சேலம்: தொலைந்த வாகனத்தின் மட்கார்டை மட்டும் திருப்பி கொடுத்த காவல் துறையினர்.. இளைஞர் அதிர்ச்சி..!
திருடு போன இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக உரிமையாளரை அழைத்து வாகனத்தின் இரண்டு பாகங்களை காவல்துறையினர் வாகன உரிமையாளரிடம் கொடுத்த சம்பவம் சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
செப்டம்பர் 30, வீராணம் (Salem News): சேலம் மாவட்டம் வீராணம் அடுத்துள்ள டி.பெருமாபாளையம் பகுதியை சேர்ந்தவர் வெங்கடேஸ்வரன் (வயது 30). வெங்கடேஸ்வரனின் இருசக்கர வாகனம் கடந்த 2023 ஆம் ஆண்டு திருடு போனது. இதுபற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் காவல்துறையினர் விசாரணை நடத்தி, நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தை சேர்ந்த நந்தகுமார், திருப்பூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜா ஆகியோரை கைது செய்தனர். அவர்களிடமிருந்து திருடுபோன இருசக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். இந்த வழக்கு சேலம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. கடந்த 3 நாட்களுக்கு முன்பு இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரரான வெங்கடேஸ்வரன் தனது வண்டியை பெற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.
இதையடுத்து காவல்நிலையத்திற்கு வண்டியை வாங்க அவர் வந்தார். அப்போது அவரிடம் இருசக்கர வாகனத்தில் இருந்த மட்கார்டு மற்றும் இன்ஜின் அருகேயுள்ள ஒரு பகுதியை மட்டும் கொடுத்து அதனை எடுத்துக் கொண்டு வண்டியை பெற்றுக் கொண்டதாக எழுதித் தருமாறு தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனை பார்த்ததும் வெங்கடேஸ்வரன், இது எனது வண்டி இல்லை எனவும் வண்டிக்கு இன்ஜின், டயர் எதுவும் இல்லையா? எனவும் காவல்துறையினரிடம் கேட்டார். இதைத்தான் பறிமுதல் செய்தோம் என காவல்துறையினர் கூறியுள்ளனர். வானிலை: அடுத்த 5 நாட்களுக்கு தமிழ்நாட்டில் போட்டுத்தாக்கப்போகும் மழை; குடை முக்கியம் மக்களே.. முழு வானிலை அறிவிப்பு உள்ளே.!
இதுபற்றி காவல்துறையினரிடம் கேட்டபோது, “கைது செய்யப்பட்டுள்ள நந்தகுமார் மீது ஏழு டூவீலர் திருட்டு வழக்கு உள்ளது. அவரை பிடிக்கும் போது இதனைத்தான் எங்களால் பறிமுதல் செய்ய முடிந்தது. அவர் வண்டியில் உள்ள பாகங்களை பிரித்து விற்பனை செய்து விட்டார். மேலும் கைது செய்யப்பட்டவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது” என்றனர். வெங்கடேஸ்வரனிடம் தொடர்பு கொண்டு கேட்டபோது, “டூவீலரை பறிமுதல் செய்து விட்டதாக வண்டியின் புகைப்படத்தை காட்டினர். இதனால் தான் டூவீலரை வாங்க வந்தேன். எனது வண்டியை பறிமுதல் செய்யவில்லை என கூறியிருக்கலாம். இதுதொடர்பாக உயர் அதிகாரிகளிடம் புகார் கொடுப்பேன்” என்றார். இது தொடர்பாக காவல்துறையிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.