Mpox in India: இந்தியாவில் பதிவான குரங்கம்மை பாதிப்பு.. அறிகுறிகள் மற்றும் சிகிச்சை முறைகள் பற்றி தெரியுமா?!
மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட தகவலின் படி, இந்தியாவில் குரங்கு அம்மை தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
செப்டம்பர் 09, புதுடெல்லி (New Delhi): உலக நாடுகளிடையே குரங்கு அம்மை (Mpox) பரவல் அதிகரித்து வருகிறது. ஆப்பிரிக்க நாடுகளில் மட்டுமே சமீபகாலமாக தென்பட்ட இந்த நோய், தற்போது ஐரோப்பிய, ஆசிய நாடுகளிலும் பரவ ஆரம்பித்துள்ளது. இந்தியாவில் இந்த பாதிப்பு ஏற்படாமல் தவிர்க்க, விமான நிலையங்கள், எல்லைகளில் பயணிகளுக்கான பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தற்போது வரை இந்தியா உள்பட 115 நாடுகளில் குரங்கு அம்மை பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் முதல் பாதிப்பு: இந்நிலையில் வெளிநாட்டில் இருந்து வந்த நபர் ஒருவருக்கு குரங்கு அம்மை அறிகுறிகள் தென்படுவதாக தகவல்கள் வெளியாகின. இதுபற்றி தகவலறிந்த மத்திய அரசு, உடனே அவரை தனிமைப்படுத்தி தொடர் கண்காணிப்பில் வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட நபர் தற்போது மருத்துவமனையில் இருப்பதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். மற்றும் கவலைக்குரிய அபாயம் ஏதுமில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. Fake Doctor Surgery: யூடியூப் வீடியோ மூலம் அறுவை சிகிச்சை; 15 வயது சிறுவன் உயிரிழப்பு.. போலி மருத்துவருக்கு வலைவீச்சு..!
குரங்கு அம்மை: எம்-பாக்ஸ் தொற்று என்பது 1958 இல் டென்மார்க் தலைநகரம் கோபன்ஹேகனில் ஆய்வகத்தில் வளர்க்கப்பட்ட குரங்குகளிடையே முதலில் கண்டறியப்பட்டதால் மங்க்கி பாக்ஸ் என்று பெயரில் வழங்கப்பட்டு வந்தது. 1970 இல் ஆப்ரிக்க நாடான காங்கோவில் முதன் முதலில் மனிதர்களுக்கு இந்த வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது கண்டறியப்பட்டது. அதனால் இது புதிய நோய் இல்லை என மருத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். குரங்கு அம்மை (Monkeypox) தட்டம்மை குடும்பத்தைச் சேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
அறிகுறிகள்: காய்ச்சல், தோலில் சிறு கொப்பளங்கள் (முகத்தில் தொடங்கி கை, கால், உள்ளங்கை மற்றும் உள்ளங்கால் வரை பரவக்கூடும்), நிணநீர் கணுக்கள் வீக்கம், தலைவலி, தசைபிடிப்பு, உடல் சோர்வு, தொண்டை புண் மற்றும் இருமல் போன்றவை பொதுவான அறிகுறிகளாக உள்ளன. கண் வலி அல்லது பார்வை மங்குதல், மூச்சுத்திணறல், நெஞ்சுவலி, மூச்சு விடுவதில் சிரமம், உணர்வு மாற்றம், வலிப்பு, சிறுநீர் வெளியேறும் அளவு குறைதல் போன்ற பாதிப்புகளும் ஏற்படும்.
சிகிச்சை: எம்-பாக்ஸ்க்கு இன்னும் குறிப்பிட்ட சிகிச்சை எதுவும் இல்லை. இருப்பினும், உலக சுகாதார அமைப்பு (WHO) வலி மற்றும் காய்ச்சல் போன்ற அதன் அறிகுறிகளுக்கு ஏற்ப மருந்து கொடுக்குமாறு பரிந்துரைக்கிறது. மேலும் குரங்கு அம்மை அறிகுறிகள் உங்களுக்கு ஏற்பட்டால் ஆரம்ப கட்டத்திலே மருத்துவரை அணுகுவது நல்லது. தொடக்கத்திலே சிகிச்சை எடுத்து கொண்டால் குணமடைய வாய்ப்புள்ளது. 1556kg of Meat Seized in Chennai: சென்னை ரயில் நிலையத்திற்கு வந்த 1556 கிலோ கெட்டுப்போன ஆட்டிறைச்சி.. பறிமுதல் செய்த உணவுப் பாதுகாப்புத்துறை அதிகாரிகள்..!
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:
- நீங்களோ / உங்களது குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கோ குரங்கு அம்மை அறிகுறி தென்பட்டால், உங்களுக்கு அருகாமையில் உள்ள சுகாதார மையத்திற்கு தகவல் தெரிவிக்க வேண்டும்.
- நோய் வாய் பட்டவர்கள் பயன்படுத்தும் படுக்கை உள்ளிட்ட எந்த பொருட்களையும் தொடுவதை தவிர்க்க வேண்டும்.
- உடலுறவு வைத்து கொள்ளும்போது பாதுகாப்பு முறையை கட்டாயம் பின்பற்றுங்கள்.
- நோய் பாதிப்பு ஏற்பட்டவர்களை மற்றவர்களிடமிருந்து தனிமைப்படுத்த வேண்டும்.
- தொற்று பாதிப்பு உடையவர்களுடன் தொடர்பு கொண்ட பிறகு கைகளை சுத்தமாக கழுவ வேண்டும். உதாரணமாக சோப்பு மற்றும் தண்ணீரை பயன்படுத்தியோ அல்லது ஆல்கஹால் கலந்த கைசுத்திகரிப்பான்களை பயன்படுத்தியோ கழுவலாம்.
- அருகில் உள்ளவர்களுக்கு நோய் பரவுவதை குறைப்பதற்கு, நோயாளியின் மூக்கு மற்றும் வாயை மறைக்கக்கூடிய மருத்துவ முககவசத்தை பயன்படுத்துதல், நோயாளியின் தோலில் இருந்து உதிரக்கூடிய சொரியை தூய்மையான துணி கொண்டு மறைப்பது உள்ளிட்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.