Pleasure Travel At Budget Prices: பட்ஜெட் விலையில் இன்ப சுற்றுலா செல்ல வெறும் 5000 ரூபாய் போதும்..! மலைகளின் சின்ன இளவரசி காண..!
திண்டுக்கலில் அமைந்துள்ள சிறுமலைக்கு பட்ஜெட்களில் சுற்றுலா சென்று வர ஒரு அருமையான இயற்கை எழில் சூழ்ந்த மலைத்தொடர் ஆகும்.
ஜூன் 21, திண்டுக்கல் (Travel Tips): சுற்றுலா செல்ல விரும்புவர்கள் பெரும்பாலும் கொடைக்கானல், நீலகிரிக்கு சுற்றுலா சென்று வருகின்றனர். ஆனால், அங்கு அதிகம் செலவு ஏற்படும் என நினைப்பவர்கள் குறைந்த பட்ஜெட்களில் திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள சிறுமலைக்கு சுற்றுலா (Tourist Places in Dindigul) சென்று வரலாம். சிறுமலை வனப் பகுதியில் காட்டுமாடு, குரங்குகள், கடமான், கேளையாடு, முயல், கழுதை, காட்டு அணில் போன்ற பல்வேறு வனவிலங்குகள் மற்றும் பலவகையான பறவைகள் பலவிதமான மூலிகை செடிகளும் உள்ளன.
இப்படிப்பட்ட இயற்கை எழில் சூழ்ந்த சிறுமலை (Sirumalai) வனப்பகுதிக்கு தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் தினசரி ஏராளமான சுற்றுலா பயணிகள், தங்களது குடும்பத்துடனும் குழந்தைகளுடனும் வந்து செல்கின்றனர். இவ்வாறு, சுற்றுலா பயணம் செய்யும் பொதுமக்கள் இயற்கை அழகை ரசித்துக் கொண்டு, சிறுமலை அகஸ்தியர்புரம் பகுதியில் உள்ள வெள்ளிமலை சிவன் கோவிலில் தரிசனம் செய்துவிட்டு, அங்குள்ள தங்கும் விடுதியில் சிறிது நேரம் பொழுதைக் கழித்துவிட்டு, மகிழ்ச்சியாக வீடு திரும்புகின்றனர். இதன் முழு விவரங்களையும் இந்த பதிவில் பார்ப்போம்.
மலைகளின் சின்ன இளவரசி: திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சாலையில் அமைந்துள்ள சிறுமலைக்கு திண்டுக்கல் பேருந்து நிலையத்திலிருந்து, ஒரு மணி நேரத்திற்கு ஒருமுறை தென்மலை செல்லும் பேருந்து பயணிகளை ஏற்றி செல்கின்றது. பேருந்தில் செல்லும் பயணிகள் நத்தம் சாலையில் உள்ள மேம்பாலத்தை கடந்து சுமார் 5 கிலோ மீட்டர் தொலைவில், வலதுபுறமாக சென்று சிறுமலை நோக்கி பயணிக்க வேண்டும். ஆனால், பெரும்பாலான சுற்றுலா பயணிகள் பேருந்தில் செல்ல விரும்ப மாட்டார்கள். பேருந்தில் சென்றால் சிறுமலை இயற்கை அழகினை முழுவதுமாக ரசிக்க இயலாது. Young Man Died In Bike Accident : அதிவேகமாக இருசக்கர வாகனத்தில் சென்ற வாலிபர் பலி; நெஞ்சை பதைபதைக்க வைக்கும் சிசிடிவி காட்சிகள்..!
குளிர்ச்சியான காலநிலை: எனவே, அங்கு செல்பவர்கள் இருசக்கர வாகனம் மற்றும் கார்களில் குடும்பத்துடன் செல்வது நல்ல அனுபவத்தை தரும். இந்த மலைப்பாதை உச்சியை அடைய 18 கொண்டை ஊசி வளைவுகள் உள்ளது. இதில், நான்காவது கொண்டை ஊசி வளைவை கடந்தவுடன், ஜில் என்ற குளிர்காற்றுடன் கூடிய மூலிகை நறுமணத்தை உணரலாம். மேலும், அங்கு ஆண்டு முழுவதும் ஒரே மாதிரியான குளிர்ச்சியான காலநிலையே நிலவும் என்பது குறிப்பிடத்தக்கது ஆகும்.
உயர் கோபுர அழகு: சிறுமலையின் 17வது கொண்டை ஊசி வளைவில் அமைந்துள்ள உயர் கோபுரத்தின் மேலே சென்று மலையின் இயற்கையின் அழகை ரசிக்கலாம். இதனைதொடர்ந்து, சிறுமலை புதூர் கிராமத்திற்கு முன்பு 2010-ஆம் ஆண்டு செயற்கையாக உருவாக்கப்பட்ட சிறிய நீர் தேக்கம் அமைந்துள்ளது. இதில் வாரஇறுதியில் போதுமான நீர்வரத்து இருந்தால் மட்டும், அங்கு படகு சவாரி அனுமதிக்கப்படும். இந்த புதூர் கிராமத்தை கடந்து செல்லும் வழியில் அப்பகுதி மக்கள் அதிகளவில் விளைவிக்கப்படும் பலாப்பழம், சிறுமலை வாழை, மிளகு போன்றவற்றை காணலாம்.
பின்னர், மலை உச்சியில் அமைந்துள்ள அகஸ்தியர்புரம் சென்றால் மலை உச்சியில் உள்ள வெள்ளிமலை சிவன் கோவிலில் சுமார் 500 ஆண்டுகள் பழமையான சிவலிங்கம் உள்ளது. அகஸ்தியர்புரத்தில் சிவசக்தி சித்தர் பீடம் என்ற ஆசிரமம் அமைந்துள்ளது. இந்த ஆசிரமத்தில் காலை, மதியம், மாலை என அனைத்து வேளைகளிலும் அன்னதானம் வழங்கப்படுவது சிறப்பு. இக்கோவிலுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் மலையேறி செல்லும் வழியில் செல்பி எடுத்து மகிழ்ந்து வருவதுடன், மலை உச்சியில் உள்ள வெள்ளிமலை கோவில் பின்புறம் சென்று இயற்கை காட்சிகளை ரசித்து புகைப்படம் எடுத்துக்கொண்டு மகிழ்வர்.
தங்கும் விடுதி வசதி: அப்பகுதியில் சுற்றுலா பயணிகள் தங்கும் அறைகள், ரிசார்ட்டுகள் என தனித்தனியே உள்ளன. ரூ.700-லிருந்து 2000 ரூபாய் வரை உங்கள் வசதிக்கு ஏற்றவாறு அறைகளை தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம். ஒரு குடும்பத்திற்கு அறை, உணவு என மொத்தமே 5 ஆயிரம் இருந்தால் போதுமானது ஆகும். தூரத்தைப் பொறுத்து பயண செலவு மட்டும் மாறுபடும். அங்கு படகு சவாரி, நீச்சல் குளம், ப்யர் கேம்ப் (Fire Camp) வசதி கொண்ட ரிசார்ட்டுகளும் உள்ளதால் பட்ஜெட் சுற்றுலா பிரியர்களுக்கு சிறுமலை சென்று வருவது ஒரு திருப்தியான இன்ப சுற்றுலாவாக அமையும்.