Ram Navmi 2024: ஸ்ரீ ராம நவமி 2024 உற்சவம்.. வழிபாடு முறைகளும், விரத நன்மைகளும்.. முழு விபரம் இதோ.!
ஒவ்வொரு ஆண்டும் தமிழ் புத்தாண்டு பிறந்த கொண்டாட்டத்துடன், ஸ்ரீ ராமரின் கூற்றுப்படி அன்புடன், அனைத்து உயிரினங்களிடமும் பண்புடன், தனிமனித ஒழுக்கத்தோடு நடக்க வேண்டி எடுக்கப்படவேண்டிய உறுதிமொழியாக ராம நவமி சிறப்பிக்கப்படுகிறது.
ஏப்ரல் 14, சென்னை (Chennai): இந்துமத புராணங்களின்படி கோசலை நாட்டை ஆட்சி செய்து வந்த தசரத சக்கரவர்த்தியின் மூத்த மகனாக பிறந்தவர் ஸ்ரீ ராமர் (Lord Rama). தெய்வீகத் தன்மை கொண்ட ஸ்ரீ ராமர், வரலாற்று தகவல் மற்றும் மக்களின் நம்பிக்கைப்படி ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி பிறந்தார். இந்த நாள் ராமர் மண்ணில் அவதரித்த நாள் என்பதால், ராம நவமியாக (Ram Navmi) ஆண்டுதோறும் சிறப்பிக்கப்பட்டு வருகிறது. சித்திரை மாதத்தின் வளர்பிறை தொடங்கி நவமி திதி வரையில் சித்திரை நவராத்திரி திருவிழாவும் சிறப்பிக்கப்படுகிறது. மகாவிஷ்ணுவின் அவதாரங்களில் முக்கியமானதாக கருதப்படும் ராமாவதாரம் (Ramavatharam), விஷ்ணுவின் (Lord Vishnu) ஏழாவது அவதாரமும் ஆகும். இந்து சமயத்தோரால் மிக முக்கிய திருவிழாவாக சிறப்பிக்கப்படும் ராம நவமி அன்று, பக்தர்கள் விரதம் இருந்து ஸ்ரீ ராமரை வழிபடுவார்கள். சுக்லபட்ச பிரதமை திதியிலிருந்து நவமி திதி வரையில் உள்ள ஒன்பது நாட்களில் ஒவ்வொரு நாளும் விரதம் முக்கியத்துவம் பெரும். விரதம் இருக்கும் ஒன்பது நாட்களும் ராம நாமத்தை உச்சரித்து நாளொன்றுக்கு ஒரு முறை மட்டும் உணவு எடுத்துக் கொண்டு, காலையில் சர்க்கரை பொங்கல், பாயசம் உட்பட நைவேத்தியங்களுடன் ராமருக்கு துளசி மாலை, அனுமனுக்கு வடை மாலை சாற்றி வழிபடுவது நன்மையை தரும்.
ராம நவமி சிறப்பு வழிபாடு: ஒவ்வொரு நாளும் ராமருக்கான வழிபாடுகளை செய்ய இயலாதவர்கள், ராமநவமி அன்றாவது அதனை செய்து விரதத்தை முடிக்கலாம். சூரியன் மேஷ ராசியிலும், செவ்வாய் மகர ராசியிலும், குரு கடக ராசியிலும், சுக்கிரன் மீன ராசியிலும், சனி துலாம் ராசியிலும் உச்ச நிலையில் இருக்கும் ராமரின் ஜாதகம் சிறப்பு வாய்ந்த ஜாதகமாகவும், நினைத்ததை ஈடேற்றும் ஜாதகமாகவும் இருக்கிறது. நவமி திதியில் பிறந்த ராமரின் தெய்வத்தன்மையை தொடர்ந்து கொண்டாட, ராமரின் நலன்களை போதிக்க இன்றளவும் தொன்றுதொட்டு ராம நவமி சிறப்பிக்கப்பட்டு வருகிறது. ராம நவமி அன்று ராமபிரானை விரதம் இருந்து வழிபடுவது லட்சியத்தை நிறைவேற்ற உதவி செய்யும். ராமர், சீதா, லட்சுமணர், அனுமன் ஆகியோரின் வழிபாடு நிச்சயம் முன்னேற்றத்தை வழங்கும். இதில் தம்பதிகளின் ஒற்றுமையை மேலோங்க அனுமன் வழிபாடு சிறப்பு மிகுந்ததாகும். அன்றைய நாளின் நல்லநேரம் காலை 09:30 முதல் 10:30 மணி வரையிலும், மாலை 04:30 முதல் 05:30 மணி வரையிலும் கணிக்கப்பட்டுள்ளது.
ராமர் குறித்து சுருக்கமாக: சூரிய குலத்தில் தசரத சக்கரவர்த்திக்கு மகனாக பிறந்து, சீதா தேவியை மணந்து, ஏக பத்தினி விரதனாக வாழ்ந்து வந்த ஸ்ரீ ராமர் தனது தந்தைக்கு கொடுத்த சத்தியத்திற்காக வனவாசம் சென்று, சிவன் அருளால் பெற்ற சக்திகளை பயன்படுத்தி செய்த அதர்மங்களை அழிக்க ராவணனை வதம் செய்து, பின் சீதையை மீட்டு ஒழுக்கம் மிகுந்த மனிதராகவும், தனிமனித ஒழுக்கத்திற்கு அடையாளமாகவும் வாழ்ந்தவர். ஸ்ரீ ராமர் பிறந்தநாளை ராமநவமியாக கொண்டாடப்படுகிறது. ராம நவமியில் இறைவனை வழிபடுவது நினைத்த காரியம் நிறைவேறவும், திருமண நிகழ்ச்சிகள் கைகூடவும், பிரிந்த தம்பதிகள் இணையவும், எதிரிகளின் தொல்லை ஒளியவும், நோய்கள் அகன்று நீண்ட ஆயுள் கிடைக்கவும், செல்வங்கள் பெருகவும், ஆஞ்சநேயரின் அருள் கிடைக்கவும் வழிவகை செய்யும். ஸ்ரீராம நவமி அன்று பல ஆலயங்களில் ஆன்மீக சொற்பொழிவு, சிறப்பு பூஜை மற்றும் நிகழ்ச்சிகள் வெகுவிமர்சையாக நடைபெறும். அட்டாட்சர மந்திரத்தில் வரும் 'ரா', பஞ்சாட்சர மந்திரத்தில் வரும் 'மா' ஆகிய எழுத்துக்கள் இணைந்து, 'ராம' என்று வரும் நாமம் சைவம் மற்றும் வைணவத்தின் ஒற்றுமையை குறிக்கும் நாமமாக கருதப்படுகிறது. ஆகையால் தான் ராம மந்திரம் பேராற்றல் மிக்க ஆணவத்தையும் அழித்து அன்பையும், அறிவையும், மன அமைதியையும், மகிழ்ச்சியும் உண்டாக்கும் மந்திரமாக இருக்கிறது.
ராம நவமி முகூர்த்த நேரம்: இறைவனுக்கு வைத்து வழிபட வேண்டிய பொருள்களில் குங்குமம், சந்தனம், துளசி மாலை, ஆஞ்சநேயருக்கு வடை மாலை, பழங்கள், வெற்றிலை, பூ, சாதம், பாயாசம், வடை, நீர்மோர், தேங்காய், பஞ்சாமிர்தம், வாழைப்பழம் ஆகியவை இருப்பது உறுதி செய்வது நல்லது. அர்ச்சனை பொங்கலை குழந்தைகளுக்கு கொடுப்பது நன்மையை உண்டாக்கும். ராம நவமிக்கான முகூர்த்த நேரமாக காலை 11:08 முதல் மதியம் 01:36 வரை கணிக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீராம மந்திரம்:
நன்மையும் செல்வமும் நாளும் நல்குமே..
தீன்மையும் பாவமும் சிதைந்து தேயுமே..
ஜென்மமும் மரணமும் இன்றி தீருமே..
இம்மையே "ராமா" என்னும் இரண்டெழுத்தால்... ஜெய் ஸ்ரீராம்
(Social media brings you the latest breaking news, viral news from the world of social media including Twitter, Instagram and YouTube. The above post is embedded directly from the user's social media account. This body of content has not been edited or may not be edited by Latestly staff. Opinions appearing on social media posts and the facts do not reflect the opinions of Latestly, and Latestly assumes no responsibility for the same.)