Navagraha Temple Tour: குறைந்த செலவில் நவக்கிரகங்கள் ஆன்மீக சுற்றுலா.. வாங்க போகலாம்.!

கோவிலுக்கு செல்லும் வழி, பயண நேரம், கோவிலின் சிறப்புகள் மற்றும் நடைதிறப்பு விவரங்களை காணலாம்.

Temple (Photo Credit: Pixabay)

செப்டம்பர் 25, புதுடெல்லி (New Delhi): ஜோதிட சாசனத்தில், நமது வாழ்க்கையில் நிகழும் இன்ப துன்பங்களுக்கு இந்த 9 கோள்களும் அவைகள் மாறும் திசைகள் பொருத்து தான் நிகழ்வதாக கூறப்படுகிறது. நவக்கிரங்களின் அதிபதியான சிவனின் தலங்களில் இந்த கோள்களுக்கென்று தனித்தனியாக ஒன்பது நவகிரகக் கோவில்கள் இருக்கின்றன. இந்த தலங்களில் தோஷங்களுக்கான பரிகாரங்கள் செய்வது நன்மை பயனளிக்கும். ஆன்மீக தலங்களுக்கு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களும், மன அமைதிற்காக சுற்றுலா செல்ல நினைப்பவர்களும் ஒரு நாள் பயணமாக கும்பகோணம், மயிலாடுதுறை, காரைக்காலில் அமைந்துள்ள நவக்கிரக கோவில்களுக்குச் சென்று வரலாம். கோவிலுக்கு செல்லும் வழி, பயண நேரம், கோவிலின் சிறப்புகள் மற்றும் நடைதிறப்பு விவரங்களை காணலாம்.

1. திங்களூர் - கைலாசநாதர் கோவில் (சந்திரன்)

நவகிரக கோவில்களில் முதலில் தரிசனம் செய்ய வேண்டியது திங்களூர் கைலாசநாதர் கோவில் (சந்திரன் தலம்). கும்பகோணம் பேருந்து நிலையத்திலிருந்து பாபநாசம், ஐயம்பேட்டை வழியாக 33 கி.மீ தொலைவில் உள்ளது இந்த திங்களூர். சுமார் 1 மணி நேரத்தில் கோவிலை அடைந்து விடலாம். இது கிராமத்திற்குள்ளே இருப்பதால் தேவையான பூஜை பொருட்களை வாங்கிவிட்டு செல்ல வேண்டும். மிக அமைதியாக இருப்பதால் நேர்மறை எண்ணங்களுடன் ஆன்மிகப் பயணத்தை தொடங்கலாம். அங்கு கைலாசநாதரையும், பெரிய நாயகி அம்பாளையும், சந்திர பகவானையும் தரிசித்து விட்டு காலை உணவையும் உண்டுவிட்டு அடுத்த கோவிலிற்கு கிளம்பலாம். World Pharmacists Day 2024: உலக மருந்தாளுநர் தினம்.. வரலாறு என்ன தெரியுமா?!

2. ஆலங்குடி - ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர் கோவில் (குருத்தலம்)

திங்களூரிலிருந்து புறப்பட்டு அடுத்த ஆலயமாக ஆலங்குடியில் உள்ள குருதலத்திற்கு அடுத்த அரைமணி நேரத்தில் அடைந்து விடலாம். அங்கு ஸ்ரீ ஆபத்சகாயேஸ்வரர், ஏழவார் குழலி அம்பாள் மற்றும் குருபகவானை தரிசித்துவிட்டு ஒருமணி நேரத்தில் கிளம்பலாம். இந்த ஆண்டிற்கான குருபெயர்ச்சி ஏப்ரல் 22ம் தேதி சனிக்கிழமை நிகழ்கிறது. குருபகவான், மீன ராசியிலிருந்து மேஷ ராசிக்கு பெயர்ச்சி அடைகிறார். பக்தர் கூட்டம் அதிகம் இருப்பதால் அந்நாளில் குருபகவானை தரிசிக்க அதிக நேரம் தேவைப்படும்.

3. திருநாகேஸ்வரம் - நாகநாதசுவாமி கோவில் (ராகு தலம்)

ஆலங்குடியிலிருந்து 20 கி.மீ தொலைவில் அமைந்துள்ள திருநாகேஸ்வரத்தை 40 நிமிடத்தில் அடைந்து விடலாம். பிரசித்திப் பெற்ற ராகு தலமான இக்கோவிலில் நாகநாதசுவாமியையும், கிரிகுஜாம்பிகை அம்பாளையும், ராகுபாகவானையும் தரிசித்து விட்டு வரலாம்.இத்தலத்தில் அதிகாலையில் ராகுபகவானிற்கு செய்யும் பாலபிஷேகம், அவரின் தலையில் வெள்ளை நிறமாகவும் உடலில் நீலநிறமாகவும் பாதத்தில் வருகையில் மீண்டும் வெள்ளையாகவும் மாறும். இதை நாகதோஷம் உள்ளவர்கள் பார்த்து வேண்டிக்கொண்டால் தோஷம் நிவர்த்தியாகும் என்பது ஐதீகம். மேலும் இங்கு திருமணத்தடை வேண்டியும் பிராத்தனை செய்வர்.

4. சூரியனார் கோவில் - (சூரியன்)

நவகிரக கோவில்களில் முதன்மை கோவிலான இத்தலம் சூரியபகவானிற்கு உரியது. ராகு கோவிலிலிருந்து 11 கிமீ தொலைவில் உள்ளது இந்த சூரியத்தலம். மாளிகை வடிவில் அமைக்கப்பட்டிருக்கும் இந்த தலத்தில் மற்ற நவகிரக தலத்தை போலன்றில்லாமல் சூரியனை மூலவராக கொண்டு காட்சியளிக்கிறார் என்பது கூடுதல் சிறப்பு. சூரிய பகவானுடன் உஷா தேவியும், சாயா தேவியும் சேர்ந்து தரிசனம் தருகின்றனர். ஏழரைசனி, அஷ்டமச்சனி, ஜென்மத்துசனி உள்ளவர்கள் இங்கு வந்து பிராத்தனை செய்தால் நன்மை நிகழும். பெரியதாக இருக்கும் இக்கோவில் அமைப்பு வித்தியாசமாகவும் இருக்கும்.

5. கஞ்சனூர் - அக்கினீஸ்வரார் (சுக்கிரன்)

சூரியனார் கோவிலிலிருந்து கஞ்சனூர் 5 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பதால் 20 நிமிடத்திலேயே அடுத்தல் தலத்திற்கு சென்றுவிடலாம். இங்கு அக்கீனிஸ்வரரையும், கற்பகாம்பிகை தாயாரையும் தரிசித்து சுக்கிரனை வழிபட்ட வேண்டும். வெண்மை நிறம் கொண்ட இத்தலத்தில் காட்சியளிக்கும் சுக்கிர பகவானை வழிபட்டால் அதிர்ஷ்டமும், செல்வத்தையும் அளிப்பார் என நம்பப்படுகிறது. இந்த கோவில் நடை மதியம் 1 மணியளவில் சாத்தப்படும். முதல் 5 கோவில்களும் சற்றூ அருகருகில் உள்ளதால் இவைகளை மதியத்திற்குள்ளாகவே பார்த்து முடித்துவிடலாம்.

6.வைத்தீஸ்வரன் கோவில் (செவ்வாய்)

கஞ்சனூரிலிருந்து புறப்பட்டு 20 கிமீ தொலைவிலுள்ள மயிலாடுதுறையை அடைந்துவிடலாம். அங்கு மதிய உணவை எடுத்துக் கொண்டு கிளம்பி 15 கி.மீ உள்ள வைதீஸ்வரன் கோவிலை அடைந்து விடலாம். செவ்வாய் தலமான வைதீஸ்வரன் கோவிலில், வைத்தியநாதசுவாமி, தையல்நாயகி அம்பாளையும், செவ்வாய் பகவானையும் தரிசித்துவிட்டு கிளம்பலாம். செய்வாய் தோஷம் உள்ளவர்கள் இத்தலத்தில் பரிகாரம் செய்தால் தோஷம் நீங்கும் என சொல்லப்படுகிறது. மேலும் உடலில் உள்ள நோய்கள் குணமாகவும் இங்கு பிராத்தனை செய்வர். மற்றூம் இவ்வூரில் தான் புகழ்பெற்ற நாடி ஜோதிடம் மற்றும் ஓலைச்சுவடி சோதிடமும் பார்க்கப்படுகிறது. Eggless Omelette Recipe: முட்டை இல்லாமல் ஆம்லெட் செய்வது எப்படி..? ரெசிபி டிப்ஸ் இதோ..!

7.திருவெண்காடு - சுவேதாரண்யேஸ்வரர் கோவில் (புதன் தலம்)

வைத்தீஸ்வரன் கோவிலிலிருந்து 16 கி.மீ தொலைவில் திருவெண்காட்டில் அமைந்துள்ள புதன்பகவான் தலத்தை 15 நிமிடத்தில் அடைந்து விடலாம். புத்திகாரகனான புதன் பகவானையும், சுவேதாரண்யேஸ்வரையும் மற்றும் பிரம்மவித்தா தாயாரையும் தரிசிக்கலாம். அறிவை அருளிக்கும் இத்தலத்தில் உள்ள மடத்தில் தங்கி பிராமணர்கள் வேதங்கள் படிப்பதையும் மாலை செல்வதால் காணமுடியும். வேத ஓதும் சத்தத்தில் சிவனை வழிபடுவதால் நல்ல எண்ணங்கள் மட்டுமே மனதில் நிழவும். குழந்தை இல்லாதவர்கள் இத்தலத்தில் தொட்டில் கட்டி வழிபட்டால் குழந்தை பாக்கியம் கிடைக்கும் என்பது ஐதீகமாக உள்ளது.

8. கீழ்பெரும்பள்ளம் - (கேது தலம்)

திருவெண்காட்டிலிருந்து 8 கி.மீ தூரத்தில் அமைந்துள்ளது இந்த கேது தலம். இக்கோவிலில் நாகநாதசுவாமியையும், சௌந்தரநாயகி அம்பாளையும், கேது பகவானையும் தரிசிக்க வேண்டும். கேது திசை நடப்பவர்கள், நாகதோஷம் உள்ளவர்கள், திருமண தடை நீங்கவும் இத்தலத்தில் வழிபட வேண்டும். நவகிரக கோவில்களுக்கு 2 நால் பயனமாக வந்தவர்கள் இதனுருகில் 8 கி.மீ உள்ள பூம்புகார் துறைமுகக் கடலுக்கும் செல்லலாம்.

9. திருநள்ளாறு - ஸ்ரீ தர்பரண்யேஸ்வரர் திருக்கோவில் (சனீஸ்வரர் தலம்)

நவகிரகங்களில் கடையாக செல்லும் தலம் திருநள்ளாரில் இருக்கும் சனிபகவானின் தலமாகும். கேது தலத்திலிருந்து 40 கி.மீ தொலைவில் உள்ளது இத்தலம். இங்கு திருநள்ளாற்றீசுவரர் என்னும் தர்பரண்யேஸ்வரரையும், பிராணாம்பிகை தாயாரையும், சனிபகவானையும் தரிசிக்கலாம். நளன் என்னும் மன்னன் இத்தலத்தில் உள்ல சிவனை வழிபட்ட பின் சனிபகவான் நளனை தன் பிடியிலிருந்து விடுத்தார் என்னும் கதை உண்டு. இதனால் ஜோதிடத்தில் சனி பிடியிலிருந்து விடுபட்டவர்கள் கடைசியாக இத்தலத்தில் வந்து தர்பணம் கொடுத்தால் தங்களை பிடித்த துன்ப காலம் முழுவதும் நீங்கிவிடும் என நம்பப்படுகிறது. மேலும் இடையன் என்னும் வரலாற்று கதையால் இத்தலத்தில் நந்தியும், பலிபீடமும், சற்று தள்ளி அமைந்திருப்பது சிறப்பாக உள்ளது.

நவகிகரக கோவிலில் வழிபடும் போது முதலிலேயே நவகிரகங்களை வழிபடக்கூடாது. முதலில் விநாயகரை வழிபட்டு பின் சிவனையும், பார்வதி தாயையும் தரிசித்துவிட்டே அக்கோவிலில் உள்ள நவகிரகங்களை வழிபடவேண்டும். நவகிரக கோவில்கள் பொதுவாகவே காலை 5 மணிமுதல் நண்பகல் 1மணி வரையும் மீண்டும் மாலை 4 மணிமுதல் 8 மணி வரை மட்டுமே நடை திறந்திருக்கும்.