Thalapathy Vijay's TVK Flag: "தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையின் வெற்றிக்கான கொடி" - தமிழக வெற்றிக் கழக கொடி விழாவில் விஜய் உரை..!
நடிகர் விஜய்யின் தமிழக வெற்றி கழகத்தின் கொடி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
ஆகஸ்ட் 22, சென்னை (Chennai News): நடிகர் விஜய் (Thalapathy Vijay) தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக திகழ்ந்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளியான லியோ படம் 600 கோடிக்கு மேல் வசூல் செய்து மிகப் பெரிய சாதனை படைத்தது. தொடர்ந்து தற்போது இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் யுவன் சங்கர் ராஜா இசையில் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ (The Greatest of All Time) படம் நடித்துள்ளார். இப்படமானது உலகம் முழுவதும் வருகிற செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக வெற்றிக் கழகம்: இதற்கிடையே நடிகர் விஜய் அரசியல் கட்சி தொடங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அவர் நீண்ட காலமாகவே அரசியலில் குதிப்பதற்கான பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தார். ஆரம்பத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட படங்களில் அதிகமாக நடித்தார். தொடர்ந்து பல சர்ச்சைகளிலும் சிக்கி வருகிறார். தொடர்ந்து, நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் (TVK) என்று கட்சி தொடங்கினார். மேலும் செப்டம்பர் இறுதி வாரத்தில் விழுப்புரம் அருகே விக்ரவாண்டியில் விஜய் தனது தமிழக வெற்றி கழகத்தின் முதல் அரசியல் மாநாட்டை நடத்துகிறார். PM Modi's Poland Speech: "இந்தியா இந்த உலகத்தில் அமைதியை ஆதரிக்கும் நாடு" - போலந்தில் பிரதமர் மோடி உரை..!
கட்சியின் கொடி: இதனையடுத்து விஜய் அரசியல் கட்சியின் அடுத்த கட்ட நகர்வு குறித்து பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்ட நிலையில், சென்னை பனையூரில் உள்ள தலைமை நிலையைச் செயலகத்தில் த.வெ.க தலைவர் விஜய் தனது த.வெ.க கொடியையும், பாடலையும் அறிமுகம் செய்து வைத்தார். இந்த கொடி சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கொடியில் இரண்டு பக்கம் யானை வைக்கப்பட்டு உள்ளது. நடுவில் வாகைப்பூ வைக்கப்பட்டு உள்ளது. இதன்மூலம் இந்த கொடி தமிழ், தமிழ் தேசியம் ஆகியவற்றை பிரதிபலிக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதை பார்க்க முடிகின்றது.
உறுதிமொழி ஏற்பு: தொடர்ந்து உறுதிமொழி ஏற்கப்பட்டது. தவெக தொண்டர்கள் ஏற்றுக் கொண்ட உறுதிமொழி பினவருமாறு: “நமது நாட்டின் விடுதலைக்காகவும், நமது மக்களின் உரிமைகளுக்காகவும் தமிழ் மண்ணில் இருந்து தீரத்துடன் போராடி உயிர் நீத்த எண்ணற்ற வீரர்களின் தியாகத்தை எப்போதும் போற்றுவேன். நமது அன்னைத் தமிழ் மொழியைக் காக்க உயிர்த்தியாகம் செய்த மொழிப்போர் தியாகிகளின் இலக்கை நிறைவேற்றும் வகையில் தொடர்ந்து பாடுபடுவேன். இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் மீதும், இறையாண்மை மீதும் நம்பிக்கை வைத்து, அனைவருடன் ஒற்றுமை, சகோதரத்துவம். மதநல்லிணக்கம், சமத்துவம் ஆகியவற்றைப் பேணிக்காக்கின்ற பொறுப்புள்ள தனிமனிதராகச் செயல்படுவேன்.
மக்களாட்சி, மதச்சார்பின்மை, சமூக நீதிப் பாதையில் பயணித்து, என்றும் மக்கள் நலச் சேவகராகக் கடமை ஆற்றுவேன் என உறுதி அளிக்கின்றேன். சாதி, மதம், பாலினம், பிறந்த இடம் ஆகியவற்றின் பெயரில் உள்ள வேற்றுமைகளைக் களைந்து, மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தி, அனைவருக்கும் சம வாய்ப்பு. சம உரிமை கிடைக்கப் பாடுபடுவேன். பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற சமத்துவக் கொள்கையை கடைப்பிடிப்பேன் என்று உளமார உறுதி கூறுகின்றேன்” இவ்வாறு அவர்கள் உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர். TVK Flag Anthem: "தமிழன் கொடி பறக்குது.." - தவெக கட்சி பாடல் வெளியீடு..!
தவெக விஜய் உரை: இந்தக் கொடி அறிமுகத்தைத் தொடர்ந்து அவர் ஆற்றிய உரையில், "இன்று நம் எல்லோருக்கும் மிகவும் சந்தோஷமான நாள். நான் என்னுடைய அரசியல் பயணத்தைத் தொடங்கி அதற்கு ஒரு தொடக்கப்புள்ளியாக பிப்ரவரி மாதம் கட்சியின் பெயரை அறிவித்தேன். அப்போதிலிருந்து நீங்கள் எல்லோரும் குறிப்பிட்ட நாளுக்காகக் காத்திருக்கிறீர்கள் எனத் தெரிகிறது. அதுதான் நம் முதல் மாநில மாநாடு. அந்த மாநாட்டுக்கான ஏற்பாடுகள் எல்லாம் சிறப்பாக நடந்து வருகிறது. விரைவில் அதற்கான நாள், நேரத்தை அறிவிப்பேன். அதற்கு முன்பாக நம் கட்சியின் கொடியை அறிமுகப்படுத்தியிருக்கிறேன். என் நெஞ்சில் குடியிருக்கும் தமிழ்நாட்டின் மக்கள் அனைவர் முன்பும் கொடியை அறிமுகப்படுத்தியதை பெருமையாக நினைக்கிறேன். இதுவரை நாம் நமக்காக உழைத்தோம். இனி கட்சிரீதியாக நம்மை பலப்படுத்திக்கொண்டு தமிழ்நாட்டுக்காகவும், தமிழ்நாட்டு மக்களின் உயர்வுக்காகவும் நாம் எல்லோரும் சேர்ந்து உழைப்போம்.
புயலுக்குப் பின் அமைதி, ஆர்ப்பரிப்பு, ஆராவாரம் என இந்தக் கொடிக்குப் பின்னால் ஒரு வரலாற்றுக் குறிப்பு இருக்கிறது. அது என்ன என்பதையும், நம் கட்சியின் கொள்கை, செயல் திட்டங்கள் என்ன என்பதை மாநாட்டில் சொல்வோம். அப்போது இந்தக் கொடிக்கான விளக்கத்தையும் கூறுவோம். அதுவரை 'கெத்தா' இந்தக் கொடியை ஏற்றிக் கொண்டாடுவோம். இதை ஒரு கட்சிக்கான கொடியாக மட்டும் பார்க்கவில்லை. தமிழ்நாட்டின் வருங்கால தலைமுறையின் வெற்றிக்கான கொடியாகவே பார்க்கிறேன். இந்தக் கொடியை உங்கள் உள்ளத்திலும், இல்லத்திலும் நான் சொல்லாமலே ஏற்றுவீர்கள் என்பது எனக்குத் தெரியும். எனவே, கொடி ஏற்றுவதற்கான சட்ட விதிமுறைகளை எல்லாம் சரியாகப் பின்பற்றி, அனைவரிடமும் தோழமை பாராட்டி இதை ஏற்றிக் கொண்டாடுவோம். நல்லதே நடக்கும். வெற்றி நிச்சயம்." என்றார்.