Foot Infection Prevention (Photo Credit : Pixabay)

நவம்பர் 07, சென்னை (Health Tips): மழைக்காலத்தில் சாலைகளில் தேங்கியிருக்கும் நீரில் நடக்கும் போது காலில் பூஞ்சை தொற்று (Fungal Infection) ஏற்படும் அபாயம் மிக அதிகம் என தோல் நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். கால் விரல் இடையில் தோல் வெள்ளையாகி அரிப்பு, ஈரப்பதம், துர்நாற்றம், எரியும் தன்மை போன்றவற்றுடன் தொடங்கும் இந்த பூஞ்சை தொற்று பொதுவாக சேத்துப்புண் (Athlete's Foot) என்று அழைக்கப்படுகிறது. இந்த தொற்று காலில் நீண்ட நேரம் ஈரப்பதம் இருக்கும் போது ஏற்படுகிறது. குறிப்பாக மழையால் நனைந்த காலணிகள், சாக்ஸ், ஈரத்தன்மை போன்றவை பூஞ்சை தொற்று உருவாகும் சூழலை ஏற்படுத்துகிறது. Health Tips: குப்புற படுத்து வயிற்றை அழுத்தியபடி உறங்குறீங்களா? உடலில் இந்த மாற்றங்களை கவனிங்க.!

சேத்துப்புண் அறிகுறிகள் & தடுப்பு முறைகள் (Athlete's Foot Symptoms):

சேத்துப்புண் ஏற்படும் போது முதலில் பூஞ்சை தொற்று காரணமாக கால் விரல் இடைவெளியில் வெள்ளை நிறமாக ஈரப்பதமான செதில் தோல் காணப்படும். அந்த தோல் மெதுவாக உரிய தொடங்கும். இதனுடன் கடுமையான அரிப்பு, எரிச்சல் உணர்வு (Burning Sensation), மற்றும் துர்நாற்றம் இருக்கும். சில நேரங்களில் பாதித்த பகுதியில் தோலில் சின்ன நீர்க்கட்டி போல உருவாகவும் வாய்ப்பு உள்ளது. இதனால் சேத்துப்புண் ஏற்படாமல் இருக்க கால்களை மழைக்காலங்களில் ஈரப்பதம் இல்லாமல் பராமரிப்பது அவசியம். காலணி அணிந்து செல்லும்போது குட்டை, சாலையில் தேங்கி நிற்கும் தண்ணீரில் கால் படாமல் செல்வதன் மூலம் பூஞ்சை தொற்று ஏற்படுவதை தடுக்க இயலும். ஷு அணிவோர் சாக்ஸ்களை தினமும் மாற்ற வேண்டும். ஷுவை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை மாற்றி மாற்றி பயன்படுத்துவதால் உள்ளே காற்று செல்லும் வாய்ப்பு கிடைக்கும். அதுபோல மழையில் நனைந்த உடன் கால்களை நன்றாக கழுவி உலர்த்த வேண்டும்.

காலணி அணிவதன் அவசியம்:

3 நாட்களுக்கு பிறகும் காலில் பூஞ்சை தொற்று இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுகுவது நல்லது. சாலையில் தேங்கி இருக்கும் மழைநீரில் பல வகையான பூஞ்சை மற்றும் பாக்டீரியா போன்றவை இருக்கும். இது உடல்நலனுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சளி, இருமல், காய்ச்சல் போன்றவை ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. இதனால் கழிப்பிடங்களுக்கு செல்லும்போதும் அதற்கென தனி காலணி வைத்திருந்தல் அவசியம். வீட்டை விட்டு வெளியே காலடி எடுத்து வைக்கும் பட்சத்தில் மழைக்காலங்களில் காலணி அணிய வேண்டும்.