ஆகஸ்ட் 13, சென்னை (Chennai News): சென்னை மாநகராட்சியில் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த பணியில் ஈடுபட்டிருந்த தூய்மை பணியாளர்களை, தனியார் நிறுவனத்துக்கு சொந்தமான காண்ட்ராக்ட்க்கு மாற்றி விடுவதாக புகார் எழுந்தது. பலரும் பணி நீக்கம் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் தகவல் வெளியானது. இதனால் துப்புரவு பணியாளர்கள் பலரும் கடந்த 11 நாட்களாக சென்னை மாநகராட்சி அலுவலக பகுதியில் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
துப்புரவு பணியாளர்களுக்கு அரசியல் கட்சிகள் ஆதரவு:
இந்த போராட்டத்துக்கு அரசியல் கட்சிகள் அடுத்தடுத்து ஆதரவு தெரிவித்து நேரில் சந்தித்து வந்ததால் பிரச்சனை விஸ்வரூபம் எடுக்கத் தொடங்கியது. தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த், தவெக தலைவர் விஜய், நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான், காங்கிரஸ் தமிழ்நாடு மாநில தலைவர் செல்வப்பெருந்தகை ஆகியோர் நேரில் சந்தித்து வந்ததால் மாநகராட்சி பிரச்சனையை முடிவுக்கு கொண்டு வர வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டது. Breaking: சிறப்பு வகுப்பில் பள்ளி மாணவன் மயங்கி விழுந்து மரணம்.. விழுப்புரத்தில் சோகம்.. கலங்கவைக்கும் வீடியோ.!
பணி நிரந்தரம் செய்ய கோரிக்கை:
கடந்த 25 ஆண்டுகளாக வேலை பார்க்கும் தங்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும், தனியார் மயமாக்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும், ஆட்சிக்கு வருவதற்கு முன் அமைச்சர் மா.சுப்பிரமணியன் மற்றும் தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆகியோர் தந்த வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டுமென போராட்டக்காரர்கள் தங்களது கோரிக்கைகளை முன் வைத்தனர்.
மாநகராட்சியின் அறிவுறுத்தலை மீறி போராட்டம்:
இதனிடையே போராட்டத்தில் ஈடுபடும் தூய்மை பணியாளர்கள் உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் என மாநகராட்சி தரப்பில் அறிவுறுத்தப்பட்டது. பொதுநலனை கருத்தில் கொண்டு உடனடியாக பணிக்கு திரும்ப வேண்டும் எனவும், பணி பாதுகாப்பு வழங்குவதை மாநகராட்சி 100% உறுதி செய்யும் எனவும் சென்னை மாநகராட்சி தரப்பில் கோரிக்கை வைக்கப்பட்டு அறிக்கை வெளியிட்டது. இதனை மீறியும் போராட்டம் தொடர்ந்தது.
உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு:
இது தொடர்பான வழக்கு விசாரணை உயர்நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், தற்போது காவல்துறையினருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதன்படி அனுமதிக்கப்படாத இடத்தில் போராடிவரும் தூய்மை பணியாளர்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், அனுமதிக்கப்பட்ட இடத்தில் போராட்டம் நடத்திக்கொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளது. மேலும் மக்களுக்கு இடையூறு ஏற்படும் விஷயத்தை நீதிமன்றம் பார்த்துக் கொண்டிருக்காது எனவும் தெரிவித்துள்ளது.