நவம்பர் 05, கோயம்புத்தூர் (Coimbatore News): அதிமுகவில் மூத்த தலைவராகவும், முன்னாள் அமைச்சராகவும் இருந்த கே.ஏ. செங்கோட்டையன் (KA Sengottaiyan) கட்சியில் இருந்து அதிரடியாக நீக்கப்பட்டார். அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்களை, மீண்டும் கட்சியில் இணைத்து பயணிக்க வேண்டும் என அவர் கடந்த பல மாதங்களாக கோரிக்கை வைத்து வந்தார். கடந்த மாதத்தில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமிக்கு (Edappadi Palanisamy) நேரடியாக தனது கோரிக்கையை பொதுவெளியில் தெரிவித்து இருந்தார். இதனால் அவரின் கட்சி பதவிகள் முதற்கட்டமாக பறிக்கப்பட்டு இருந்தன. எம்.ஜி.ஆர். காலத்தில் இருந்து மாவட்ட செயலாளர் பொறுப்பில் இருக்கும் மூத்த அரசியல்வாதி மீதான நடவடிக்கை தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அதனைத்தொடர்ந்து, இராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் குருபூஜைக்கு செங்கோட்டையன் டிடிவி தினகரனுடன் ஒரே காரில் பயணம் செய்தார். சசிகலா, ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோருடன் சந்திப்பு நடத்தி இருந்தார். இதனால் அதிமுகவில் இருந்து நிரந்தரமாக செங்கோட்டையனை நீக்கி உத்தரவிடப்பட்டது. செங்கோட்டையன் அடுத்தகட்டமாக என்ன செய்யப்போகிறார் என்பது மிகப்பெரிய கேள்வியை எழுப்பி இருக்கிறது. அதிமுகவை மீட்க ஓ. பன்னீர் செல்வம், டிடிவி தினகரன், சசிகலா ஆகியோருடன் இணைந்து பயணிக்க வாய்ப்புகள் அதிகம் இருப்பதாக கூறப்படுகிறது. நாளைய வானிலை: 7 மாவட்டங்களில் விட்டு விளாசப்போகும் கனமழை.. அடுத்த 3 நாட்களுக்கான வானிலை நிலவரம்.!
கோவை விமான நிலையத்தில் கே.ஏ. செங்கோட்டையன் செய்தியாளர்கள் சந்திப்பு:
இந்நிலையில், கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், "அதிமுகவில் எப்போதும் நல்லதே நடக்கும். கட்சியில் இருப்பவர்களிடம் இதுகுறித்து பேசி வருகிறேன். தேர்தல் ஆணையத்திடம் 250 பக்க கடிதம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. கட்சியின் விதிகள் உள்ளது. குடும்ப அரசியல் குறித்து நான் சொல்ல தேவையில்லை. 53 ஆண்டுகாலம் அரசியலில் நான் இருக்கிறேன். என்னை யாராலும் இயக்க முடியாது. என்னை நீக்கியது குறித்து எடப்பாடி பழனிசாமியிடம் தான் கேட்க வேண்டும். மனோஜ் பாண்டியன் திமுகவில் இணைந்தது அவரின் விருப்பம். அடுத்தகட்ட நகர்வுகள் எப்போதும் நல்லதை கொண்டுவரும். எடப்பாடி பழனிச்சாமியின் குடும்பத்தினரின் தலையீடு மூத்த நிர்வாகிகளுக்கு நெருக்கடியை தருகிறது. குடும்பத்தின் தலையீடு இதில் தேவையில்லை. தற்போது எடுத்துள்ள நடவடிக்கை, இனி எடுக்கப்போகும் செயலும் நல்ல முடிவை தரும்" என பேசினார்.