Kerala Controversy: 40 பேரை பலிகொண்ட புல்வாமா தாக்குதல் பாஜகவின் சதி? - கேரள எம் பி ஆண்டோ ஆண்டனியின் சர்ச்சை பேச்சு..!
புல்வாமா தாக்குதலில் பாகிஸ்தானுக்கு எந்த தொடர்பும் இல்லை என காங்கிரஸ் எம்பி ஆண்டோ ஆண்டனி தெரிவித்துள்ளார்.
மார்ச் 14, பத்தனம்திட்டா (Kerala News): கடந்த 2019-ம் ஆண்டு பிப்ரவரி 14-ம் தேதி ஜம்முவில் இருந்து ஸ்ரீநகருக்கு 2,547 துணை ராணுவப் படை வீரர்களை ஏற்றிக்கொண்டு 78 ராணுவ வாகனங்கள் வரிசையாக சென்று கொண்டிருந்தன. அன்று மதியம் 3.30 மணியளவில் ராணுவ வாகனங்கள் புல்வாமா பகுதியில் சென்று கொண்டிருந்த நிலையில், திடீரென்று ஒரு கார் வேகமாக வந்து, துணை ராணுவப் படையினர் வந்து கொண்டிருந்த ஒரு பேருந்தின் மீது பயங்கரமாக மோதியது (Pulwama attack). அந்தக் காரில் வெடிகுண்டு நிரப்பப்பட்டிருந்தது. இதனால், அந்தக் கார் மோதிய பேருந்து வெடித்துச் சிதறியது. இதில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
இந்நிலையில் இந்த தாக்குதல் குறித்து கேரள எம் பி ஆண்டோ ஆண்டனி (Congress MP Anto Antony) சர்ச்சைக்குரிய கருத்துக்களை பகிர்ந்துள்ளார். பத்தனம்திட்டாவில் (Pathanamthitta) செய்தியாளர்களிடம் பேசிய ஆண்டனி, "லோக்சபா தேர்தலுக்கு முன்னதாக CAA அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 2019 லோக்சபா தேர்தலுக்கு முன் புல்வாமா தாக்குதல் நடந்தது. விஷயம் தெரிந்தவர்களுக்குத் தெரியாமல், இவ்வளவு பெரிய அளவிலான வெடிபொருட்கள் எப்படிக் குவிக்கப்பட்டது என்று பாதுகாப்புத் துறையினர் குழப்பமடைந்தனர். அதில் பாகிஸ்தானின் பங்கு என்ன? பாதுகாப்புப் பணியாளர்களின் உயிர்கள் தியாகம் செய்யப்பட்டன, இதை அப்போதைய ஜே & கே ஆளுநர் சத்ய பால் மல்லிக் ஏற்கனவே சுட்டிக்காட்டியுள்ளார். Tata Motors Investment In Tamil Nadu: தமிழகத்தில் 9 ஆயிரம் கோடி முதலீடு செய்யும் டாடா.. கிடைக்கப்போகும் நன்மைகள் என்னென்ன?.!
ஜவான்களை ஹெலிகாப்டர் மூலம் ஏற்றிச் சென்றிருக்க வேண்டும் என்று பாஜகவால் நியமிக்கப்பட்ட அப்போதைய கவர்னரே கூறினார். இவ்வளவு பெரிய எண்ணிக்கையிலான பணியாளர்களை சாலை வழியாக ஏற்றிச் செல்ல அனுமதிக்க முடியாது. ஆனாலும், அவர்கள் வேண்டுமென்றே சாலை வழியாக அழைத்துச் செல்லப்பட்டு தாக்குதல் நடந்தது. இதனால் அவர்கள் இறந்தனர். இதைத்தான் கவர்னர் கூறினார்" என்று பேசியுள்ளார். தற்போது இவரின் கருத்துக்கள் மிகப்பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் இதற்கு பதிலளித்துள்ள கேரள பாஜக தலைவர் கே சுரேந்திரன் (Kerala BJP President K Surendran), "ஆண்டனியின் பாகிஸ்தான் ஆதரவு கருத்துக்கு பத்தனம்திட்டா வாக்காளர்கள் தகுந்த பதிலடி கொடுப்பார்கள். ஆன்டோ ஆண்டனி மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். புல்வாமாவில் நடந்த தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த இந்திய ராணுவ வீரர்களை ஆண்டனி அவமதித்துள்ளார்" என்று பேசியுள்ளார்.