Vaikasi Visakam 2024: இன்று முருகனுக்கு உகந்த வைகாசி விசாகம்: பக்தர்கள் வெள்ளம், அரோகரா கோஷத்தால் களைகட்டும் திருச்செந்தூர்..!
இதனால் திருச்செந்தூர் நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.
மே 22, திருச்செந்தூர் (Thoothukudi News): உலகளவில் கவனிக்கப்படும் திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில், இன்று வைகாசி விசாக கொண்டாட்டமானது நடைபெற்று வருகிறது. முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கும் திருச்செந்தூரில் வீற்றிருக்கும் சுப்பிரமணியர் பிறந்த வைகாசி விசாக நாளன்று, முருகனை தரிசித்தால் நற்பலன்கள் வாழ்வில் கிடைக்கும் என்பதை ஐதீகம். இதனால் இன்றைய நாளில் திருச்செந்தூர் நோக்கி இலட்சக்கணக்கான பக்தர்கள் படையெடுப்பார்கள். கோடை விடுமுறை காரணமாக ஏற்கனவே திருச்செந்தூரில் பக்தர்கள் கூட்டம் அலைமோதி வரும் நிலையில், தற்போது வெளிமாநிலத்தில் இருந்தும், வெளி மாவட்டத்தில் இருந்தும், பாதயாத்திரை, அழகு குத்தி காவடி எடுத்து விரதம் இருந்து பலரும் திருச்செந்தூருக்கு வந்துள்ளனர். இதனால் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். பக்தர்கள் கடலில் புனித நீராடியும் மகிழ்ந்து வருகின்றனர். Vaikasi Visakam 2024: முருக பக்தர்களே தயாரா? வைகாசி விசாகம் 2024..வழிபாடு முறைகள், விசேஷத்தை தெரிஞ்சிக்கோங்க.!
இன்று அதிகாலை ஒரு மணியளவில் சுப்பிரமணியர் கோவிலில் நடை திறக்கப்பட்டு, விஸ்வரூப தீபாராதனை, உதயமார்த்தாண்ட அபிஷேகம் ஆகியவை நடைபெற்றது. காலை 10:30 மணிக்கு மேல் உச்சிகால அபிஷேகமும் சிறப்பு அபிஷேகமும் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சிகள் நிறைவு பெற்றதும் பக்தர்கள் கோவில் வளாகத்தில் வைத்து பாரம்பரியமாக மீன் சமைத்து சாப்பிடுவது அவர்களின் விரதத்தை முடித்துக் கொள்வதாக கருதப்படுகிறது. ஆனால், நடப்பு ஆண்டில் கோவில் வளாகத்தில் மீன் சமைத்து அசைவ உணவுகளை சாப்பிடுவதற்கு தடை விதித்து கோவில் நிர்வாகம் தரப்பில் உத்தரவிடப்பட்டுள்ளது. நெருப்பில் இருந்து அவதரித்த முருகனை குளிர்விக்க பக்தர்களின் பால்குட அபிஷேகம் இன்று வெகுவிமர்சையான ஒன்று ஆகும். வைகாசி விசாக விரதம் இருந்து முருகப்பெருமானை மனமுருகி வேண்டுவோருக்கு, முற்பிறவி பாவ வினைகள் நீங்கும், வாழ்க்கையில் நிம்மதி உண்டாகும் என்பது ஐதீகம்.