Annamalai on Kallakurichi Illicit Liquor Death Case: ஜூன் 22ல் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம்; தேதி குறித்த அண்ணாமலை.. கள்ளச்சாராய விவகாரத்தால் கொந்தளிப்பு.!

அரசின் மெத்தனப்போக்கை கண்டித்து ஜூன் 22ல் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு மாநில அளவில் நடத்தப்படும் என தமிழ்நாடு பாஜக அறிவித்துள்ளது.

Kallakurichi GH | TN BJP President Annamalai (Photo Credit: @ANI X / @Annamalai_K X)

ஜூன் 20, கள்ளக்குறிச்சி (Kallakurichi News): கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள கல்வராயன் (Kalvarayan Hills) மலைப்பகுதிகளில் சட்டவிரோதமாக காய்ச்சி விற்பனை செய்யப்படும் கள்ளச்சாராயத்தை (Kallacharayam), கள்ளக்குறிச்சி நகர் கருணாபுரம் பகுதியை சேர்ந்த 100 க்கும் மேற்பட்டோர் குடித்து, நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் அடுத்தடுத்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதி செய்தனர். இவர்களில் தற்போது வரை 36 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். 80 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இந்த விவகாரம் குறித்து தற்போது சிபிசிஐடி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

10 பேர் கைது, 900 லிட்டர் விஷச்சாராயம் பறிமுதல்:

விசாரணைக்கு பின்னர் சாராய வியாபாரி கோவிந்தராஜ், மனைவி ரேவதி, தாய் ஜோதி, சகோதரர் தாமோதர் உட்பட 10 பேரை அதிகாரிகள் கைது செய்தனர். இவர்களின் மீது 4 சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. முக்கிய குற்றவாளி சின்னத்துரை என்பவருக்கு அதிகாரிகள் வலைவீசி இருக்கின்றனர். இவர்களிடம் இருந்து 900 லிட்டர் மெத்தனால் விஷ சாராயம் கைப்பற்றப்பட்டுள்ளது. 70 க்கும் மேற்பட்ட வழக்குகள் கொண்ட சின்னத்துரை, குண்டரில் கைதாகி வெளியே வந்த பின்னர் சாராய விற்பனையில் களமிறங்கி பெரும் சோகத்திற்கு வழிவகை செய்துள்ளார்.

தமிழ்நாடு மாநில பாஜக தலைவர் அண்ணாமலையின் கடும் கண்டனம்:

"கள்ளக்குறிச்சியில், கள்ளச்சாராயத்தினால் 35க்கும் அதிகமான உயிர்கள் பறிபோயிருக்கின்றன என்ற செய்தி மிகுந்த அதிர்ச்சியும் வேதனையும் அளிக்கிறது. கள்ளக்குறிச்சிக்கு நேரில் சென்று, உயிரிழந்தவர்கள் குடும்பத்தினரையும், மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவர்களையும் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க உள்ளோம். அவர்கள் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு பாஜக எப்போதும் உறுதுணையாக இருக்கும்.

ஜூன் 22 அன்று மாநில அளவில் போராட்டம்:

திமுக ஆட்சியில் கடந்த இரண்டு ஆண்டுகளில் நடைபெற்றுள்ள கள்ளச்சாராய உயிரிழப்புகள், 1980 காலகட்டத்தில் ஏற்பட்டதைப் போல, தமிழகம் நாற்பது ஆண்டுகள் பின்னோக்கிச் செல்கிறதா என்ற அச்சத்தை ஏற்படுத்துகிறது. நேற்றைய தினம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை அமைச்சரை பதவி விலக்கம் செய்ய, முதலமைச்சர் திரு மு.க ஸ்டாலின் அவர்களைக் கேட்டுக் கொண்டிருந்தோம். ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளில் சுமார் 60 உயிர்கள் கள்ளச்சாராயத்தினால் பறிபோனதற்குப் பின்னரும், முதலமைச்சராகத் தொடர தனக்குத் தார்மீக உரிமை உள்ளதா என்பதை, அவர் எண்ணிப் பார்க்க வேண்டும்.

தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய விற்பனையைத் தடுக்காமல், பல உயிர்கள் பலியாகும் வண்ணம், தொடர்ந்து மெத்தனப் போக்கில் செயல்பட்டு வரும் திமுக அரசின் கையாலாகாத்தனத்தைக் கண்டித்து, வரும் ஜூன் 22 அன்று, பாஜக சார்பாக, மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது என்பதை அறிவித்துக் கொள்கிறேன்" என தெரிவித்துள்ளார்.