நவம்பர் 26, சென்னை (Chennai News): அதிமுகவில் மூத்த தலைவராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த கே.ஏ. செங்கோட்டையன் (KA Sengottaiyan) சமீபத்தில் அதிமுக கட்சியில் இருந்து நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை, மீண்டும் கட்சியில் இணைத்து பயணிக்க வேண்டும் என அவர் கடந்த பல மாதங்களாக கோரிக்கை வைத்து வந்தார். கடந்த மாதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு (Edappadi Palanisamy) நேரடியாக தனது கோரிக்கையை பொதுவெளியில் தெரிவித்து இருந்தார். இதனால் அவரின் கட்சி பதவிகள் முதற்கட்டமாக பறிக்கப்பட்டு இருந்தன. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் மூத்த அரசியல்வாதி மீதான நடவடிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. Gold Rate Today: கணிசமாக உயரும் தங்கம் & வெள்ளி விலை.. இன்றைய விலை நிலவரம் என்ன?
எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த கே.ஏ.செங்கோட்டையன்:
அதனைத்தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜைக்கு செங்கோட்டையன் டிடிவி தினகரனுடன் ஒரே காரில் பயணம் செய்தார். சசிகலா, ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் சந்திப்பு நடத்தி இருந்தார். இதனால் அதிமுகவில் இருந்து நிரந்தரமாக செங்கோட்டையனை நீக்கி அதிமுக தலைமை தரப்பில் உத்தரவிடப்பட்டது. இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துள்ளார். சென்னை தலைமைச் செயலகத்தில் சபாநாயகர் அப்பாவுவை நேரில் சந்தித்து பதவி ராஜினாமா கடிதத்தில் கையெழுத்திட்டு அதனை உடனடியாக அவரிடம் ஒப்படைத்து இருக்கிறார்.
தவெகவில் இணைய வாய்ப்பு:
தொடர்ந்து அவர் விஜயின் தமிழக வெற்றி கழகத்தில் நாளை இணைந்து கட்சி பணியாற்றலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. கொங்கு மண்டலத்தில் மிகப்பெரிய தலைவராக அறியப்படும் கே.ஏ.செங்கோட்டையன் தனது கட்சி பதவியை ராஜினாமா செய்து தொடர்ந்து தவெகவில் இணைவது அதிமுகவுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தும் என அரசியல் நிபுணர்களால் கூறப்படுகிறது. தமிழக அரசியல் நகர்வுகளில் செங்கோட்டையனின் முடிவு மிகப்பெரிய பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.