ஜூலை 28, ஸ்ரீவில்லிபுத்தூர் (Festival News): அம்மனுக்கு உகந்த ஆடி மாதத்தில் திங்கட்கிழமை பூரம் நட்சத்திரம் அன்று ஆடிப்பூரம் (Aadi Pooram 2025) கொண்டாடப்படுகிறது. இந்த நாளில் அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடுகள், வளையல் அலங்காரத்துடன் கூடிய அம்மன் தரிசனம் போன்றவை கோலாகலமாக இருக்கும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் தேரோட்டமும் இன்று (ஜூலை 28) நடைபெறும். இந்த நன்னாளில் கோவிலுக்கு சென்று வழிபடுவது திருமண தடையை அகற்றும். அம்மனுக்கு வளையல் வாங்கி கொடுத்து, அம்மனுக்கு அணிவித்த பின் பிரசாதமாக கொடுக்கப்படும் வளையல்களை அணிந்து கொண்டால் பெண்களுக்கு விரைவில் திருமண பாக்கியம், குழந்தை பாக்கியம் கிட்டும் என்பது நம்பிக்கை.
ஆடிப்பூரம் சிறப்பு பூஜை :
அம்மனுக்கு வளையல் உள்ளிட்ட மங்கல பொருட்கள் வாங்கிக் கொடுத்து வழிபட்டால் வாழ்வில் நல்லது மட்டுமே நடக்கும் என்பது நம்பிக்கை. இன்று தமிழகம் முழுவதும் விமர்சையாக ஆடிப்பூரம் சிறப்பிக்கப்பட்டு வரும் நிலையில், விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவிலில் தேரோட்டம் நடைபெற்று வருகிறது. அதேபோல ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோவிலில் சிறப்பு பூஜைகளுடன் பக்தர்கள் தரிசனம் செய்து வருகின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி கோவிலில் சிறப்பு பூஜை மற்றும் ஆடிப்பூரம் கொண்டாட்டம் நடைபெற்று வருகிறது.
ஆடிப்பூரம் 2025 நல்ல நேரம் :
ஜூலை 28ஆம் தேதியான இன்று காலை 06:15 முதல் 07:15 வரை, காலை 9:00 மணி முதல் 9:20 மணி வரை, மாலை 04:45 முதல் 05:45 வரை என மூன்று நல்ல நேரங்கள் இருக்கின்றன. கெளரி நல்ல நேரத்தை பொறுத்தவரையில் காலை 09:15 முதல் 10:15 வரை, மாலை 07:30 முதல் 08:30 வரை நல்ல நேரங்கள் இருக்கின்றன. ஆடிப்பூரத்தில் குளிகை நேரம் மதியம் 01:30 முதல் 03:00 வரை இருக்கிறது. Health Tips: பெண்களே.. தினமும் நீண்ட நேரம் சமையல் செய்றீங்களா?.. உங்களுக்குத்தான் இந்த எச்சரிக்கை செய்தி.!
அம்மன் வழிபாட்டிற்கு உகந்த நேரம் எது?
ஆடிப்பூரத்தன்று குளிகை நேரத்தில் அம்மன் வழிபாடு செய்வது மிகவும் சிறப்பு வாய்ந்ததாகும். குளிகை நேரத்தில் வழிபாடு செய்ய முடியாதவர்கள் இராகு காலம், எமகண்டத்தை தவிர்த்து மற்ற நேரங்களில் வழிபாடு செய்யலாம். அம்மனை மனதார வேண்டி பூஜை செய்தால் நினைத்தவை நிறைவேறி ஆரோக்கியத்துடனும், செல்வ செழிப்புடனும் வாழலாம்.
ஆடிப்பூரம் அம்மன் வழிபாடு :
ஆடிப்பூரத்தில் அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் ஆரோக்கியமும், செல்வ செழிப்பும் உண்டாகும். இன்று அம்மன் கோவிலுக்கு சென்று வழிபட இயலாதவர்கள் தங்கள் வீடுகளில் உள்ள பூஜையறையில் அம்மன் படத்திற்கு முன் பூக்கள், வளையல், சந்தனம், குங்குமம் வைத்து வணங்கலாம். குழந்தை வரம் வேண்டி வழிபடுவோர் அம்மனின் படத்திற்கு வளையல் மாலையை அணிவித்து மலர் அர்ச்சனை செய்ய வேண்டும். இளம் பெண்கள், திருமணமான பெண்களுக்கு வளையல் வாங்கியும் கொடுக்கலாம். இதன் மூலம் குழந்தை பாக்கியம் விரைவில் கிட்டும் என்பது நம்பிக்கையாகும்.