Udhayanidhi Stalin: துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின்?; உற்சாகத்தில் திமுக தொண்டர்கள்.. அமைதிகாக்கும் உதயநிதி.. பேட்டி.!
திமுக தமிழ்நாட்டில் ஆட்சிப்பொறுப்பேற்று 3 ஆண்டுகள் கடந்தபின், அமைச்சராக இருந்த உதயநிதிக்கு துணை முதல்வர் அங்கீகாரம் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
செப்டம்பர் 18, தேனாம்பேட்டை (Chennai News): 2021 சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிட்டு, மிகப்பெரிய வெற்றியை அடைந்த திமுக (DMK) தலைமையிலான கூட்டணி, தனது ஆட்சியை மீண்டும் தமிழ்நாட்டில் நிறுவியது. மறைந்த முன்னாள் முதல்வர் கலைஞரின் (M Karunanidhi) மறைவுக்குப்பின், திமுகவின் தலைமைபொறுப்பேற்ற மு.க ஸ்டாலின் (MK Stalin), 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றியடைந்து தமிழ்நாட்டின் முதல்வராகவும் பொறுப்பேற்றார். திமுக ஆட்சிப்பொறுப்பேற்று 3 ஆண்டுகள் கடந்துவிட்டபோதிலும், துணை முதல்வர் (Deputy CM) பொறுப்பு என்பது யாருக்கும் வழங்கப்படவில்லை.
எம்.எல்.ஏ முதல் அமைச்சர்:
சட்டப்பேரவை தேர்தலில் திருவெல்லிக்கேணி தொகுதியில் களம்கண்ட மு.க ஸ்டாலினின் மகன் உதயநிதி ஸ்டாலின் (Udhayanidhi Stalin), முதலில் எம்.எல்.ஏவாக களப்பணிகளை மேற்கொண்டு வந்த நிலையில், பின்னாளில் விளையாட்டுத்துறை அவர்வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது அவர் தனது துறையை திறம்பட நிர்வகித்து வரும் நிலையில், கட்சியின் பொறுப்பையும் கவனித்து வருகிறார். இதனிடையே, உதயநிதி ஸ்டாலினை துணை முதல்வராக்க வேண்டும் என்ற கோரிக்கை திமுக வட்டாரங்களில் உண்டாகியது.
துணை முதல்வராக்க வேண்டுகோள்:
கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக துணை முதல்வர் உதயநிதி என்ற விவாதம் இருந்து வரும் நிலையில், சமீபகாலமாக அது மேலும் அதிகரித்தது. மேலும், தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அமெரிக்காவுக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்ட நிலையில், சில அமைச்சர்கள் விரைவில் துணை முதல்வராக உதயநிதி பொறுப்பேற்பார் என தெரிவித்து இருந்தனர். அமெரிக்காவில் அரசுமுறை பயணத்தை முடித்துக்கொண்டு தமிழ்நாடு திரும்பிய முதல்வர், விரைவில் மாற்றம் என்ற சூசகமாக பதிலை தெரிவித்து இருந்தார். அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகனும், இளையோருக்கு வழிவிட்டு செயல்பட தலைமை முடிவெடுத்து, அதற்கான வாய்ப்புகளை வழங்கி வருவதாக தெரிவித்து இருந்தார். MK Stalin: ராகுல் காந்தியின் உயிருக்கு அச்சுறுத்தல்; "பாதுகாப்பை பலப்படுத்துக" தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் மத்திய அரசுக்கு கோரிக்கை.!
சென்னையில் முகாமிட்ட அமைச்சர்கள்:
நேற்று திமுகவின் பவள விழாவில் பேசிய திமுக மூத்த தலைவர்கள், அமைச்சர்கள் என பலரும் உதயநிதியை துணை முதல்வராக மாற்ற வேண்டும் எனவும் தங்களின் கோரிக்கையை முன்வைத்தனர். இந்த நிகழ்ச்சிக்கு கலந்துகொள்ள அமைச்சர்கள் பலரும் சென்னை வந்திருந்த நிலையில், அவர்களை சென்னையிலேயே தங்கி இருக்க அறிவுறுத்தப்பட்டு இருந்தது.
துணை முதல்வர் உதயநிதி?
இந்நிலையில், துணை முதல்வர் தொடர்பான அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் அதிகாரபூர்வமாக வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது . திமுக தலைமையிலான தமிழக அரசில் துணை முதல்வராக அமைச்சர் உதயநிதி பொறுப்பேற்பது ஏறக்குறைய உறுதி செய்யப்பட்டுள்ளது என களநிலவரங்கள் தெரிவிக்கின்றன. திமுக தலைவர் மு.க ஸ்டாலினும் முந்தைய காலங்களில் துணை முதல்வராக பொறுப்பு வகித்து, பின் கலைஞரின் மறைவுக்கு பின்னர் ஆட்சி, கட்சி இரண்டையும் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. திமுக மூத்த நிர்வாகிகள், அமைச்சர்கள் அண்ணா அறிவாலயத்தில் ஆலோசனை நடத்திய நிலையில், உதயநிதியின் துணை முதல்வர் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது .
உதயநிதி பற்று சுருக்கமாக:
மு.க ஸ்டாலினின் மகனாக இருந்தாலும் ஆரம்ப காலங்களில் கட்சியின் செயல்பாடுகளில் நேரடியாகவும், மறைமுகமாகவும் எந்த விதமான தொடர்பையும் வைத்துக்கொள்ளாத உதயநிதி, தமிழ் திரையுலகில் தயாரிப்பாளராக வலம்வந்தார். தொடர்ந்து ஒரு கல் ஒரு கண்ணாடி திரைப்படத்தில் நடித்து திரைத்துறையில் அறிமுகமானவர், அடுத்தடுத்து பல படங்களில் நடித்து இருந்தார். இந்த படங்களின் வாயிலாக தமிழக மக்களிடையே பரிட்சயமான உதயநிதி, இறுதியாக மாரி செல்வராஜுடன் இணைந்து மாமன்னன் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் மிகப்பெரிய அளவில் வெற்றி அடைந்தது.
உதயநிதி ஸ்டாலின் பேட்டி:
துணை முதல்வர் பொறுப்பு மற்றும் அரசியல்மட்ட விவாதங்கள், செய்திகள் குறித்து அமைச்சர் உதயநிதியிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அப்போது பேசிய உதயநிதி ஸ்டாலின், "தமிழ்நாட்டை பொறுத்தமட்டில் பெரியாரை பேசாமல் அரசியல் என்பது செய்ய இயலாது. நண்பர் விஜய்க்கு எனது வாழ்த்துக்கள். துணை முதல்வர் பொறுப்பு தொடர்பாக முதல்வரே முடிவு எடுப்பார். இதில் நாம் தலையிட வேண்டாம். அனைத்து அமைச்சர்களும் முதல்வருக்கு உறுதுணையாக இருப்போம்" என பேசினார்.
வரும் 24 மணிநேரத்திற்குள் எப்போது வேண்டுமானாலும் இதுகுறித்த அறிவிப்பு வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.