Construction Accident: பாலம் கட்டுமான பணியில் சோகம்; முட்டுக்கள் சரிந்ததால் 8 பேர் படுகாயம்.!

கான்கிரீட் லாரி பாரத்தை தாங்கும் முட்டுக்கள் மீது இடித்ததால் அடுத்தடுத்து முட்டுக்கள் சரிந்து விபத்து ஏற்பட்டது.

Telangana Bridge Collapse (Photo Credit: ANI)

ஜூன் 21, ஹைதராபாத் (Telangana News): தெலுங்கானா (Telangana) மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் நகரில், பைரமால்கூடா சந்திப்பு (Bairamalguda Junction) எல்.பி நகரை இணைக்கும் வகையில் சாகர் சுற்றுவட்ட சாலை அமைக்கப்பட்டு வருகிறது. இந்த கட்டுமான பணியை அம்மாநில நெடுஞ்சாலைத்துறை மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், இன்று வழக்கம்போல கட்டுமான பணிகள் நடைபெற்று கொண்டு இருந்தன. ஊழியர்கள் பணியில் ஈடுபட்டுக்கொண்டு இருந்தனர். அந்த சமயத்தில், கான்கிரீட் மிக்ஸர் லாரி வந்துள்ளது.

லாரி எதிர்பாராத விதமாக பாலத்திற்கு அமைக்கப்பட்டு இருந்த முட்டு கம்பிகள் மீது மோதியதாக தெரியவருகிறது. இதனால் பாரம் தாங்காமல் அடுத்தடுத்து கம்பிகள் சரிந்துவிட, வேலை நடந்துவந்த இடைப்பட்ட பகுதியில் நின்ற ஊழியர்கள் அங்கு சிக்கிக்கொண்டனர்.

சுமார் 8 பேர் காயமடைந்த நிலையில், அவர்கள் செகந்திராபாத் நகரில் உள்ள கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 2 பேருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்த துறைரீதியான விசாரணை நடந்து வருகிறது.