ஆகஸ்ட் 14, சென்னை (Chennai News): சென்னை மாநகராட்சியில் ஒப்பந்த அடிப்படையில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தவர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்யக்கோரியும், தனியாருக்கு ஒப்பந்த அடிப்படையில் மாற்ற நடைமுறைக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கடந்த 14 நாட்களாக போராட்டம் நடத்தி வந்தனர். இது தொடர்பான வழக்கு சென்னை உயர்நீதிமன்ற அமர்விலும் நடைபெற்று வந்தது. Sanitary Workers Arrest Vs Coolie FDFS: ஒருபக்கம் கூலித் தொழிலாளர்கள் போராட்டம்.. மறுபக்கம் 'கூலி' கொண்டாட்டம்.. கடும் விமர்சனங்கள்.!
தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த உத்தரவு :
இந்த மனு விசாரணையின் போது சென்னை மாநகராட்சியின் ரிப்பன் மாளிகை பகுதியில் போராட்டம் நடத்தி வரும் துப்புரவு பணியாளர்களை உடனடியாக அப்புறப்படுத்த உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். மேலும் காவல்துறையினர் அனுமதி வழங்கும் இடத்தில் அவர்கள் போராட்டம் நடத்திக் கொள்ள அனுமதி இருப்பதாகவும் தெரிவித்தனர். மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் போராட்டம் நடத்துவதை நீதிமன்றம் அனுமதிக்காது எனவும் தெரிவிக்கப்பட்டது.
போராட்டத்தை கைவிட வலியுறுத்திய போலீசார் :
இதனை அடுத்து நேற்று நீதிமன்ற தீர்ப்பு வெளியான பின்னர் காவல்துறையினர் துப்புரவு பணியாளர்களை அங்கு இருந்து கலைந்து செல்ல அறிவுறுத்திய நிலையில், அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். பணி நிரந்தரம் செய்யக்கோரி போராடிய தூய்மை பணியாளர்களை சென்னை மாநகராட்சி ஒடுக்குமுறையை கையாண்டு அகற்றுவதாக பல தரப்பிலிருந்தும் கண்டனங்கள் எழுந்தன.
இரவோடு இரவாக கைது :
இதனிடையே சென்னை ரிப்பன் மாளிகையில் பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து சென்னை மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்திய துப்புரவு பணியாளர்கள் நீதிமன்ற உத்தரவின் பேரில் நேற்றிரவு கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் அமைச்சரவை கூட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கான 6 சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இது குறித்த விவரங்களை பின்வருமாறு காணலாம்.
தூய்மை பணியாளர்களுக்கான 6 சிறப்பு திட்டங்கள் :
- தூய்மை பணியாளர்கள் சுயதொழில் தொடங்கினால் ரூ.3.50 லட்சம் மானியமாக நிதி உதவி வழங்கப்படும். இதற்காக ரூ.10 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
- தூய்மை பணியாளர்கள் பணியின் போது மரணம் அடைந்தால் அவர்களுக்கு ரூ.10 லட்சம் நிவாரண தொகையாக வழங்கப்படும்.
- தூய்மை பணியாளர்களின் குழந்தைகளின் நலனையும் கருத்தில் கொண்டு, உயர்கல்விக்காக உதவி தொகை வழங்கும் திட்டம் தொடங்கப்படும்.
- நகர்ப்புறத்தில் வீடு இன்றி வாழ்ந்து வரும் தூய்மை பணியாளர்களுக்கு 30,000 புதிய வீடுகள் கட்டி தரப்படும்.
- கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கிராமப்புறங்களில் வீடு கட்டும் திட்டத்தில் தூய்மை பணியாளர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் .
- தூய்மை பணியாளர்கள் தூய்மை பணிகளில் ஈடுபடும் போது தோல், நுரையீரல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் ஏற்படும். அவர்களின் உடல்நிலையை கருத்தில் கொண்டு சிகிச்சை அளிக்க திட்டம் அமல்படுத்தப்படும்.
இந்த திட்டங்கள் முதற்கட்டமாக சென்னையில் அமல்படுத்தப்பட்டு படிப்படியாக மாநிலம் முழுவதும் கொண்டுவரப்பட இருக்கிறது என தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.