Trichy Sharjah Flight: நடுவானில் பயணிகளுக்கு கிலி காண்பித்த விமான பயணம்; திருச்சியில் புறப்பட்ட விமானம் தப்பியது எப்படி?.. விபரம் உள்ளே.!
விமானம் டேக் ஆப் ஆகியும், விமானத்தின் லேண்டிங் கியர் சக்கரங்களை உள்ளே இழுக்காத காரணத்தால், தொழில்நுட்ப கோளாறு காரணமாக திருச்சியிலேயே விமானம் மீண்டும் தரையிறங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.
அக்டோபர் 12, திருச்சி (Trichy News): திருச்சி விமான நிலையத்தில் இருந்து உள்நாடு மற்றும் வெளிநாடு பயணிகள் விமான போக்குவரத்து சேவை இயக்கப்பட்டு வருகிறது. நேற்று மாலை சுமார் 05:44 மணிக்கு, திருச்சியில் இருந்து ஷார்ஜா செல்லும் விமானம் ஒன்று சுமார் 144 பயணிகள் மற்றும் விமான பணிக்குழுவுடன் புறப்பட்டது. விமானம் மேலெழும்பிய பின்னர், விமானிகள் விமானத்தின் சக்கரத்தை விமானத்திற்குள் இழுக்க முற்பட்டுள்ளனர். அப்போது ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக, விமானத்தின் சக்கரங்கள் பாதுகாப்பு அமைப்புக்குள் வரவில்லை.
ஹைட்ராலிக் கியர் பெயிலியர்:
இதனால் விமானத்தில் இருந்து விமான கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தொடர்ந்து மீண்டும் விமானம் திருச்சி விமான நிலையத்திலேயே அவசர கதியில் தரையிறக்க அனுமதி வழங்கப்பட்டது. குறிப்பிட்ட நேரத்தில் திருச்சி விமான நிலையத்திற்கு வரவிருந்த மற்றும் மேலெழும்பி செல்லவிருந்த அனைத்து விமானங்களும் தாமதமாக செல்லும் அறிவிக்கப்பட்டன. சில விமானங்கள் வேறு விமான நிலையத்தில் தரையிறங்க அனுப்பி வைக்கப்பட்டன. விமானத்தில் எரிபொருளை குறைத்து திருச்சியிலேயே தரையிறங்க முடிவெடுத்த விமானிகள், திருச்சி விமான நிலையத்தில் இருந்து வான்வழியில் புதுக்கோட்டை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சுற்றிவந்தனர்.
தயார் நிலையில் அதிகாரிகள்:
முதலில் விமானம் சாதாரணமாக வந்து செல்வதாக எண்ணிய பொதுமக்கள், அடுத்தடுத்து விமானம் அங்கேயே சுற்றி வந்ததால் பரபரப்புக்குள்ளாகினர். மேலும், விமான பயணிகளும் பெரும் பீதி அடைந்தனர். தொடர்ந்து 2 மணிநேரம் விமானம் வானிலேயே சுற்றியது. ஒருவேளை விமானம் தரையிறங்கும்போது விபத்தில் சிக்கினால் விரைந்து அவசர சேவை வழங்க 18 க்கும் மேற்பட்ட அவசர ஊர்திகள், தீயணைப்பு படை அதிகாரிகள் மீட்பு படை அதிகாரிகள் என அனைவரும் திருச்சி விமான நிலையத்திற்கு வரவழைக்கப்பட்டனர். Tiruvallur Train Accident: சரக்கு இரயில் மீது பயணிகள் இரயில் மோதி பயங்கர விபத்து; 19 பேர் காயம்.. தமிழ்நாடே அதிர்ச்சியான சம்பவம்.!
திட்டமிட்டபடி தரையிறக்கம்:
விமான நிலையத்தில் பாதுகாப்பை வழங்கி வரும் மத்திய தொழிற்படை மற்றும் இராணுவ அதிகாரிகளும், பாதுகாப்பை தங்களின் முழு கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர். தொடர்ந்து 08:15 மணியளவில் 25 முறை வானை 4000+ அடியில் வட்டமிட்டுக்கொண்டு இருந்த விமானம், விமானிகளால் 08:10 மணியளவில் திருச்சியை நோக்கி கொண்டு வரப்பட்டு, 08:15 மணியளவில் சரியாக தரையிறக்கப்பட்டது. விமானம் தரையிறங்கும்போது, விமானத்தின் சக்கரம் சரியான நிலையிலேயே இருந்ததால், எவ்வித பிரச்சனையும் இன்றி வழக்கமான முறையிலேயே தரையிறங்கியது.
விமானிகளுக்கு குவியும் பாராட்டு:
இதனால் பயணிகள் நிம்மதியடைந்தனர். இந்த தீர செயலை துணிகரமாக மேற்கொண்ட விமானிகளுக்கு பாராட்டுகளும் குவிந்தது. இவர்களில் ஒருவர் பெண் விமானி என்பது குறிப்பிடத்தக்கது. இந்தோனேஷியாவை சேர்ந்த இக்ரோம் ரிபாதலி, இந்தியாவை சேர்ந்த பெண் துணை விமானி மைத்ரி இருவரும் சூழ்நிலையை திறம்பட கையாண்டு 144 பயணிகளின் உயிரை காப்பாற்றி இருக்கின்றனர். விமானத்தின் எரிபொருளை குறைத்தால், விமானத்தின் எடை குறைந்து எளிமையான தரையிறக்கத்திற்கு வழிவகை செய்யும் என்பதால், விமானம் எரிபொருளை தீர்த்து தரையிறங்கியது. நல்வாய்ப்பாக எந்த விதமான சிறு அசம்பாவிதமும் ஏற்படவில்லை.
துறை ரீதியான விசாரணை:
தொடர்ந்து விமானத்தில் இருந்த 144 பயணிகளில் 108 பேர் மாற்று விமானம் ஏற்பாடு செய்தபின்னர், இன்று காலை ஷார்ஜா புறப்பட்டு சென்றனர். எஞ்சியோர் தங்களுக்கு ஏற்பட்ட மரண பயணத்தில் இருந்து மீள இயலாமல், மாற்று தேதிகளில் ஷார்ஜா செல்வதாக தெரிவித்தனர். விமானம் நடுவானில் வட்டமடிக்கும் தகவல் அறிந்த விமான பயணிகளின் உறவினர்கள், அவர்களை வழியனுப்பிய கையோடு, உச்சகட்ட பயத்தில் விமான நிலையம் நோக்கி விரைந்தனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு குறித்து துறை ரீதியான விசாரணை நடந்து வருகிறது.
நிபுணர்கள் அறிவுரை:
விமான பயணங்களில் லேண்டிங் கியரில் பிரச்சனை என்பது மிகவும் கவனிக்கத்தக்க விஷயங்களில் ஒன்றாகும். அமெரிக்கா போன்ற நாடுகளில் லேண்டிங் கியர் விமானம் மேலே எழுப்பியதும் சில நேரங்களில் கீழே விழுந்த சம்பவமும், சக்கரங்கள் பெயர்ந்து பின் விமானம் மேலெழுப்பிய நிகழ்வும் அதிகம் நடந்துள்ளன. இவ்வாறான செயல்கள் விசாரணைக்கு உட்படுத்தப்படும் ஒன்று எனினும், நிலைமையை புரிந்துகொண்ட சுதாரிப்புடன் செயல்பட்டால் மட்டுமே இங்கு விபத்து இல்லாத தரையிறக்கம் என்பது நிகழும். மாறாக வேறு ஏதேனும் நடந்தால், கொத்துக்கொத்தாக மனித சடலங்களை மட்டும் மீட்கும் அபாயகரமான சூழலும் உண்டாகும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குவிக்கப்பட்ட அவசர ஊர்திகள்:
ஏர் இந்திய விமானம் புதுக்கோட்டை, திருச்சி பகுதிகளில் வானில் வட்டமடித்தபாதை: