Bihar Assembly Election 2025 Results (Photo Credit: Team LatestLY)

நவம்பர் 14, பாட்னா (Bihar News): பீகார் மாநில சட்டப்பேரவை தேர்தல் 2025 (Bihar Assembly Elections 2025) இரண்டு கட்டங்களாக நடைபெற்று முடிந்து, இன்று தேர்தல் முடிவுகள் வெளியாகி வருகின்றன. இந்த தேர்தலில் நிதிஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம், பாரதிய ஜனதா கட்சி கூட்டணி அமைத்து தேர்தலை சந்தித்து இருந்தது. அதே நேரத்தில், தேஜஸ்வி யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளம் & காங்கிரஸ் கட்சி இணைந்து தேர்தலை எதிர்கொண்டது. அரசியல்களத்தில் நிதிஷ் குமாரும் - தேஜஸ்வியும் எதிரெதிர் துருவங்களாக களமிறங்கி இருந்தனர். தேர்தல் ஆணையம் மேற்கொண்ட வாக்காளர் சிறப்பு சீர்த்திருத்தம் தொடர்பான நடவடிக்கையில் 70 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டு இருந்தனர். ராகுல் காந்தியும், பீகார் இளைஞரின் மாஸ் ஹீரோவாக கவனிக்கப்படும் தேஜஸ்வி யாதவும் அனல்பறக்கும் பிரச்சாரங்களை முன்னெடுத்து இருந்தனர். அதே நேரத்தில், கடந்த 17 ஆண்டுகளுக்கும் மேலாக பீகார் மாநிலத்தில் தனது தலைமையிலான ஆட்சியை முன்னெடுத்து வரும் நிதிஷ் குமார், பாஜகவுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார். பெண் வாக்காளர்களை அதிகம் கொண்ட பீகாரில், பெண்களின் வாக்கு நிதிஷ் குமாருக்கு கிடைக்குமா? இளம் ஹீரோவாக அறியப்படும் தேஜஸ்விக்கு கிடைக்குமா? என்ற மிகப்பெரிய எதிர்பார்ப்பு எழுந்தது. Tirupathur News: சத்துணவு முட்டைக்காக சாதியை சொல்லி திட்டு.. சத்துணவு அமைப்பாளரின் கொடூர எண்ணம்.! 

பாஜக தலைமையிலான கூட்டணிக்கு மிகப்பெரிய வெற்றி உறுதி:

இந்நிலையில், இன்று வெளியாகி வரும் தேர்தல் முடிவுகளின்படி பாஜக தலைமையிலான் கூட்டணி மிகப்பெரிய அளவில் வெற்றிவாய்ப்பை உறுதி செய்துள்ளது. வாக்கு எண்ணிக்கை தொடக்கத்தில் இருந்தே, முன்னிலை நிலவரத்தில் பாஜக 190 தொகுதிகளை கடந்து இருக்கிறது. காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி 40 தொகுதிகளில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளின்படி, பாஜக கூட்டணி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை அமைக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. அதனை உறுதி செய்யும் வகையில் முன்னணி நிலவரம் தொடருகிறது. காங்கிரஸ் கூட்டணியின் முதல்வர் வேட்பாளராக கவனிக்கப்பட்ட தேஜஸ்வி யாதவ், தன்னை எதிர்த்து போட்டியிட்ட பாஜக வேட்பாளர் சதீஷ் குமாரிடம் இருந்து 500 முதல் 600 வாக்குகள் வித்தியாசத்தில் ஏற்ற-இறக்கத்தை சந்திக்கிறார். தற்போதைய நிலையில் பீகாரில் பாஜக கூட்டணி ஆட்சி உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், அம்மாநில முதல்வராக நிதிஷ் குமார் தொடருவார் என எதிர்பார்க்கப்படுகிறது. பெண்களின் வாக்கு அவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்துள்ளதாகவும், அரசியலில் எந்த சூழல் வந்தாலும், நிதிஷ் குமாரை அம்மாநில மக்கள் கைவிடவில்லை என்பதையும் இந்த வெற்றி உணர்த்துவதாக அரசியல் நிபுணர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். தொகுதி வாரியான வெற்றி நிலவரங்கள் இன்று மாலைக்குள் இறுதி செய்யப்படும் என்பதால், தற்போதே நிதிஷ் குமார் மற்றும் பாஜக தலைவர்களுக்கு வாழ்த்துக்கள் குவியத் தொடங்கிவிட்டது.

இந்த தேர்தலில் பீகார் மாநிலத்தில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற ஆவலுடன், அரசியல் வியூகத்தின் கிங் பின்னாக கவனிக்கப்பட்ட பிரசாந்த் கிஷோரின் ஜன்சுராஜ் கட்சிக்கு ஒரு தொகுதிகள் கூட கிடைக்கவில்லை.