Cannabis Youngsters Atrocity: கஞ்சா போதை ரௌடிகளால் கடையை மூடிய உரிமையாளர் - அரக்கோணத்தில் பகீர் சம்பவம்..!
கடைக்கு முன்பு வந்து கலவரம் செய்வது போல் தகராறில் ஈடுபட்ட கஞ்சா குடிக்கிகளால், பதறிப்போன கடையின் உரிமையாளர் அதனை மூடிவிட்டு எழுதிய வார்த்தைகள் பலராலும் கவனிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 16, அரக்கோணம் (Ranipet News): இராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள அரக்கோணம், தக்கோலம் கீழ் பஜாரில் சிமெண்ட், கட்டுமான இரும்பு கம்பி விற்பனையகம் செயல்பட்டு வருகிறது. இந்த கடையை தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் (வயது 38) என்பவர் நடத்தி வருகிறார். கடந்த மார்ச் 11ம் தேதியில் கடைக்கு முன்பு வந்த வாலிபர்கள், கஞ்சா போதையில் தகராறு செய்துள்ளனர்.
இந்த விஷயம் தொடர்பாக முத்துராமலிங்கம் தக்கோலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகார் விவகாரம் கஞ்சா ஆசாமிகளுக்கு தெரியவரவே, அவர்கள் மீண்டும் முத்துராமலிங்கத்தின் கடைக்கு சென்று மிரட்டலில் ஈடுபட்டுள்ளனர். வெளியூரில் வந்து வியாபாரம் செய்வதால் முத்துராமலிங்கமும் புகாரை வாபஸ் பெற்றுக்கொண்டுள்ளார். Bikers Atrocity Ends: காரில் சென்றவர்களை இடைமறித்து ரகளை செய்த கும்பல்.. தூக்கி உள்ளே வைத்து பாடம் புகட்டிய காவல்துறை.!
கடந்த 12ம் தேதி மீண்டும் கடைக்கு முன்பு வந்த இரண்டு வாலிபர்கள் கற்களை வீசி, கண்காணிப்பு கேமிராக்களை சேதப்படுத்தி சென்றுள்ளனர். மேலும், கடையை இனி திறந்தால் ஒழித்து கட்டிவிடுவோம் என எச்சரித்துள்ளனர். இந்த விஷயம் குறித்து தக்கோலம் காவல் நிலையத்தில் முத்துராமலிங்கம் புகார் அளித்தபோது, அவர்கள் வழக்குப்பதிவு செய்யாமல் அனுப்பி வைத்துவிட்டனர்.
விபரீதத்தை புரிந்துகொண்ட முத்துராமலிங்கம், இனி யாரை நம்பியும் பலன் இல்லை என்று கருதி, கடையின் ஷட்டரை இழுத்து மூடிவிட்டு "கஞ்சா போதை ரௌடிகளால் கடை காலவரையின்றி மூடப்படுகிறது" என எழுதி ஒட்டிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார். இந்த தகவலை கண்ட அப்பகுதி வியாபாரிகளும், பொதுமக்களும் பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாகினர்.
பின்னர், இவ்விவகாரத்தில் தக்கோலம் அனைத்து வியாபாரிகள் சங்கத்தினர் களமிறங்கி, முத்துராமலிங்கம் சார்பில் மிரட்டல் விடுத்த நபர்களின் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்தனர். புகாரை ஏற்ற காவல் துறையினர் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்து, கடையை திறந்து வியாபாரம் செய்யுங்கள் என்று கூறியதன் பேரில் முத்துராமலிங்கம் இன்று கடையை திறந்துள்ளார்.