How Accurate Are Exit Polls: 2024 தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு.. செல்லாக்காசாய் போனது ஏன்?.!
இந்திய தேர்தல் வரலாற்றில் பலமுறை கருத்துக் கணிப்புகள் மாறி இருந்திருக்கிறது.
ஜூன் 04, புதுடெல்லி (New Delhi): அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தியாவை ஆளப் போவது யார் என்பதை தெரிந்துகொள்ள மக்கள் அனைவரும் ஆவலோடு காத்திருக்கும் நிலையில், 2024 இந்தியா தேர்தல்கள் முடிவுகள் இன்று வெளியாகிறது. 14 சுற்றுகளாக எண்ணப்பட்டு தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும். மொத்தம் 64.20 கோடி பேர் வாக்குரிமையை செலுத்தி உள்ளனர். 8,000-க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் மக்களின் முடிவை எதிர்நோக்கி தங்களின் வாக்குகளை அறிந்து வெற்றி/தோல்வியை சந்தித்து வருகின்றனர்.
மொத்தம் 543 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. ஆட்சியைப் பிடிக்க 272 பெரும்பான்மை போதுமானது. இந்தப் பெரும்பான்மையை பாஜக கூட்டணி பெறும் என்றே கருத்துக் கணிப்புகள் கூறின. தேசிய ஜனநாயகக் கூட்டணி 350 இடங்களுக்கு மேல் வெற்றி பெறக்கூடும் என்றும், எதிர்க்கட்சியான இந்திய கூட்டணி 125 முதல் 150 இடங்கள் வரை பெறலாம் என்றும் பல கணிப்புகள் தெரிவித்தன.
ஆனால் இந்திய தேர்தல் ஆணைய இணையதளத்தின் தகவலின் படி, பாஜக கூட்டணி 296 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது, எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணி 194 இடங்களில் முன்னிலையில் உள்ளது. தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளுக்கு மாறாக முடிவுகள் வெளிவருவது தான் தற்போது அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தேர்தல் பிந்தைய கருத்துக் கணிப்பு: வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை `Exit poll’ என்று குறிப்பிடுவது வழக்கம். Exit என்றால் `வெளியேறுதல்’ என்று பொருள். அந்த வார்த்தையே அந்த கருத்துக்கணிப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது என்பதை கூறிவிடுகிறது. ஒரு வாக்காளர் தேர்தலில் வாக்களித்துவிட்டு வாக்குப்பதிவு மையத்தில் இருந்து வெளியே வரும்போது, அவர்களிடம் எந்தக் கட்சி அல்லது எந்த வேட்பாளருக்கு வாக்களித்துள்ளார் என்பதை கேட்பார்கள். அவர்கள் சொல்ல விரும்பும் பட்சத்தில் அவரின் கருத்து பதிவு செய்யப்படும். இதனை தான் கருத்துக்கணிப்பு என்று அழைக்கிறோம். Stock Market Top Losers: வாக்கு எண்ணிக்கை எதிரொலி.. இந்திய பங்குச்சந்தை எதிர்பாராத வகையில் சரிவு..!
வரலாறு: 1957 இல் இந்தியாவில் இரண்டாவது பொதுத் தேர்தலின் போது, `இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் பப்ளிக் ஒபினியன்’ தனது முதல் தேர்தல் கருத்துக்கணிப்பை நடத்தியது. ஆனால் அதை முழுமையாக `எக்ஸிட் போல்’ என்று கூற முடியாது. அதன்பிறகு, 1980ல், டாக்டர் பிரணாய் ராய் கருத்துக் கணிப்பு நடத்தினார். அவர் 1984 தேர்தலிலும் நடத்தினார். பின்னர் 1996 இல் தூர்தர்ஷன் கருத்துக்கணிப்பை நடத்தியது. இதனையடுத்து ஒவ்வொரு தேர்தலின் போதும் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளும் போக்கு தொடர்ந்தது.
தவறாக முடிந்த கருத்துக்கணிப்புகள்: 2004 மக்களவைத் தேர்தலில் ஆட்சியில் இருந்த வாஜ்பாய் தலைமையிலான பாஜக அரசு மீண்டும் வெற்றி பெறும் எனக் கணிக்கப்பட்டது. ஆனால், தேர்தலில் காங்கிரஸ் பெரும்பான்மை பெற்று வெற்றியடைந்தது. 2014-ம் ஆண்டு நடந்த மக்களவைத் தேர்தலில் ’240-280’ இடங்களில் வெற்றி பெற்று தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி அமைக்கும் எனக் கணிக்கப்பட்டது. அதேபோல், ’282’ இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது.
2019 மக்களவைத் தேர்தலின் போது பெரும்பாலான கருத்துக் கணிப்புகளில், பாஜக மற்றும் தேசிய ஜனநாயகக் கூட்டணி 300 தொகுதிகளுக்கு மேல் கைப்பற்றும் என மதிப்பிடப்பட்டது. ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 350 இடங்களும் கிடைத்தன. பாஜக 303 தொகுதிகளில் வெற்றி பெற்றது. காங்கிரஸ் 52 தொகுதிகளில் மட்டுமே வெற்றி கிடைத்தது. இப்படியாக, இந்திய தேர்தல் வரலாற்றில் பலமுறை கருத்துக் கணிப்புகள் மாறியும் இருந்திருக்கிறது.