நவம்பர் 04, சென்னை (Chennai News): 2026 சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி வாகை சூடுவதாக அதிரடியாக அறிவிப்பு வெளியிட்டு தமிழக வெற்றிக் கழகத்தின் வாயிலாக தேர்தல் பரப்புரையில் தீவிரமாக ஈடுபட்டு வந்த தவெக தலைவர் விஜய் கரூரில் நடந்த துயர சம்பவத்துக்கு பின்னர் கடந்த ஒரு மாதங்களாக கட்சியின் செயல்பாடுகளை அமைதியாக நகர்த்தி வருகிறார். இந்நிலையில் நவம்பர் 5ஆம் தேதியான இன்று சென்னை மாமல்லபுரத்தில் தவெக கட்சியின் பொதுக்குழு கூட்டமானது நடைபெறுகிறது. இந்த சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் விஜய் தவெகவின் முதல் கூட்டணி தொடர்பான அறிவிப்பு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்பட்டது. மேலும் கரூர் துயரத்துக்கு பின்னர் பொதுக்குழுவில் விஜய் மனம் திறந்து பேசுவார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. K. A. Sengottaiyan: 53 ஆண்டுகால அரசியல் பயணம்.. எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆப்பு சீவிய கே.ஏ. செங்கோட்டையன்? பரபரப்பு பேட்டி..!
முதல்வர் வேட்பாளராக விஜய்:
இதனால் இந்த கூட்டமும் முக்கியத்துவம் பெற்றிருந்தது. அதன்படி 2026 சட்டமன்ற தேர்தலில் கூட்டணி உள்ளிட்ட அனைத்து முடிவுகளையும் எடுக்க விஜய்க்கு அதிகாரம் கொடுத்து 2026 தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராக விஜய்யை அறிவித்து பொதுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இன்று நடந்த பொதுக்குழுவில் பேசிய விஜய், "அமைதியாக இருந்ததால் வன்ம அரசியல் செய்யப்பட்டது. சட்டம், சத்தியத்தின் துணை கொண்டு அனைத்தையும் துடைத்தெறிவோம். தமிழக சட்டப்பேரவையில் தவெகவுக்கு எதிரான உரைக்கு கண்டனம் தெரிவிக்கிறேன். அரசியல் செய்ய விரும்பவில்லை என்று கூறும் முதல்வர் மு.க. ஸ்டாலின், வன்மத்தை கக்கி இருக்கிறார். இதனை தமிழக மக்கள் நன்கு உணருவார்கள். கரூர் உட்பட அனைத்து இடத்திலும் இறுதி வரை மக்கள் சந்திப்புக்காக இடங்கள் அரசு சார்பில் இழுத்தடிக்கப்பட்டன. எந்த ஒரு அரசியல் தலைவருக்கும் இல்லாத கட்டுப்பாடுகளை விதித்து இருந்தனர்.
கபட நாடக திமுக:
அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் நேர்மை திறனற்று நம் மீது குற்றசாட்டு சுமத்தி இருக்கிறார்கள். கபட நாடக திமுக அரசின் நாடகத்தை, அவர்கள் தரப்பு வழக்கறிஞர்கள் கூட தாக்குப்பிடிக்க முடியவில்லை. கரூர் நிகழ்வுக்கு பின் அவசரமாக தனிநபர் ஆணையம் அமைக்கப்பட்டது. காவல்துறை உயர் அதிகாரிகள், அரசு அதிகாரிகள் தவெகவுக்கு எதிராக செய்தியாளர்களை சந்திக்கிறார்கள். இதனை தமிழ்நாடு முதல்வர் மறந்துவிட்டாரா? முதல்வர் சொன்ன தகவல்கள் பொய் என்பதை உச்சநீதிமன்றம் சொல்லியுள்ளது. அரசு, காவல்துறை அதிகாரிகள் செய்தியாளர்களை சந்தித்து பேசியது சந்தேகத்தை ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக நீதிமன்றம் சுட்டிக்காட்டி இருக்கிறது. உச்சநீதிமன்றம் நறுக்கென கொட்டியதை முதல்வர் மறந்துவிட வேண்டாம். சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்ட SIT விசாரணைக்கு ஒத்துழைத்து வரவேற்று திமுகவினர் கொக்கரித்து கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த விஷயத்தை உச்சநீதிமன்றம் கண்டித்து, எந்த ஆவணத்தின் அடிப்படையில் SIT விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது என கேள்வி எழுப்பி இருக்கிறது.
தவெக Vs திமுக:
அதிகாரத்தில் இருக்கும் முதல்வர் மு.க. ஸ்டாலின் அரசியல் ஆட்டத்தை நிகழ்த்தி இருக்கிறார். இது அவர்களுக்கு புதிதில்லை. 1972ல் திமுக அவர்களின் கைக்கு வந்ததும், அன்றில் இருந்து இப்படித்தான் இருக்கிறது. தமிழ்நாடு அரசு நடத்திய விசாரணை மீது நம்பிக்கை இல்லை என உச்சநீதிமன்றமே சுட்டிக்காட்டி இருக்கிறது. மக்களுக்கும் திமுக அரசின் மீதான நம்பிக்கை மண்ணுடன் புதைந்துவிட்டது. முதல்வருக்கு புரியவில்லை என்றால் 2026 தேர்தலில் மக்கள் அழுத்தமாக புரிய வைப்பார்கள். அப்போதுகூட 5 ஆண்டுக்கு ஒருமுறை மக்கள் தீர்ப்புக்கு தலைவணங்குகிறோம் என்ற அறிக்கை வெளியிட்டு அறிவாலயத்தில் ஓடி ஒளிந்துகொள்வார்கள். இப்போதே அந்த அறிக்கையை தயார் செய்துகொள்ளுங்கள். இயற்கையும், இறைவனும் மக்கள் சக்தியாக நம்முடன் இருப்பார்கள். இந்த இடையூறு தற்காலிகமானது தான், மக்களுடன் களத்தில் நிற்போம். நமது பயணத்தில் மாற்றமே இல்லை. 2026ல் இரண்டு பேருக்கு இடையேதான் போட்டி. ஒன்று தவெக, மற்றொன்று திமுக. இந்த போட்டி ஆழமாகிவிட்டது, வெற்றி நிச்சயம்" என தெரிவித்தார்.