Mercy Killing: 90 வயதில் மனதை கல்லாக்கி மனைவியை கருணைக் கொலை செய்த முதியவரின் விபரீத முடிவு; குடும்பமே கதறல்..!
படுத்த படுக்கையாக மனைவியை, 90 வயதுடைய கணவர் மனதை கல்லாக்கி கருணைக்கொலை செய்து கண்ணீருடன் வாசலில் தவித்த சம்பவம் குமரியில் நடந்துள்ளது.
செப்டம்பர் 24, ஆசாரிபள்ளம் (Kanyakumari News): கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள குருத்தங்கோடு, ஆசாரிவிளை கிராமத்தில் வசித்து வருபவர் சந்திர போஸ் (வயது 90). இவர் பனையேறும் தொழிலாளியாக இருந்து வந்தார். தற்போது வயது மூப்பு காரணமாக எந்த வேலைக்கும் செல்லவில்லை. மூன்று மகன்கள், மூன்று மகள்கள் என ஆறு குழந்தைகளை கொண்ட இவரின் குடும்பத்தில், பிள்ளைகளுக்கு அடுத்தடுத்து திருமணமானதைத்தொடர்ந்து அனைவரும் தற்போது தங்களது குழந்தை மற்றும் பேரக்குழந்தையுடன் தனித்தனியே தங்களின் குடும்பத்துடன் வசித்து வருகிறார்கள்.
வீட்டுக்குள் முடங்கிய தம்பதி:
இதனால் சந்திரபோஸ் தனது மனைவி லட்சுமியுடன் தனியாக வீட்டில் வசித்து வருகிறார். மூன்று மகன்களும் ஆளுக்கு ஒரு வேளை என மூன்று வேளை உணவு வழங்கினாலும், யாரும் உடன் வந்து கவனிக்கவில்லை என கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாகவே லட்சுமியும் படுத்த படுக்கையாக இருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பு வரை உடல் திடாகத்துடன் இருந்த முதியவர் சந்திரபோஸ், கிடைத்த வேலைகளுக்கு சென்று தனது மனைவியை கவனித்து வந்துள்ளார். இதனிடையே, கண் பார்வை பறிபோனதன் காரணமாக, அவரும் வீட்டுக்குள்ளேயும் முடங்கும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் மனைவியை பராமரிக்க இயலாமல் அவதிப்பட்ட நிலையில், படுத்த படுக்கையான லட்சுமியின் உடல் எல்லாம் கொப்புளங்கள் ஏற்பட்டுள்ளது. MK Stalin: வலுக்கும் துணை முதல்வர் உதயநிதி கோரிக்கை.. முதல்வர் மு.க ஸ்டாலின் சூசக பதில்.!
கருணைக்கொலை (Mercy Killing):
தனது மனைவியின் நிலையை கண்டு கணவர் வருந்திய நிலையில், மனைவியும் கொப்புளங்களால் வலி பொறுக்க இயலாமல் அவதிப்பட்டுள்ளார். இதனையடுத்து, மனைவியை கருணைக்கொலை செய்யலாம் என்று முடிவெடுத்து, அவர் நேற்று காலை நேரத்தில் மனைவியின் கழுத்தை அறுத்துக்கொலை செய்துவிட்டு, பின் வாசலில் கண்ணீருடன் அழுதபடியே அமர்ந்துள்ளார். மதிய நேரத்தில் இளைய மகன் சாந்தகுமார் உணவு கொடுக்க வந்தபோது, தந்தை அழுதபடி இருப்பதை கவனித்துள்ளார். பின் வீட்டிற்குள் சென்ற பார்த்தபோது, தாய் கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்ட அதிர்ச்சி அடைந்தார்.
முதியவர் கைது:
உறவினர்களுக்கும், காவல்துறையினருக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. தகவல் இருந்து வந்த காவல்துறையினர், லட்சுமியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், முதியவர் சந்திரபோஸின் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்த நிலையில், வயது மூப்பு காரணமாக மருத்துவ சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.
தாய் கொலை செய்யப்பட்டதை அறிந்த பிள்ளைகள், வீட்டிற்கு வந்து கதறிக்கதறி அழுதது காண்போரை சோகத்திற்கு உள்ளாக்கியது.