் தங்கள் விடுதலைக்காக போராடினர். அதன் விளைவாக ஆகஸ்ட் 15,1947 (Independence Day) இல் இருந்து சுதந்திர காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம்.
புலித்தேவன் என்ற பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு எதிரான முதல் முழக்கத்தைத் தொடங்கினார். இவர் தனது நெற்கட்டான் செவ்வல் பகுதியை ஆங்கிலேயர் முற்றுகையிட்ட போது அதனை எதிர்த்துப் போராடி வெற்றி பெற்றார். தென்னாட்டுத் திலகர் எனப் போற்றப்படும் வ.உ சிதம்பரனார் விடுதலைப் போராட்டத்தில் இரட்டை ஆயுள் தண்டனையை அனுபவித்து சிறையில் செக்கிழுத்தார். மேலும் இவர் சுதேசி கழகத்தைத் தோற்றுவித்து ‘கப்பலோட்டிய தமிழன்’ என்ற மாபெரும் புகழை அடைந்தார். தன் பாட்டுத் திறத்தால் சுப்பிரமணிய பாரதி மக்கள் மனதில் விடுதலை உணர்வை ஆழமாக விதைத்தார். Afghanistan Victory Day: ஆப்கானிஸ்தானில் நாளை விடுதலை நாள் கொண்டாட்டம்; அரசு விடுமுறை - தலிபான்கள் அறிவிப்பு.!
தமிழகப் பெண்கள் இந்திய சுதந்திரப் போராட்டத்தில் இன்றியமையாத பங்களித்துள்ளனர். வேலு நாச்சியார், லீலாவதி அம்மையார், இலட்சுமி சாகல், தில்லையாடி வள்ளியம்மை ஆகியோரின் பங்கு மகத்தானதாகும். சுதேச இயக்கத்தின் கொள்கையை ஏற்று ஆங்கிலேயருக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக கதர் ஆடை அணிந்ததால் லீலாவதி அம்மையார் மூன்று முறை சிறை தண்டனை அனுபவித்தார். மேலும் ஆங்கிலேயரை துணிச்சலுடன் எதிர்த்துப் போராடிய வீரப் பெண்மணி என்ற அழியா பெருமை என்றென்றும் வேலு நாச்சியாருக்கு சொந்தமாகும்.
நாம் இன்று சுதந்திரமெனும் சுத்தமான காற்றை சுவாசித்துக் கொண்டிருக்கிறோம். இந்தியா இன்று உலக அளவில் உயர்ந்த நிலையை அடைந்திருக்கிறது. மேலும் பல்வேறு விஷயங்களில் சுயசார்புடன் இயங்குகிறது, உலக வணிகத்தில் முக்கிய ஏற்றுமதித் தளமாகத் திகழ்கிறது. இதற்கெல்லாம் காரணம் நம் வீரர்களின் தன்னலமற்ற போராட்டமும் தியாக மனப்பான்மையும் தான் என்பதை நாம் எப்போதும் நினைவுகூற வேண்டும்.