World Food Day 2024: "பசி வந்தால் பத்தும் பறந்து போகும்" உலக உணவு தினம்..!

எல்லோருக்கும் போதுமான உணவு கிடைக்க வேண்டும் என ஆண்டு தோறும் அக்டோபர் 16ம் தேதி உலக உணவு தினம் கொண்டாடப்படுகிறது.

World Food Day (Photo Credit: LatestLY)

அக்டோபர் 16, சென்னை (Special Day): உலகில் உள்ள அனைத்து உயிர்களும் உயிர்வாழ அடிப்படை ஆதாரம் உணவுதான். நோய் நொடியின்றி மனிதன் உயிர்வாழ தேவையான ஊட்டச்சத்து, உணவு மூலமாகத் தான் நமக்கு கிடைக்கிறது. அத்தகைய உணவை சிறப்பிக்க, உலக உணவு தினம் (World Food Day), ஒவ்வோர் ஆண்டும் அக்டோபர் 16 அன்று கொண்டாடப்படுகிறது.

வரலாறு: ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் விவசாய அமைப்பு 1945 இல் நிறுவப்பட்டது. 1979 இல், இவ்வமைப்பின் FAO மாநாட்டில், உலக உணவு தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டது. அதன்பிறகு, 150-க்கும் மேற்பட்ட நாடுகள் ஒன்றிணைந்து உலக உணவு தின கொண்டாட்டத்தை அங்கீகரித்தன. உணவுப் பாதுகாப்பை உறுதிசெய்து பசியை எதிர்த்துப் போராடுவதும் உலக உணவு தினத்தின் முதன்மை நோக்கமாக கருதப்படுகிறது. Global Handwashing Day 2024: "வாஷ் பண்ணுங்க வாஷ் பண்ணுங்க வாஷ் பண்ணிக்கிட்டே இருங்க.." இன்று உலக கை கழுவுதல் தினம்.!

உணவு பாதுகாப்பு: அறிவியல் முன்னேற முன்னேற முதலில் பாதிக்கப்பட்டது உணவு வகைகள்தான். நீண்ட நாட்கள் கெடாமல் இருப்பதற்காக உணவு வகைகளில் சேர்க்கப்படும் ரசாயனங்கள் நம் உடல் நிலையைப் பாதித்து பல்வேறு உடல் பாதிப்புகளுக்கு வழிவகுக்கிறது. நம்மில் பலரும் உணவை டப்பர் வேர் தொடங்கி பிளாஸ்டிக் டப்பாக்களில் அடைத்துவைத்துதான் சாப்பிடுகிறோம். இதனால் பல நோய் அபாயங்கள் ஏற்படுகின்றன. தரமற்ற உணவு பொருட்களால் 200 வகையான நோய்கள் உருவாகுவதாக கூறப்படுகிறது. இதனால் ஆண்டு தோறும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்து வருகின்றனர். ஆனால் உணவுப் பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதன் மூலமாக ஆரோக்கியமான வாழ்க்கை நோக்கி செல்ல முடியும்.

இந்தியாவின் தரவரிசை: உலகளாவிய பசி அட்டவணை 2023 இல் 125 நாடுகளில் இந்தியா 111வது இடத்தில் உள்ளது, இது கடுமையான பசியின் அளவைக் குறிக்கிறது. அண்டை நாடுகளான பாகிஸ்தான் (102), வங்கதேசம் (81), நேபாளம் (69), இலங்கை (60) ஆகிய நாடுகள் இந்தியாவை விட சிறப்பாக செயல்படுவதை இந்த அட்டவணை நமக்கு நினைவுபடுத்துகிறது. ஆனால் ஆண்டுதோறும் கோடிக்கணக்கான டன் உணவு தானியங்கள் இங்கு வீணாகிறது.