Medical Waste Disposal: காலை பதம் பார்க்கும் மருத்துவ கழிவுகள்.. குமுறும் விருதுநகர் மக்கள்..!
விருதுநகர் மாவட்டம் பட்டம் புதூர் கிராமத்தில் உள்ள ஆற்றில் மர்ம நபர்கள் மருத்துவ கழிவுகளை கொட்டி எரிப்பதாகவும், ஆற்றில் கால் வைத்தாலே ஊசி போன்ற மருத்துவ கழிவுகள் காலை பதம் பார்த்து விடுவதாக அப்பகுதி மக்கள் புகார் தெரிவித்து வருகின்றனர்.
மே 30, விருதுநகர் (Virudhunagar News): விருதுநகர் மாவட்டத்தில் பாயும் கௌசிகா மகாநதி வடமலைகுறிச்சி கண்மாய்களுக்கு வைப்பாற்றின் உபரிநீராய் வந்து பின் அங்கிருந்து விருதுநகர் மற்றும் குல்லூர் சந்தை, பட்டம் புதூர் வழியாக பாய்ந்து இருக்கன்குடி அணையை சென்றடைகிறது. பிற ஆறுகளை போல் மலைகளில் இருந்து உருவாகமல் இருந்தாலுல் 20 ஆண்டுகளுக்கு முன் விருதுநகர் சுற்று வட்டார பகுதிகளுக்கு முக்கிய நீர் ஆதாரமாக இந்த நதி விளங்கியது. ஆனால் தற்போது கழிவு நீர் கலந்து, ஆக்கிரமிப்பாலும் ஆறு சுருங்கி போயுள்ளதாக சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் இந்த ஆற்றின் பல பகுதிகளில் மணல் திருட்டும் அமோகமாக நடப்பதாக கூறப்படுகிறது.
இந்த கௌசிகா ஆறு கடந்த சில மாதங்களுக்கு முன் பொதுப்பணிதுறையால் தூர்வாரப்பட்ட, அழகாக காட்சியளித்தது. ஆனால் தற்போது பட்டம் புதூர் ஆற்று பகுதியில் மருத்துவ கழிவுகளை கொட்டி எரிப்பதாகவும், மருத்துவ கழிவுகளை ஆற்றில் வீசி செல்வதாக புகார் எழுந்தது. மேலும் ஆற்றில் கால் வைத்தாலே ஊசி, போன்ற மருத்துவ கழிவுகள் காலை பதம் பார்த்து விடுவதாக குமுறுகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மருத்துவ கழிவுகளை கொட்டும் மர்ம நபர்களை கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். Valli Gummi Attam: வள்ளி கும்மி ஒயிலாட்டம்.. திருச்செங்கோட்டில் 47வது முறையாக அரங்கேற்றம்..!
மேலும் பட்டம் புதூர், ஆவுடையாபுரம் சுற்று வட்டார பகுதிகளில் வெற்றிலை விளைச்சல் அமோகமாக இருந்ததாகவும் தற்போது மழை இல்லாததாலும், வறட்சி காரணமாகவும் சிலர் விவசாயத்தை கைவிட்டு கூலி வேலைக்கு செல்கின்றனர். இந்நிலையில் பட்டம் புதூரை ஒட்டிய ஆற்று பகுதியில் தடுப்பணை கட்டினால் சுற்று வட்டார விவசாய பகுதிகளான குப்பம் பட்டி, ராமசாமி புரம் ஆகிய பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் என அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.