PM Modi Wish ISRO Team: விண்வெளி ஆராய்ச்சியில் புதிய அத்தியாயம் - இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பிரதமர் மோடி பாராட்டு.!
நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு சந்திராயன் 3 ஒரு சான்று, அவர்களின் பரிசுத்த ஆன்மா மற்றும் புத்தி கூர்மைக்கும் தலை வணங்குகிறேன் என பிரதமர் பாராட்டினார்.
.
ஜூலை 14, ஸ்ரீஹரிகோட்டா (Sriharikota): நிலவு தொடர்பான ஆராய்ச்சிக்காக, இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (ISRO) சார்பில் சந்திராயன் 3 (Chandrayaan 3) செயற்கைகோள் இன்று மதியம் 02:35 மணியளவில் விண்ணில் ஏவப்பட்டு, புவியின் சுற்றுவட்டப்பாதையில் நிறுத்தப்பட்டுள்ளது.
இன்று பூமியில் இருந்து ஏவப்பட்டுள்ள சந்திராயன் 3 செயற்கைகோள், 3 இலட்சம் கி.மீ பயணம் செய்து ஆகஸ்ட் 23ம் தேதி நிலவில் தரையிறங்கும். நிலவில் தரையிறங்கியதும் சந்திராயன் 14 நாட்கள் தனது ஆராய்ச்சி பணிகளை மேற்கொள்ளும். பிற 14 நாட்கள் ஓய்வில் இருக்கும்.
நிலவில் ஒரு நாள் என்பது உலகில் 14 நாட்களுக்கு சமம் ஆகும். நிலவு தொடர்பான ஆராய்ச்சியில் அமெரிக்கா, சீனா, ரஷியா வரிசையில் தற்போது இந்தியாவும் ஈடுபட்டு, அதற்கான முயற்சியில் வெற்றியை பெற்றுள்ளது.
இஸ்ரோவின் செயல்பாடுகளை பாராட்டியுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, தனது ட்விட்டர் பக்கத்தில் "சந்திரயான்-3 இந்தியாவின் விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு புதிய அத்தியாயத்தை எழுதுகிறது.
ஒவ்வொரு இந்தியனின் கனவுகளையும் லட்சியங்களையும் உயர்த்தி, உயரமாக பறக்கிறது. இந்த முக்கியமான சாதனை நமது விஞ்ஞானிகளின் அயராத அர்ப்பணிப்புக்கு ஒரு சான்றாகும். தங்களின் நல்ல உள்ளத்திற்கும், புத்தி கூர்மைக்கும் தலை வணங்குகிறேன்" என தெரிவித்துள்ளார்.